இன்றைய சமூகத்தில் பெரும்பாலோர் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டே காணப்படுகின்றனர்.
எண்ணங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிரான மணவாழ்க்கைப் பெற்ற மங்கையர்கள், ஆண்கள், முதிர் வயதில் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட பெற்றோர்கள், பாதுகாப்பற்று கைவிடப்பட்ட கைம்பெண்கள், பிள்ளைகள், பெரியவர்கள், செல்வமிழந்து உடல் செயலிழந்து தவிக்கும் வறியவர்கள் என மனசோர்வு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. இத்தகைய மனசோர்வு நோயாளிகளை ஆரம்பகாலத்தில் எளிதில் உணர்ந்து கொள்வது மிகவும் கடினம்.
மனஉணர்வுகள் ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்படாவிட்டால் பல்வேறு விதமான விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும் பெரும்பாலும் இத்தகைய நோயாளிகளிடையே தான் அரங்கேற்றப்படுகின்றன. தான் ஒரு மனச்சோர்வு நோயாளி, இது சரி செய்யப்படக்கூடியது என்ற நிலையை இவர்கள் உணராமல் போவதும், உணர்த்தப்படாமல் போவதுமே இதற்கு காரணம்.
இதைப்போன்று உணர்ச்சி சார்ந்த மனநோய்களும் இன்றைய சமூகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது அதிவேகமான நவீனகால வாழ்க்கைச்சூழல், பழுமிக்க படிப்புகள், வேலைகள், போட்டிமிக்க சூழ்நிலைகள், விரைவான எண்ணங்களும், செயல்பாடுகளும், நேரம் கிடைக்காத வாழ்க்கைப்படலங்கள் இவையெல்லாம் சமூக காரணிகளாக காணப்படுகின்றன. மேலும் பிள்ளைகளின் பள்ளிச்சுமைகள் ஏராளமான பெற்றோர்களை மனக்கிளர்ச்சி உடையவர்களாக மாற்றி வருவது சமூகத்தில் காணப்படும் முக்கியமான பாதிப்பாகும்.
சமூகத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்களே மற்றவர்களை விட அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சாதாரண நிலையில் நல்ல ஒரு மனிதனாக தன்னை தரிசிக்கும் நிலையை இவர்கள் இழந்துவிடுவதே இதற்கு காரணம். அன்றாட வாழ்க்கையில் நாம் ஒரு சிலர் மிக உயர்மட்டத்தில் இருப்பினும் சுயகவுரவம் பார்க்காமல் சிறுபிள்ளைகள் போல் சாதாரண மக்கள் முதல் மேல்தள மக்கள் வரை ஒன்றாகவே பழகும் உயர் பண்புகளை பெற்றுள்ளதைக் காணலாம். இவர்களிடம் எந்தவித மனசஞ்சலங்களும் ஏற்படுவது இல்லை என்பதும் கண்கூடு.
தன்னை ஒரு பெரிய சமூக அந்தஸ்து மிக்கவராக காட்டிக்கொள்ள விரும்பும் போலி வாழ்க்கையில் சமத்துவம் மறுக்கப்பட்டு விடுவதால் சலனமான மனதுக்கு சொந்தக்காரர்களாகி எப்போதுமே மனக்கிளர்ச்சி பெற்று காணப்படுகின்றனர். இவர்களின் இறுதிவாழ்க்கை வரை முழுமையான நிம்மதி என்பது கேள்விக்குறியே!
உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாக இந்நோய் காணப்படுகிறது அரைகுறை கல்வி அறிவும் அன்புடையோர், அரவணைப்போர் மரணங்களும், மனமுறிவுகளும், தோல்விகளும் பெரும்பாலோரை மனக்கிளர்ச்சி நோயாளிகளாக மாற்றிக்கொண்டே வருகின்றன. இதன் காரணமாக வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் திடமாக திட்டமிடும் செயல்பாட்டினை மனம் இழந்துவிடுவதால் தாழ்வுமனப்பான்மை, வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்ற பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டு பலர் மனத்தளர்ச்சி நோய்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இத்தகைய தளர்ச்சிநோய்கள் நாளடைவில் முதிர் மன தளர்ச்சி நோய்களாக (psychotic depression) மாறி மனிதனை நீண்டநாள் நோயாளியாக மாற்றிவிடுகின்றன என்றும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 5 முதல் 10 சதவீதம் வரையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 முதல் 20% பேர் தற்கொலைசெய்து கொள்கின்றனர் என எல்லா நாடுகளிலும் தொடங்கப்பட்ட ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.
பொதுவாக இத்தகைய நோயாளிகள் தங்கள் மனவெளிப்பாடுகளை அடிக்கடி புலப்படுத்துவர். அதாவது விசம் குடிப்பதாக, தூக்கிட்டு கொள்வதாக அல்லது அடிக்கடி சொல்வது, கிணற்றில் குதித்துவிடுவேன் எனச் சொல்வது அல்லது இவை போன்ற எண்ணங்கள் தோன்றுவதாக நண்பர்களிடமோ, பெற்றோர்களிடமோ அல்லது மருத்துவரிடமோ எடுத்துக்கூறுவது என இவை இருக்கும். இதனை சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தாமல் விடுவது பிற்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என மனவியல் வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மருத்துவ ஆய்வுகளின்படி, போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் பலரும் நீண்டநாள் வலிப்புநோய், கல்லீரல், குடற்புண், சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயாளிகள் பலரும் தங்களுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்வதாக கண்டறிந்துள்ளனர்.
சிறுவயதிலிருந்தே ஆழ்மனதில் இடம்பெற்ற வெறுப்புணர்வுகளும், தாழ்வு மனப்பான்மையும், கசப்பான உணர்வுகளும், துயரச்சம்பவங்களும் பிற்காலத்தில் இது பல்வேறு மனநிலைகளுக்கு காரணமாகின்றன
தற்கொலை முயற்சிகள் பெண்களிடமே அதிகமாக காணப்படுகின்றன. கல்வி வளர்ச்சியும், அறிவியல் முன்னேற்றங்களும் வெகுவாக பயன்பட்டாலும் கிராமப்புற வாழ்க்கைகளில் தான் இவை அதிகமாக நடைபெறுகின்றன.
தாழ்வுநோயாளிகள் பொதுவாக சிந்திப்பதில் குழப்பமுடையவர்களாகவும் - எப்போதும் எதையோ இழந்தவர்கள் போலவும், மன-செயல் இயக்கங்களில் மந்தமாகவும், மனம் தளர்ந்துபோய் ஒதுங்கி இருப்பவர்களாகவும் காணப்படுவர். தூக்கமின்மை இவர்களிடம் காணப்படும். தன்னை தானே குறை சொல்லிக்கொள்வது, என்னால் யாருக்கும் பயனில்லை என எண்ணுவது அல்லது அடிக்கடி சொல்லிக்கொள்வது, தன் லட்சியம் நிறைவேறாமல் போய்விட்டதாக எண்ணி வாழ்வில் நம்பிக்கை இழந்து தவிப்பது, பல்வேறு குற்றவுணர்வுகள், தன் உடலும் மனமும் பலமிழந்துவிட்டதாக எண்ணுவது, பிறர் மேல் வெறுப்பு, கோபம், தனிந்து ஒன்றும் பேசாமல் ஒதுங்கி வாழ்வது போன்றவை மனதளர்ச்சி நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
இத்தகைய நோயாளிகளிடம் தன்நிலையை உணரச்செய்ய முயற்ச்சிப்பது, அவர்களுக்கு விருப்பமான செயல்களை செய்ய ஈடுபடுத்துவது, சிறு வேலைகளுக்கும் பாராட்டுவது, அவர்களை மகிழ்விப்பதும், ஊக்குவிப்பதும், நெருங்கி பழகுபவர்கள் அன்போடும், நட்புணர்வோடும் உண்மையோடும் நடந்துகொள்வது, அவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கும் அன்பானவர்களாக நடந்துகொள்வது, ஏதாவது ஆர்வமான வேலைகளோ, படிப்போ இருந்தால் அதில் ஈடுபடுத்தி ஊக்குவிப்பது போன்றவைகள் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும்.
உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்தால் உடலில் பல்வேறு மாற்றுச்சுரப்பிகள் மற்றும் செல்களின் வலுவான செயல்பாடுகள் மூலம் நோயின் வீரியம் குறைந்து உண்ணும் மருந்தின் வீரியமும் சிறப்படைந்து நல்லபலன் கிடைக்கும் என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால் இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.