Total Pageviews

Wednesday, June 28, 2017

கோயிலுக்குச் செல்லும் பொழுது… கோயில் விதிகளை மதிப்போம். இறையருளைப் பெற்று இன்புறுவோம்!

வழிபாட்டு முறைகளில், ஆலயத்தில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்தால்தானே பலன் கிடைக்கும். கோயிலுக்குள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி விவரிக்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கவிதா ஜவகர்.


“நாம் சந்தோஷம் நிறைந்த அமைதியான வாழ்வைப் பெறுவதற்காக, தினந்தோறும் ஆலயத்திற்கு வந்து தெய்வ தரிசனம் பெறுகிறோம். நம்மில் பலர் இறையருளைப் பெறும் ஆர்வத்தில், நம்மையும் அறியாமல் சாஸ்திரங்களின் விதிகளையே மீறவிடுகிறோம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். அவரை வழிபடும்போது இனியாவது சில விதிகளை நாம் பின்பற்றுவோம்.

கோயிலுக்குச் செல்லும் பொழுது…

1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.

5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.

6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.

7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.

8. கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.

கோயிலுக்குள் இருக்கும்பொழுது…

10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

13. சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

14. விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

15. இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

17. கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

18. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

19. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

20. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

21 மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

22. நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

23. நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

24 பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

25. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

28. நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

30. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

31. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது.

32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

33. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.

36. கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.

தரிசனத்திற்கு முன்னும்.. பின்னும்…

37. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
38. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
39. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
40. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.
41. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

கோயிலுக்கு வெளியே…

42. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

43. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு.

44. கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக் கால்களைக் கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்

45. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.

46. அஷ்டமி,நவமி, அமாவாசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

47. கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

48. கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.

49. கோயிலுக்கு வரும்பொழுதும், திரும்பிச் செலும்பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது.

50. கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்”.

கோயில்களில் விதிகளை மதிப்போம். இறையருளைப் பெற்று இன்புறுவோம்!

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...