தேசத்தின் நரம்பு மண்டலமாக சில்லரை வர்த்தகம் உள்ளது. பல தேசங்கள் தங்களது மோசமான நிலையில் இருந்து சில்லரை வர்த்தகத்தினால் மீண்டுள்ளன. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகம் என்பது இரண்டு சதவிகிதம்தான் உள்ளது. பெரும்பகுதி வாய்ப்புகள் இன்னும் பயன்படுத்தப்படாத துறை அது. அமெரிக்காவின் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக சந்தை 80 சதவிகிதம் ஆகும். தாய்லாந்தில் 40. சீனாவில் 20 சதவிகிதம். இப்படி இருக்கும் நிலையில் ஏன் இப்போது அந்நிய முதலீட்டு எதிராக எதிர்ப்பு எழுந்துள்ளது? இந்த எதிர்ப்பு மிகவும் தாமதமானதும்கூட. எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டு சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அனுமதிக்காமல் ஏன் இருக்கவேண்டும்? முன்னாள் வந்த எல்லா அரசுகளும் அனைத்து துறைகளிலும் இந்திய நிறுவனங்களை போட்டித்திறன் வாய்ந்ததாக உருவாக்குவதற்கு முன்பாகவே அந்நிய முதலீடை அனுமதித்துவிட்டன. இதன்மூலம் இந்திய திறனையே நாம் அமைப்புரீதியாக சீரழித்துவிட்டோம். சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அந்நிய முதலீடு நுழைவதற்கு இப்போது நாம் கூச்சல் போடுகிறோம். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அவசியமானது. அதனால் பயனே இல்லை என்று சொல்லமுடியாது.
சரியானபடி இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகள் பலன்பெறுவார்கள். உற்பத்தியாளர்கள் பலன்பெறுவதோடு, பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசு வருவாயும் அதிகரிக்கும். பொருட்களை சேமித்து வைப்பதிலும் விநியோகிப்பதிலும் உள்ள பிரச்னைகளும் சீராகும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக சந்தை மூலம் 2020ல் 260 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 35 முதல் 45 பில்லியன் டாலர் வருவாயும், நேரடியாக மூன்று முதல் நான்கு பில்லியன் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மறைமுகமாக 4 முதல் 6 பில்லியன் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். சிறு நடுத்தர வர்த்தகர்களும் பயன்பெறுவார்கள். உற்பத்தி தர மேம்பாடு, உற்பத்தி திறன் நிச்சயமான விநியோகம், உடனடியாக வசூல் மற்றும் நல்ல தரம் கிடைக்கும். இத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகமும் மேம்படும். ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 24 சதவிகிதமாக உள்ளது. சில்லரை வர்த்தக துறை விவசாயிகளின் வருவாயையும் அதிகரித்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும். இன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது.
முக்கியமான கேள்வி ஒன்று அந்நிய முதலீடு தொடர்பாக எழுப்பப்படுகிறது. வால்மார்ட் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் இந்திய பிராண்டுகளுக்கு என்ன இடம் இருக்கும் என்பது அது. மக்கள் விரும்பக்கூடிய தரமான பொருட்களை இந்திய உற்பத்தியாளர்கள் உருவாக்கினால் அந்த பொருட்கள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்பதே பதில். அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் கடைகளில் இருக்கும் 60 சதவிகிதம் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானவை என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்திக்கு பிறகு யாரும் தேசிய பெருமிதம் என்பதை இந்தியர்களுக்கு உருவாக்க தவறிவிட்டனர். அவர்கள் இந்தியாவின் கஜானாவை காலி செய்வதிலேயே குறியாக இருந்தனர். ஜப்பானிலோ உள்நாட்டு பணிமனைகளில் பொருட்கள் செய்யப்படுவதைதான் ஊக்குவிக்கின்றனர். இதுதான் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். அமெரிக்க நிறுவனங்களான ஜிஎம் மற்றும் கிரிஸ்லர் நிறுவனங்களை கடனில் இருந்து அமெரிக்கா ஏன் மீட்டது என்றால், அவைகள் அமெரிக்கத்துவத்தை பிரதிபலிப்பவை.
தேசிய பெருமிதம் என்பதற்கு உதாரணமாக தென்கொரியாவைதான் நாம் உடனடியாக குறிப்பிட வேண்டியிருக்கிறது. உலகிலேயே அதிகம் பாராட்டும் நாடும் இதுதான். சீனாவை விட, ஜப்பானைவிட தேசிய பெருமிதத்தில் அது உயர்ந்த நிலையில் இருக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஒரு துளி போல அந்த தேசம் இருக்கிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் தேசிய பெருமிதத்துடன் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் அவர்கள். தென்கொரியாவில் உள்ள பள்ளிகளில் உள்ளூர் பிராண்ட் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் அன அறிவுறுத்தப்படுகிறது. இப்பொருட்கள் மீதான விமர்சனம் தேசத்தின் மீதான விமர்சனமாக அணுகப்படுகிறது. உலக அளவில் நோக்கியோ மற்றும் பிளாக்பெரி ஆகிய பிராண்டுகள் புகழ்பெற்றிருந்தாலும், தென்கொரியாவில் அவர்களது பிராண்டான சாம்சங்கே 48 சதவிகிதம் சந்தை பகிர்வுடன் முதலிடம் வகிக்கிறது. கூகுள் 20 சதவிகிதமே அங்கு வகிக்கிறது. தென்கொரியாவில் உள்ளூர் தேடுதல் எந்திரங்களான நாவர் மற்றும் டௌவும் ஆகியவைதான் 90 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆட்டோமொபைல் தொழிலை பொறுத்தவரையில் கியா அல்லது ஹுண்டாய் போன்றவையே முதலிடம் வகிக்கின்றன. சியோலின் சாலைகளில் அமெரிக்க, ஜப்பானிய கார்களை பார்ப்பதே அரிது. அத்துடன் தென்கொரியாவில் செய்யப்பட்ட கார்கள் பார்ப்பதற்கு பிரமாதமானவை, செயல்படுவதில் திறன்மிக்கவை. அரசின் கொள்கைகளும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஆதரவாகவும் உள்ளன. அருமையான தொழில் போட்டி சூழலையும் உருவாக்கியுள்ளன.
தேசிய பெருமிதத்தை தாண்டி வால்மார்ட் கொரியாவில் ஏன் தோற்றதென்றால், கொரியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கை தரமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். மலிவான பொருட்களை வாங்க கூடாது என்று எண்ணுகிறார்கள். இருப்பினும் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் பிராண்டுகள் கொரியாவில் எந்த முத்திரையையும் பதிக்கமுடியவில்லை. ஏனெனில் கொரிய நிறுவனங்கள் தர அளவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளன. இந்தியாவின் சிறிய மாநிலத்தின் அளவே இருக்கும் கொரியா உள்நாட்டிலும் உலக அளவிலும், உலகின் சிறந்த பிராண்ட் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாய் உள்ளது. கடந்த மாதத்தில்தான் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சாங் உச்சத்தை அடைந்து ஆப்பிளை பின்தள்ளியது. கொரிய நிறுவனங்கள் உலகதரம்வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு காரணம் அந்த நாட்டின் மக்களிடையே இருக்கும் அபரிமிதமான தேசிய பெருமிதம்தான். அத்துடன் அவர்களது கடின உழைப்பும் உதவுகிறது. ஆனால் அந்த வாய்ப்பை இந்தியர்களான நாம் இழந்துவிட்டோம். சிறிய நாடான கொரியாவால் இந்த வெற்றியை பெறமுடியும்போது, 10 மடங்கு பெரிய இந்தியாவால் ஏன் பெறமுடியவில்லை? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டை விவாதிப்பதற்கு முன்னால் கொரியர்களை போல தேசிய பெருமிதத்தை ஏற்படுத்தி தரமான இந்திய பொருட்களையே வாங்கும் மனநிலைக்கு வருவோம். உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலகின் உயர்ந்த பிராண்டுகளில் நமக்கு எந்த இடமும் இல்லை. இது வெட்ககரமானது.இப்போது ஒன்றும் தாமதம் ஆகவில்லை. நமது பாரம்பரிய உற்பத்தியாளர்களை ஊக்குவித்து மேம்படுத்துவோம். அவர்களை ஆதரிப்போம். நமது பொருட்களை தரமாக உருவாக்கி தேசிய பெருமிதத்துடன் வால்மார்ட்டுகளை இங்கே தோற்கடிக்கலாம். வெறுமனே கோஷங்கள் போட்டு நாட்டை ஏமாற்றுவதற்காக காத்திருப்பது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மக்கள் இதையெல்லாம் அதிகமாக பார்த்துவிட்டனர். கடின உழைப்பும், நேர்மையும் கொண்டு இந்திய பொருட்களை உலக தரத்துக்கு தயாரித்து, தேசபக்தியின் இன்னொரு பக்கத்தை திருப்புவோம். அவற்றை வாங்குவதின் மூலம் இந்தியனை பெருமை கொள்ள செய்வோம். அதை நீங்கள் செய்யமுடியாவிட்டால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வருவதை பற்றி புகார் செய்யாமல் இருங்கள்.
நன்றி: அரிந்தம் சவுத்ரி