நடைமுறை நாகரீகம் என்பது பொது இடங்களிலும் விருந்தினர்களிடமும் பிறர் முன்னிலையிலும் நாம் நடந்து கொள்ளும் முறையாகும். நடைமுறை நாகரீகம் தெரியாமல் நாம் ஏடாகூடமாக நடந்து அசடு வழிவதைத் தவிர்க்க ஒரு சில யோசனைகளை தெரிந்து கொள்வோம்.
மற்றவர்கள் முன் பொது இடத்தில் உரக்கப் பேசுவது, நாகரீகம் அல்ல. மற்றவர் பார்வை நம் மேல் பதியும்படி உரக்கச்சிரிப்பதும் நல்லதல்ல.
நமக்குத் தெரிந்ததையே பேசிக்கொண்டு, மற்றவர்களின் வாயை அடைக்க நினைப்பதும், நமது பிரச்சினைகளையே சொல்லிச் சொல்லி புலம்புவதும் பிறருக்கு விருப்பமில்லாத ஆர்வமில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.
விருந்தினர் முன்னிலையில் நாம் இரகசியம் பேசுவதைப்போல் வீட்டாரோடு காதோடு காதாக பேசுவது தவறு.... அப்படி மிகவும் முக்கியமாக பேச வேண்டியது இருந்தால் தனியே போய் பேசுவதே நலம்.
நாம் விருந்தினராக செல்லும் இடத்தில் நமது வீட்டையும், அவர்கள் வீட்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதல்ல. அதிலும், ‘எங்கள் வீடு உசந்தது’ என்ற ரீதியில் பேசுவது அநாகரீகம்.
பொது இடத்தில் பல் குத்துவது, காது குடைவது, குறும்பு செய்வது தவறானது.
தும்மல் வந்தால் முகத்தைத் திருப்பி தும்முதல் நலம். பொது இடத்தில் நடைபெறும் விருந்துகளில் அரக்க பரக்க உண்ணக்கூடாது. நிதானமாய், சத்தம் வராமல் நாகரீகமாய் சாப்பிட வேண்டும்.
தண்ணீர், குளிர்பானங்களை “மடக் மடக்” என ஒலி வரும் வகையில் குடிக்கக்கூடாது. பெண்கள் அதிக நகை அணியாமல் வெளியில் வருவது நல்லது. தூய்மையாக உடை அணிவதும் எளிய அலங்காரமும் போதும். இவை மற்றவர்களின் முன்னிலையில் உங்கள் மதிப்பை உயர்த்தும்.
No comments:
Post a Comment