Total Pageviews

Friday, January 12, 2024

விதம் விதமாய்க் கற்பனையை வீணாகச் சுமந்து கொண்டு பிறந்த ஊரைப் பார்க்க நீ புறப்படாதே என் மகனே!

 தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்,

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்,

விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!

அப்படியெல்லாம் இங்கே
அற்புதங்கள் நடப்பதில்லை
பற்பல ஆண்டுகளாய்ப்
பால் பானைப் பொங்கவில்லை!

உன்னை நான் கருத்தரித்தேன்
உயிர்ச் செண்டாய்ப் பெற்றெடுத்தேன்
ஓராயிரங் கதை சொல்லி
உரமூட்டி வளர்த்தெடுத்தேன்!

படி படி என்றுன்னைப்
படுத்திப் படிக்க வைத்தேன்–என்
உழைப்பையெல்லாம் உடையாக்கி
உடுத்தியுன்னை உலவ வைத்தேன்!
நீ வாழ்ந்தால் போதுமென்று
நான் வாழத் தவறிவிட்டேன்–உன்
அப்பனுக்கும் கூடுதலாய்
அரை அடி உயர வைத்தேன்!

பட்டணத்தில் வாழ்வதுதான்
பெருமையென மனந்திரிந்து
பாவி நான்தான் உன்னைப்
பேருந்தில் ஏற்றிவிட்டேன்!

உன்னோடு படித்தவர்கள்
ஊரிலே யாருமில்லை
அப்பன் அழியும் ஊரில்
அவன் பிள்ளை இருப்பதில்லை!

கெட்டுப் பட்டணம் போய்ச்
சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர்?
பட்டணம் போய்ச் சேர்ந்த பின்னர்
கெட்டவர்கள் எத்தனைப் பேர்?

வயல் வேலை செய்து இங்கே
வாழவே முடியாதென்று
அயல் வேலை செய்வதற்கு
அவனவன் பறந்து விட்டான்!

வெறிச்சோடிப் போய் விட்ட
வேளாண்மைக் கிராமத்தில்
பால் பொங்கல் பொங்குமெனப்
பகற்கனவு காணாதே!

ஒப்புக்குத் தான் இது
ஊர் போலத் தெரிகிறது
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
உயிர்க் குமுறல் கேட்கிறது!

வேளாண்குடி மக்களது
வாழ்வறமும் வீரியமும்
பாலைவனம் போலாகிப்
பாழ்பட்டுப் போனதனால்,
ஊருக்குள் ஆங்காங்கே
உயிரொன்று பிரிகிறது!

என்றைக்கோ மூட்டிய
இடுகாட்டுப் பெருநெருப்பு
இன்றைக்கும் கூட
அணையாமல் எரிகிறது!

நெடுநாள் உறவாக
நிலைத்திருந்த விளை நிலங்கள்
வேளாண்மை கசந்து
விற்றுவிட்ட காரணத்தால்
கம்பிவேலிக் காரனுக்குக்
கைமாறிப் போனதடா!

நான்கு தலைமுறையாய்
நமதாக இருந்த நிலம்
பத்திரக் காகிதத்தில்
பெயர் மாறி போனதனால்
பதறிய உன் அப்பன்
பைத்தியமாகிச் செத்தான்!

விரால் மீன் ஏரியென்றும்
வெளிச்சக் கெண்டைக் குளமென்றும்,

குரவை மீன் குட்டையென்றும்
குள்ளக் கெண்டைக் கால்வாயென்றும்,

அயிரை மீன் தாங்கல் என்றும்
ஆரா மீன் சதுப்பு என்றும்,
உளுவையும், நெத்திலியும்
ஊர்ந்து வரும் ஒடையென்றும்,

வாளையும், விலாங்கு மீனும்
வளருகின்ற கண்மாயென்றும்,

அறுபத்தொரு பெயர்களிலே
அமைந்திருந்த நீர் நிலைகள்
அத்தனையும் இன்றைக்கு
அழிந்தொழிந்து போனதனால்,

பாடையிலே வருவதுபோல்
கூடையிலே வருகின்ற
குளிர்ந்துறைந்த கடல்மீனைக்
குழம்பு வைத்துத் திண்கின்றோம்!

ஓடையிலே ஓடிவரும்
உயிர்மீனைப் பறிகொடுத்துக்
கூடை மீன் தேடி நாங்கள்
குறுகிப் போனோமடா!

நீர் நிலைகள் நிரம்பி
நெகிழ்ச்சி தரும் காட்சியாகி
கடை மடையான் வயல்களுக்கும்
கால்வாய் நீர் பாய்கையிலே
எத்தனையோ சுகம் கண்டோம்
எவ்வளவோ விளைய வைத்தோம்!

ஒரேயொரு கால்வாயில்
ஊர்வலம் வரும் நீரில்
ஆங்காங்கே நெற்பயிர்கள்
அன்னையின் பால் குடிக்கும்!

பாம்புக்குத் தவளைகளைப்
பரிசளிக்கும் கால்வாய் நீர்,
எங்களுக்கான மீனை
எங்கெங்கோ ஒளித்து வைக்கும்!

வாய்க்காலின் வரப்புகளில்
வளருகின்ற மரங்களெல்லாம்
கூடுதலாய்ப் பூப்பூத்துக்
கொத்துக் கொத்தாய்ப் பழங்கொடுக்கும்!

வழிநெடுக எம் பெண்கள்
வளை சிணுங்கக் குளிப்பார்கள்,
குளித்து முடித்த பின்னர்
கூந்தலைத் துவட்டிக் கொண்டே
கூடுதலாய்க் குளிர்வதாகக்
கண்சிமிட்டிச் சிரிப்பார்கள்!

மாடுகளும் ஆடுகளும்
மண்டியிட்டு நீர் குடிக்க,
முந்தானை கொண்டே பெண்கள்
மீன் பிடித்துச் சேகரிக்க,

மேட்டு நிலத்துக்காரன்
கொண்டம் கட்டி நீர் தேக்க–அவன்
கால்வாயின் இருபுறமும்‘
காய்கறிகள் விளைந்திருக்க,

வாத்துகளின் கூட்டம்
வரும்நீரை வழிமறித்துப்
பெருங் கூச்சலிட்டுப்
படபடத்து நீர்த் தெளிக்க,

ஒரேயொரு கால்வாயில்
ஒரு நூறு பயன் கண்டு
ஈரமும் நீருமாக,
எங்களது நிலம் மணக்க,
உயிர்கள் அனைத்துக்கும்
உரியது நீர் என்றும்
எல்லோரும் எல்லாமும்
ஏற்பதுதான் வாழ்வென்றும்,

சிந்தித்த நாங்கள் இன்று
சீர்குலைந்து நீர் மறந்து
சொட்டு நீர்ப் பாசனத்தில்
செடி கொடியை வளர்க்கின்றோம்!
ஆற்று நீர்ப் பாசனம்
அருகி மறைந்து வர,
ஏரி நீர்ப் பாசனம்
இனி இல்லை என்றாக,
கண்மாய்ப் பாசனமோ
காணாமற் போய் மறைய,
எந்தப் பாசனத்தால்
எம் பயிரின் உயிர்காப்போம்?
எந்த நீரைக் கொண்டு
எம் உயிரைத் தக்கவைப்போம்?
சொட்டுச் சொட்டாய் வடிகின்ற
சொட்டு நீர்ப் பாசனமும்,
குடம் குடமாய் இரைக்கின்ற
கிணற்று நீர்ப் பாசனமும்,
பயிர் செய்ய ஏதுவான
பாசன முறை என்றால்,

பொதுவான ஏரி நீரைப்
பகிர்ந்து பயிர்செய்த
ஏரிப் பாசனத்தார்
எங்கேதான் போவார்கள்?

எங்களது நீர் நிலையின்
இடுப்பொடித்துக் காயவிட்டு
இஸ்ரேலைப் பார் என்று
எங்களுக்குச் சொல்கிறார்கள்!

நீர் தேடிப் பறந்து வரும்
நெடுந்தூரப் பறவைகளும்,
நீந்தித் துள்ளியெழும்
நூறுவகை மீனினமும்,
ஏரி நீரில் அமிழ்ந்து
இறுமாந்து கிடந்தெழுந்து
எங்களுக்குப் பால் சுரக்கும்
எருமைக் கூட்டங்களும்
எங்கேயேடா போகும்?
இஸ்ரேல் பிரியர்களே!

நூறடி ஆழத்தில்
நீரை உறிஞ்சுகின்ற
மோட்டாருக்குக் கூட
மூச்சிரைக்கும் நிலை கண்டு
வெட்கித் தலைக் குனிந்து
வேண்டாமென விட்டுவிட்டோம்!

மெல்லிய தோல் அணிந்து
மின்னி மனங்கவரும்
எங்களூர்த் தக்காளியை
எங்கோ மறையவிட்டு
பெங்களூர்த் தக்காளிக்குப்
பழக்கப் பட்டுப் போனோமடா!

போன் செய்தால் வீட்டுக்குப்
புண்ணாக்கு வருமென்று
பெருமையாய்ப் பேசிப்
பணத்தைத் தொலைப்பவனே
கேழ்வரகுக் களியுனக்குக்
கசக்கிறதே ஏனப்பா?

ஓர் ஆண்டுக் கால
உழைப்பிலே உயிர்பெற்று
உலக்கை உலக்கையாக
உற்பத்தியாகுமெங்கள்
ஒரு டன் கரும்பு இங்கே
இரண்டாயிரத் தைந்நூறு!

மூன்று மணி நேரத்துக்கு
மூன்றாயிரங் கொடுத்து
புதுப்படம் ஒன்றை அங்கே
பார்த்தவர்கள் பல நூறு!

இருவேறு உலகத்து
இயற்கையிது என்றாலும்
அருவருப்பாய் இருக்குதடா– உங்கள்
ஆடம்பரக் கலாசாரம்!

ஒரு கரண்டி மாவெடுத்து
ஒரு தோசை சுட்டு வைத்து
எழுபது எண்பது என்று
ஈட்டுகின்ற திறமையற்று,

மூட்டை மூட்டையாய் நெல்லை
மோசடி விலைக்குப்போடும்
விவரமே தெரியாத
விவசாயிகளப்பா நாங்கள்!
அரிசி மூட்டைக்காரன் அங்கே
அவன் விலைக்கு அவன் விற்பான்–இங்கே
நெல் மூட்டைக் காரனுக்கோ
எவன் எவனோ விலை விதிப்பான்!

யார் யாரோ ஆண்டார்கள்
எங்களுக்கு விடியவில்லை,
எங்களை நிமிர வைக்க
எழுபதாண்டு போதவில்லை!

எங்களது மாண்புகள்
எல்லாவற்றையும் இழந்து
கிழிந்தும் இழிந்தும் இங்கே
கிடக்கிறோமடா நாங்கள்!

தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்
விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!
பெற்றவளையேனும் பார்க்கப்
புறப்பட்டு வருவாயெனில்
வா இங்கு வந்து சேர்!
வந்துவிட்டால் போகாதே!
உன்னோடு படித்தவரை
ஊருக்கு அழைத்துவந்து,
ஒன்றிக் கலந்துவிடு
உன்னுடைய ஊரோடு!
உருக்குலையும் எம் வாழ்வை
உயிர்ப்பிக்கப் போராடு!

யாரோ எழுதிய கவிதை ...

No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...