Total Pageviews

Friday, March 4, 2016

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர் !

மயிலாடுதுறையில் ஒரு மனித நேய டாக்டர்!

81 வயதான ஒரு டாக்டர், அவர் பார்க்கும் சிகிச்சைக்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை. போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் 'நன்றி' என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இந்தக்காலத்தில் இப்படி ஒரு டாக்டரா? யார் அவர்?என்ற கேள்விக்கு விடையாக நிற்பவர்தான் டாக்டர் வி.ராமூர்த்தி.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள டாக்டர் ராமமூர்த்தி கிளினிக்கில்தான் இந்த அதிசயம் கடந்த 57 ஆண்டுகளமாக நடந்தேறிவருகிறது.

ஏழை விவசாய குடும்ப பின்னனியில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் கஷ்டம் என்ன என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆகவே மருத்துவத்திற்காக அதிகம் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆரம்பகாலத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தார். அது கூட இவர் கைநீட்டி எப்போதுமே வாங்குவது இல்லை. போகும் போது மேஜை மீது வைத்துவிட்டு போய்விடுவர். அதுதான் இன்று ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.

ஒரு வேளை சாப்பாடு , இரவு 2 இட்லி இதற்கு இந்த 5 ரூபாயே அதிகம் ஆகவே கிராமத்தில் இருந்து வருபவர்கள் பலருக்கு பஸ், சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து அனுப்புவதும் உண்டு.

57ஆண்டுகால அனுபவம் காரணமாக ஒரு நோயாளியிடம் 5 நிமிடம் பேசிய உடனேயே நோயாளியின் பிரச்னையை தெரிந்து கொள்வார் 2 நாளைக்கு மட்டுமே மாத்திரைகள் எழுதிக்கொடுப்பார். 90 சதவீதம் ஊசி போடுவது கிடையாது. அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளும் விலை மிகக்குறைவாகும். இரண்டு நாளைக்கு வாங்கினாலும் இருபது ரூபாய்தான் பில் வரும். மாத்திரை சாம்பிள்கள் இருந்தால் அதையும் இலவசமாக தந்துவிடுவார். நம்மால் முடியாது, பிரச்னை தீவீரமாக இருக்கிறது என்றால் மட்டும் எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டிவிடுவார்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை இடைவிடாமல் நோயாளிகளை கவனித்துவந்தவர், இப்போது மதியம் இடைவௌிவிட்டு பார்க்கிறார். தொழில் பொழுது போக்கு எல்லாமே இவருக்கு மருத்துவம்தான். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மருத்துவர்கள் விடுமுறையில் இருப்பதால் அன்று அவசியம் இவர் கிளினிக்கில் இருப்பார்.

மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் யாருக்கு என்ன உடல் பிரச்னை என்றாலும் முதலில் செல்வது ராமமூர்த்தியிடம்தான். இதனால் அவரை தெரியாதவர்கள் யாரும் கிடையாது, அவருக்கு தெரியாதவர்களும் யாரும் கிடையாது.

''எளிமையின் உறைவிடமான காமராஜரே என் எளிமையைப் பார்த்து பாராட்டிவிட்டு சென்றார் அதைவிட பெரிய பாராட்டு பதக்கம் எதுவும் தேவையில்லை. இன்னும் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் என்னைத்தேடிவரும் ஏழை மக்களுக்காக இரங்குவேன்... இயங்குவேன்.''.

வாழ்த்துக்கள் ஐயா

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...