Total Pageviews

Friday, May 20, 2022

வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம்!

 

வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம், நாம் கற்றுக்கொள்ளாததையும் பெற்றுக் கொடுக்கும். அனுபவம், முதிர்ச்சியின் அடையாளம்.



கருவறை முதல் கல்லறை வரை அனுபவத்தின் ஆளுமை தொடர்கிறது.

தேவையற்றதைத் தேவையில்லாத நேரத்தில் வாங்கினால், தேவையானதை விற்க வேண்டிவரும் என்று கற்றுத்தரும் ஆசான் அனுபவமே. பேசவேண்டிய நேரத்தில் எங்கு எதை எப்படிப்பேச வேண்டும் என்று உள்ளத்திற்கு உணர்த்தும் உள்ளுணர்வு அனுபவமே.


கடலில் கலங்கித் தவிப்பவனுக்குக் கலங்கரை விளக்குக் கரையில் நின்று எவ்வாறு வழிகாட்டுமோ, அதைப்போலப் பிறவிப் பெருங்கடலில் கரைசேர, அனுபவம் நமக்கு வழிகாட்டுகிறது.

 நம்மை அழகுபடுத்தும் அழகான உடை அனுபவமே. அனுபவம் வீண்பழி நீக்க நமக்கு வழிகாட்டுகிறது. பல்கலைக் கழகங்களில் கூடப்படிக்க முடியாத படிப்பை, ஆசிரியராய் அமர்ந்து ஆற அமரக் கற்றுத் தருகிறது. வாழ்க்கை எனும்பட்டறையில் நாம் பட்ட அடிகளே அனுபவமாய் நின்று நம்மைப் பக்குவப்படுத்துகின்றன.


நாம் வருந்துமளவு, வாழ்வு ஒன்றும் வாள் வீசிநம்மைச் சேதப்படுத்திவிடவில்லை. பக்குவமும் வயது முதிர்ச்சியும் சகமனிதர்களைப் புரிந்து கொள்ள வைக்கிறது. குயில் இட்ட முட்டையைத் தன் முட்டையாய் கருதி அடைகாக்கும் அப்பாவிக் காகமாக, போலிகளைப் போற்றிக்கொண்டு உண்மையை உணராமல் நாம் பல நேரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேரில் ஊற்றிய நீரை, உச்சியில் இனிமையான இளநீராகத் தரும் தென்னை மரம் மாதிரி சிலர் எப்போதும் உயர்ந்த செயல்களைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
செருப்பாய் உழைத்தாலும் சிலர் சரியான நேரத்தில் கழட்டி விட்டுப் போய்விடுவார்கள்.

 

 இத்தனை வயதான பின்னரும் கூட உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரை அடையாளம் காணும் அனுபவம் வரவில்லையே என்று வருந்துவோரும் நம்முடன் உண்டு. இன்னல் வந்து நம் வீட்டுச் ஜன்னலில் எட்டிப்பார்த்தாலும், அனுபவம் ஆற்றலாய் நின்று நம்பிக்கைகொடுக்கும். எதை இழந்தாலென்ன நம்பிக்கையை நாம்இழக்கவில்லையே! எது நடந்தாலும் நாம் கலங்கத் தேவையில்லை என்ற உண்மையை உரக்கச் சொல்வது அனுபவம் தான். சந்தேகம் சாய்த்து விடும்
வீட்டைப் பூட்டி விட்டு வீதிக்கு வந்தபின்னும் ஒழுங்காகப் பூட்டி விட்டோமா என்று இன்னொரு முறை சென்று இழுத்துப் பார்ப்போர் நிம்மதி இழக்கிறார்கள். சந்தேகம் நம் தேகத்தைப் புண்ணாக்கும். அனுபவத்தின் ஆற்றல் அதிகமாகிவிட்டால் சந்தேகம் வந்த வழியோடும். கோடைகாலத்துக் கானல் நீர் தாகம் தீர்க்குமெனக் கருதி நம் கால்கள் அதை நோக்கி நடந்து, ஏராளமான ஏமாற்றங்களைச் சந்தித்துவிட்டன.

 
பதினோருவகை நடனங்களைக் கற்றுத்தேர்ந்த மாதவி இயல்பாய் பாடிய பாடலைத் தவறாகப் புரிந்துகொண்ட கோவலன், அவள்மீது ஊடல்கொண்டு அவளை விட்டுப் பிரிகிறான். யாரோ யாருக்கோ சொன்னதை நம்மை நோக்கி நமக்கே சொன்னதாகத் தவறாகக் கருதி, அற்புதமான உறவுகளையும், அற்புதமான அழகு வாழ்வையும் நரகமாக்கிக் கொண்டிருப்போர் எத்தனைப்பேர்!


மார்கோனி வானொலியைக் கண்டறியும் முன்பே பாரதியார், ”காசி நகர்ப்புலவன் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற் கோர் கருவி செய்வோம்” என்று பாடியதுஅனுபவ முதிர்ச்சிதான்.

அனுபவம்தரும் ஆன்மஞானம் இருளில் இருந்த உலகைத் தன் கண்டுபிடிப்பால் வெளிச்சத்தைத்தந்து ஒளியில் ஆழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன், பலநுாறு முறை முயன்று தோற்று மனம் தளராமல் மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.


அவரைப் பொறுத்தவரை அந்த தோல்வியின் தோள்களில் ஏறியே, எட்டாக் கனியாய் இருந்த வெற்றியின் கிளைகளை அவர் தளராமல் எட்டிப்பிடித்தார். 99 சதவீத உழைப்பு; ஒரு சதவீத அறிவு இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம்
என்று எடிசன் தன் வெற்றி அனுபவத்தின் ரகசியத்தை அடக்கத்தோடு சொன்னார். மூத்தோர்சொல்லை மதிப்போம் மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும்.

முதியவர்கள் எப்போதும் அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார்கள் என்று ஒதுங்குதலும் அவர்களின் நல்லனுபவங்களையும் புறக்கணிப்பதும் சரியான செயலன்று.


எனவே தங்கள் அனுபவங்களை யார் நமக்குத் தந்தாலும் மறுப்பின்றி ஏற்போம். மணிக்கட்டுகளில் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு தவறான நேரத்தைச் சொல்வோருக்கு மத்தியில், வயற்காட்டில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்து சூரியனின் இருப்பைப் பார்த்து, மணி சொல்லும் விவசாயிகள் அனுபவம் எவ்வளவு உயர்வானது? எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் ஆழாக்கு, உழக்கு, கலம், நெய்க்கரண்டி, எண்ணெய்க்கரண்டி, பாலாடை, அவுன்ஸ் என்று முகத்தல் அளவையைக் கூறி, மனக் கணக்கில் அபாக்கஸ் அறிஞர்களைத் தாண்டுமளவு ஆற்றல் பெற்றிருந்தார்களே எப்படி? அனுபவம் எனும் படியில் ஏறிதானே!


ஏட்டுக்கல்வியைப் பல நேரங்களில் அனுபவக் கல்வி விஞ்சியிருக்கிறது.அனுபவம் எளிமையாகத் தானிருக்கும்;ஆனால் வலுவான சேதங்களிலிருந்து நம்மைக் காக்கிறது. திருவள்ளுவரின் தனிமனித அனுபவம் திருக்குறளாய் மாறும் போது, உலக அனுபவமாய் மாற்றுரு பெற்று உலகப் பொதுமறையாய் செம்மாந்து நிற்கிறது.


மகாத்மா காந்தியின் சத்திய சோதனை அனுபவங்கள், படிப்போருக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கின்றன. 'நான் யார்?' என்ற கேள்விக்கு தவத்தால் விடை கண்டறிந்த பகவான் ரமண மகரிஷியின் ஆன்ம நேயம் நம்மை மறுமை வாழ்வு குறித்து சிந்திக்க வைக்கிறது.


ஆயிரம் ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க முடியாத பாடத்தை ஒரு நாளில் நாம் பெறும் அனுபவம் கற்றுத் தந்து விடுகிறது. தோல்விகளில் நாம் பெறும் அனுபவப் படிப்பினைகளே, வெற்றியை நோக்கிய நம் பயணத்தை விரைவுபடுத்துகின்றன.


வெற்றியில் பெற்றதை விட, தோல்வியில் கற்றது கல்லில் செதுக்கிய எழுத்தாய் நமக்குள் ஆழப்பதிகிறது. எனவே அனுபவ ஆசானிடம் அனுதினமும் பாடம் படிப்போம்.

Monday, May 16, 2022

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன் ?

 


தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. இதில் சிலருக்கு ஒற்றை விளக்கு ஏற்றலாமா? அல்லது இரட்டை விளக்கு ஏற்றுவது தான் விசேஷமா? என்று சந்தேகம் இருக்கலாம்.

பொதுவாகவே, நம்மால் முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பைத் தரும். எனினும் எத்தனை விளக்கு ஏற்றுகிறோம் என்பதை விட விளக்கின் முகங்கள் எத்தனை என்பதைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும்.

ஒரு முகம் - சாந்தமான மன நிலையை தரும்.

இரண்டு முகம் - குடும்பத்தில் துயரங்கள் நீங்கும், செல்வம் தரும், சமூகத்தில் மதிப்பு - மரியாதை கூடும்.

மூன்று முகம் - செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும், வெற்றி கிடைக்கும், மனதில் நம்பிக்கை கூடும்.

நான்கு முகம்- சொத்து சுகங்கள் சேரும், ஆரோக்கியம் மேன்மை அடையும்.

ஐந்து முகம் - குறைவு இல்லாத நல் வாழ்க்கை தரும்.

இவை தவிர, வாரம் ஒரு நாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது சாலச் சிறந்தது. எனினும், அதே சமயத்தில்... விளக்கு ஏற்றுவதற்கு என்று சில சம்பிரதாயங்கள் உண்டு. அதையும் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்...

1.
வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் பெண்கள் ஏற்றுவது சிறப்பு.

2.
ஒருவேளை, தீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

3.
தீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், உடன் பூ சாற்றி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.

4.
தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். இது கூடுதல் பலனைத் தர வல்லது.

5.
விளக்கை மலை ஏற்றும் சமயத்தில் அதில் உள்ள தீயை வாயால் ஊதி அணைக்கக்கூடாது... மாறாக மலர்களை கொண்டு அணைக்கலாம் என்பது எல்லோரும் அறிந்த பொது விதி. அதே போல, விளக்கை பந்தம் போல புகை வரும் படியாக எரிக்கக் கூடாது. அது பாவம்.

6.
கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது இன்னொரு மகா பாவம். இதனால் வீடு தொடைத்துப் போகும், வம்ச விருத்தி இருக்காது என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

இவை தவிர, தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.


இதுதவிர, விளக்கில் இடும் திரிகளுக்கும் கூட பலன் உண்டு...

1.
சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும்.

2.
திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், அதிக கடன் கொண்டவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம்.

3.
வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும்.

4.
மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும்.

5.
குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபடலாம்.

6.
தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலத்தை உண்டாக்கும். இது அதிர்ஷ்டத்தை தரும். இதனால் தரித்திர யோகம் கொண்ட ஜாதகம் கூட ராஜ யோகமாக மாறிவிடும்.

7.
வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.


வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...