Total Pageviews

Friday, May 20, 2022

வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம்!

 

வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம், நாம் கற்றுக்கொள்ளாததையும் பெற்றுக் கொடுக்கும். அனுபவம், முதிர்ச்சியின் அடையாளம்.



கருவறை முதல் கல்லறை வரை அனுபவத்தின் ஆளுமை தொடர்கிறது.

தேவையற்றதைத் தேவையில்லாத நேரத்தில் வாங்கினால், தேவையானதை விற்க வேண்டிவரும் என்று கற்றுத்தரும் ஆசான் அனுபவமே. பேசவேண்டிய நேரத்தில் எங்கு எதை எப்படிப்பேச வேண்டும் என்று உள்ளத்திற்கு உணர்த்தும் உள்ளுணர்வு அனுபவமே.


கடலில் கலங்கித் தவிப்பவனுக்குக் கலங்கரை விளக்குக் கரையில் நின்று எவ்வாறு வழிகாட்டுமோ, அதைப்போலப் பிறவிப் பெருங்கடலில் கரைசேர, அனுபவம் நமக்கு வழிகாட்டுகிறது.

 நம்மை அழகுபடுத்தும் அழகான உடை அனுபவமே. அனுபவம் வீண்பழி நீக்க நமக்கு வழிகாட்டுகிறது. பல்கலைக் கழகங்களில் கூடப்படிக்க முடியாத படிப்பை, ஆசிரியராய் அமர்ந்து ஆற அமரக் கற்றுத் தருகிறது. வாழ்க்கை எனும்பட்டறையில் நாம் பட்ட அடிகளே அனுபவமாய் நின்று நம்மைப் பக்குவப்படுத்துகின்றன.


நாம் வருந்துமளவு, வாழ்வு ஒன்றும் வாள் வீசிநம்மைச் சேதப்படுத்திவிடவில்லை. பக்குவமும் வயது முதிர்ச்சியும் சகமனிதர்களைப் புரிந்து கொள்ள வைக்கிறது. குயில் இட்ட முட்டையைத் தன் முட்டையாய் கருதி அடைகாக்கும் அப்பாவிக் காகமாக, போலிகளைப் போற்றிக்கொண்டு உண்மையை உணராமல் நாம் பல நேரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேரில் ஊற்றிய நீரை, உச்சியில் இனிமையான இளநீராகத் தரும் தென்னை மரம் மாதிரி சிலர் எப்போதும் உயர்ந்த செயல்களைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
செருப்பாய் உழைத்தாலும் சிலர் சரியான நேரத்தில் கழட்டி விட்டுப் போய்விடுவார்கள்.

 

 இத்தனை வயதான பின்னரும் கூட உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரை அடையாளம் காணும் அனுபவம் வரவில்லையே என்று வருந்துவோரும் நம்முடன் உண்டு. இன்னல் வந்து நம் வீட்டுச் ஜன்னலில் எட்டிப்பார்த்தாலும், அனுபவம் ஆற்றலாய் நின்று நம்பிக்கைகொடுக்கும். எதை இழந்தாலென்ன நம்பிக்கையை நாம்இழக்கவில்லையே! எது நடந்தாலும் நாம் கலங்கத் தேவையில்லை என்ற உண்மையை உரக்கச் சொல்வது அனுபவம் தான். சந்தேகம் சாய்த்து விடும்
வீட்டைப் பூட்டி விட்டு வீதிக்கு வந்தபின்னும் ஒழுங்காகப் பூட்டி விட்டோமா என்று இன்னொரு முறை சென்று இழுத்துப் பார்ப்போர் நிம்மதி இழக்கிறார்கள். சந்தேகம் நம் தேகத்தைப் புண்ணாக்கும். அனுபவத்தின் ஆற்றல் அதிகமாகிவிட்டால் சந்தேகம் வந்த வழியோடும். கோடைகாலத்துக் கானல் நீர் தாகம் தீர்க்குமெனக் கருதி நம் கால்கள் அதை நோக்கி நடந்து, ஏராளமான ஏமாற்றங்களைச் சந்தித்துவிட்டன.

 
பதினோருவகை நடனங்களைக் கற்றுத்தேர்ந்த மாதவி இயல்பாய் பாடிய பாடலைத் தவறாகப் புரிந்துகொண்ட கோவலன், அவள்மீது ஊடல்கொண்டு அவளை விட்டுப் பிரிகிறான். யாரோ யாருக்கோ சொன்னதை நம்மை நோக்கி நமக்கே சொன்னதாகத் தவறாகக் கருதி, அற்புதமான உறவுகளையும், அற்புதமான அழகு வாழ்வையும் நரகமாக்கிக் கொண்டிருப்போர் எத்தனைப்பேர்!


மார்கோனி வானொலியைக் கண்டறியும் முன்பே பாரதியார், ”காசி நகர்ப்புலவன் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற் கோர் கருவி செய்வோம்” என்று பாடியதுஅனுபவ முதிர்ச்சிதான்.

அனுபவம்தரும் ஆன்மஞானம் இருளில் இருந்த உலகைத் தன் கண்டுபிடிப்பால் வெளிச்சத்தைத்தந்து ஒளியில் ஆழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன், பலநுாறு முறை முயன்று தோற்று மனம் தளராமல் மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.


அவரைப் பொறுத்தவரை அந்த தோல்வியின் தோள்களில் ஏறியே, எட்டாக் கனியாய் இருந்த வெற்றியின் கிளைகளை அவர் தளராமல் எட்டிப்பிடித்தார். 99 சதவீத உழைப்பு; ஒரு சதவீத அறிவு இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம்
என்று எடிசன் தன் வெற்றி அனுபவத்தின் ரகசியத்தை அடக்கத்தோடு சொன்னார். மூத்தோர்சொல்லை மதிப்போம் மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும்.

முதியவர்கள் எப்போதும் அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார்கள் என்று ஒதுங்குதலும் அவர்களின் நல்லனுபவங்களையும் புறக்கணிப்பதும் சரியான செயலன்று.


எனவே தங்கள் அனுபவங்களை யார் நமக்குத் தந்தாலும் மறுப்பின்றி ஏற்போம். மணிக்கட்டுகளில் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு தவறான நேரத்தைச் சொல்வோருக்கு மத்தியில், வயற்காட்டில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்து சூரியனின் இருப்பைப் பார்த்து, மணி சொல்லும் விவசாயிகள் அனுபவம் எவ்வளவு உயர்வானது? எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் ஆழாக்கு, உழக்கு, கலம், நெய்க்கரண்டி, எண்ணெய்க்கரண்டி, பாலாடை, அவுன்ஸ் என்று முகத்தல் அளவையைக் கூறி, மனக் கணக்கில் அபாக்கஸ் அறிஞர்களைத் தாண்டுமளவு ஆற்றல் பெற்றிருந்தார்களே எப்படி? அனுபவம் எனும் படியில் ஏறிதானே!


ஏட்டுக்கல்வியைப் பல நேரங்களில் அனுபவக் கல்வி விஞ்சியிருக்கிறது.அனுபவம் எளிமையாகத் தானிருக்கும்;ஆனால் வலுவான சேதங்களிலிருந்து நம்மைக் காக்கிறது. திருவள்ளுவரின் தனிமனித அனுபவம் திருக்குறளாய் மாறும் போது, உலக அனுபவமாய் மாற்றுரு பெற்று உலகப் பொதுமறையாய் செம்மாந்து நிற்கிறது.


மகாத்மா காந்தியின் சத்திய சோதனை அனுபவங்கள், படிப்போருக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கின்றன. 'நான் யார்?' என்ற கேள்விக்கு தவத்தால் விடை கண்டறிந்த பகவான் ரமண மகரிஷியின் ஆன்ம நேயம் நம்மை மறுமை வாழ்வு குறித்து சிந்திக்க வைக்கிறது.


ஆயிரம் ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க முடியாத பாடத்தை ஒரு நாளில் நாம் பெறும் அனுபவம் கற்றுத் தந்து விடுகிறது. தோல்விகளில் நாம் பெறும் அனுபவப் படிப்பினைகளே, வெற்றியை நோக்கிய நம் பயணத்தை விரைவுபடுத்துகின்றன.


வெற்றியில் பெற்றதை விட, தோல்வியில் கற்றது கல்லில் செதுக்கிய எழுத்தாய் நமக்குள் ஆழப்பதிகிறது. எனவே அனுபவ ஆசானிடம் அனுதினமும் பாடம் படிப்போம்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...