Total Pageviews

Friday, January 7, 2022

நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்

 

 
 
நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது. 
 
அந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா!!!
 
ஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.
 

ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும்
 
ஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.
 
ஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.
 
முக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
இவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.
 
அன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.
 
நல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.
 
இருவருக்கிடடையில் உள்ள தப்பான கருத்துகளை போக்கி கொள்ள, ஒருவரை ஓருவர் நன்றாக புரிந்து கொள்ள, ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும். ஆரோக்கியமான விவாதம் நல்ல உறவின் அடையாளம் ஆகும்.
 
அன்புக்குரியவர் சோர்ந்து இருக்கும் போது, எப்போதும் உங்களது ஆதரவை தான் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அதனை தவிர்க்காமல் ஆதரவு அளிக்க வேண்டும். வாழ்வில் அவர்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் ஆதரவு அளிக்க வேண்டும்.
 
அனைத்து உறவுகளிலும் சந்தேகப்படுவதற்குரிய நிலை வரும். அதனை களைந்து, சந்தேகத்தை போக்கி, அன்பு கொண்டவர் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கியமாக அதற்கு ஏற்ற நேரம் மற்றும் இடைவெளி கொடுக்க வேண்டும்.
 
மாற்றம் ஒன்று தான் மாறாதது. ஆகவே உங்கள் துணையிடம் மாற்றங்கள் தென்பட்டால், அதை எதிர்க்காமல் அதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
 
கருத்து வேறுபாடுகள் எந்த ஒரு உறவிலும் ஏற்படக்கூடியது தான். மேலும் உறவின் வலிமையை சோதிக்க வந்த சோதனைகள் என்று கூட சொல்லலாம். அம்மாதிரியான கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்து கொள்வது மிக அவசியம்.
 
நல்ல உறவு என்பது புதிதாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்ப்பதில் அடங்கி இருக்கிறது. ஆகவே திறந்த மனதுடன் துணையை பற்றி புதிது புதிதாக தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
 

 

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...