Total Pageviews

Sunday, December 22, 2013

வருமானத்தின் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்



வருமானத்தின் ஒரு பகுதியை  நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்


என்ன நடக்குதுனே தெரியாம, காலைலே தூங்கி எழுந்தோம். அவசர அவசரமா வேலைக்கு கெளம்பினோம். கஷ்டப்பட்டு சம்பாதிச்சோம். பிள்ளைகளை வளர்த்தோம். சொத்து சேர்த்தோம்.. நம்ம அனுபவிச்சோமோ இல்லையோ, நம்ம புள்ளைகளுக்கு சொத்து சேர்ப்போம்.  அப்புறம் ஒருநாள் ... டிக்கெட் வாங்கிட்டு கெளம்பியாச்சு... இதேதான்  இன்னைக்கு 100 க்கு 95 பேரு பண்ற விஷயம்.

நம்ம வீடு, நம்ம குழந்தைகள்.. நம்ம சொந்தம் ? (அது கூட அபூர்வம் ) .. இதை தவிர வேற எதையும் யோசிக்க கூட நேரம் இல்லை.. சரி இந்த மாதிரி சொத்து சேர்த்து வைச்சா அது நல்ல விதமா உபயோகமாகுமா? இப்போ இருக்கிற பெரிய பெரிய கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைங்க , அரசியல்வாதி பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்கிறாங்க னு நெனைக்கிறீங்க...

எந்த மாடல் கார் வந்தாலும் வாங்கணும்..  எப்போவுமே குடி போதைலே இருக்கணும்.. எப்போவுமே ஏதாவது பொண்ணுங்க கூட சுத்தணும்.. எங்கேயும் ஒரு அடாவடித் தனம். அதனாலே ஒரு வம்பு... காசு இருக்கிற வரைக்கும் ஒரு கும்பலே கூட இருக்கும். அப்புறம் வாழ்க்கையிலே ஒரு செம அடி... அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். இதே போல தான் உங்க பிள்ளையும் இருக்கணும் னு நெனைக்கிறீங்களா?
இவங்களுக்கு எல்லாம் ஏன் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை னு எப்போவாவது தோணுவது உண்டா?

ஆடி அடங்கி , நாடி தளர்ந்து .. கடைசி நாட்கள் வரும்போது படுக்கையிலே படுத்து இருப்போமே அப்போ நம்ம கிட்டே மிஞ்சி இருக்க போறது  ... வெறும் நினைவுகள் மட்டுமே. .. வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக ஆக்குவது ஒவ்வொரு மனிதனின் கடமை. நம் வருங்கால சந்ததி வளமான ஒரு வாழ்வு வாழ்வதும் நம்ம கையிலேதான்..


நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்சென்று சொல்லியுள்ளார்.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”   (ஒளவையார் )


நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் !

இன்றைய காலகட்டத்தில் அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பேய் வழிபாடுகளுக்கும், தாசிகளுக்கும், வீண் செலவுகளுக்கும், கொள்ளை கொடுப்பதற்கும், மதுவிற்கும், பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்,
அவனுடைய சாவிற்கும், கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும், நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும், உரியனவாகும் !


சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளையாட்டுக்களை வைத்து நடைபெறும் சூதாட்டங்கள் (betting)  என்று எடுத்துக் கொள்ளலாம்.

பேய்வழிபாடுகள் என்பதற்கு பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும்,  ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை  நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள். இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர்களுக்கு செய்யுங்கள்

வாழ்க  மானுடம்..!



No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...