Total Pageviews

Sunday, May 17, 2020

சுத்தம் வேண்டும் நித்தம்!

 சுத்தம் வேண்டும் நித்தம்!   


குளிக்கும் பழக்கம்

நாமும் தினமும் குளித்து குளிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். என்னதான் அவசரமாக இருந்தாலும், முகம்-கை-கால்  மட்டுமே கழுவிக்கொண்டு செல்லக்கூடாது. காது மடல்கள், மூக்கு மற்றும் உடல் முழுவதும் சோப் மற்றும் பிரத்யேகக் குளியல் நாரினால் தேய்த்து  நிறையத் தண்ணீர் விட்டுக் குளிக்கக் கற்றுக்கொடுங்கள். தினமும் இரண்டு வேளை குளித்தால் மிகவும் நல்லது. ஈரத் துணியில் பாக்டீரியா வேகமாக  வளரும். குளித்ததும் ஈரம் போகத் துடைத்து, துவைத்த உள்ளாடைகளை அணிவியுங்கள்.. வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக்  குளிக்கவைக்கவும்.

கை சுத்தம்

சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், செல்லப்  பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி ஜெல் போட்டு  குறைந்தது 20 விநாடிகள் கழித்து கையைக் கழுவக் கற்றுக்கொடுங்கள். மூக்கில் சளித் தொந்தரவு இருந்தால் மூக்கைத் தொட்டதும், மருந்துகளைத்  தொடுவதற்கு முன்பும் பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும் என்று வலியுறுத்துங்கள். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற  இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்.


பல் சுத்தம்

சொத்தை பல் பிரச்சனை குழந்தைகள் மத்தியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. தினமும் இரண்டு முறை பல் துலக்கக் கற்றுக்கொடுக்காததே இதற்குக்  காரணம். தூங்கப்போகும் முன்பு கட்டாயமாக பல்லை சுத்தம் செய்ய கற்றுகொடுங்கள். குழந்தைகளை பல் துலக்கச் செய்வதே பெற்றோர்களுக்கு மிகப்  பெரிய சவால்தான். பள்ளிக்குப் புறப்படும் கடைசி நேரத்தில் அரக்கப்பரக்க குழந்தைகளை எழுப்பி, பரபரவென, பற்களைத் துலக்கி  அனுப்பிவிடுகின்றனர். குழந்தைகளை சீக்கிரத்திலேயே எழுந்திருக்கவைத்து, நிதானமாகப் பல் துலக்கவையுங்கள். பல்லின் முன், பின், மேல், கீழ் என  எல்லாப் பக்கங்களிலும் துலக்கச் செய்வதால் பெப்பர்மின்ட் வாசம் தூக்கும். பளிச் எனப் பற்களும் பிரகாசிக்கும்.

காயங்களை மூட வேண்டும்

காய்ந்துவரும் புண்ணை பிய்க்கும் பழக்கமும் குழந்தைகளுக்கு இருக்கும். காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும்.  இதைத்  தவிர்க்க, காயம்பட்டவுடன் முதலில் ஆன்டிசெப்ட்டிக் திரவத்தால் காயத்தை சுத்தம்செய்து, காயங்களை பேன்டேஜ் போட்டு மூட வேண்டும். காயங்கள்  மீது கைகள் படக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். பள்ளிக்கூடம், வெளி இடங்களில் குழந்தைக்கு எந்த சிறிய காயம் பட்டாலும், உடனடியாகத்  தெரிவிக்கும்படி குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்

தும்மல் வந்தால் மூடிக்கொள்ளுங்கள்

தும்மல், இருமல் வந்தால், நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூவால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒருவேளை  தும்மல் ஏற்படும்போது கையில் துணி ஏதும் இல்லை என்றால், முழங்கையின் முன்புறத்தால் மூடிக்கொள்ளச் சொல்லலாம். ஏனெனில், கையில்  தும்மல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்ற குழந்தைகளைத் தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். ஆனால், முழங்கையால்  மூடித் தும்மும்போது கிருமியானது குறிப்பிட்ட சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் குளித்தால் அந்தக் கிருமிகளும் இல்லாமல்  போய்விடும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்னர், கைக்குட்டை ஒன்றை அவர்களது உடையின் மேல் 'பின்’ செய்து அனுப்புவது  நல்லது.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...