Total Pageviews

Monday, May 18, 2020

உறவுகள் எப்படி இருக்க வேண்டும் ?




உறவுகள் எப்படி இருக்க வேண்டும்?

உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், குழந்தை, சொந்தபந்தம், பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர் என்று தொடங்கி அவரது நண்பர், அவரது பகைவர், அனைவருமே அவருடைய உறவு வட்டத்திற்குள் வருபவர்தான். இத்தனை உறவுகள் எதற்காக என்ற கேள்வி எழலாம். ஒரு மனிதருக்கிருக்கும் விதம்விதமான தேவைகளை நிறைவு செய்வதற்காகவே விதம்விதமான உறவுகள் உருவாகின்றன. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

உங்கள் வாழ்வில் நிகழும் விதம்விதமான செயல்பாடுகளுக்கேற்ப விதம்விதமான உறவுகள் அமைகின்றன. இதில், ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களின் தன்மை மாறிக்கொண்டே வருகிறபோது, அந்த செயல்களுக்கேற்ப ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறவிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் பங்குதாரரிடம் தொலைபேசியில் பேசுகிறீர்கள். அடுத்தநிமிடமே உங்கள் குழந்தையிடம் ஏதோ கேட்கிறீர்கள். அதற்கடுத்த நிமிடமே உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு பதில் சொல்கிறீர்கள். ஒவ்வோர் உறவையும் நீங்கள் ஒவ்வொருவிதமாகக் கையாள வேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தையை கையாள்கிற விதத்தில் உங்கள் கணவரை கையாள முடியாது. எனவே, இத்தனை உறவுகளையும் ஒருசேர கையாள்வதென்பது பந்துகளை ஒரே நேரத்தில் வீசிப்பிடிப்பதைப் போன்றது. உங்கள் கைகளில் ஒரேயொரு பந்து இருக்குமென்றால் எளிதாக இருக்கும். ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப்பிடிக்க வேண்டும், ஒன்றைக் கூட நழுவவிடக் கூடாது என்றால் அது எவ்வளவு சிரமமானது! ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கையாள்வதென்பது இப்படித்தான். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப் பிடிக்கும்போது அவரால் வேறெதிலும் கவனம் செலுத்தமுடியாது. நீங்கள் உறவுகளை கையாள்கிற சூழலும் இப்படித்தான் இருக்கிறது. உங்களுடைய சில தேவைகளை நிறைவு செய்வதற்காக உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், அந்த உறவுகளின் தேவைகளை ஈடுசெய்ய வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இருக்கிறது.

இன்னொரு விதமாகவும் வாழலாம். அது எவ்விதமான உறவுகளும் இல்லாமல் வாழ்வது. தனக்குள்ளேயே முழு நிறைவைக் கண்டு வெளியே வேறு உறவுகளைத் தேட வேண்டிய தேவையில்லாமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், இப்போதைய சூழலில் பிறருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவுகள்தான் உங்கள் வாழ்க்கையின் தன்மையையே தீர்மானிக்கின்றன. எனவே, வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி மிகவும் மேன்மையான உறவுகளை மேற்கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும். உறவுகளின் ஆதார சுருதியே தேவைகள்தான் என்பதை முதலில் பார்த்தோம். விதம்விதமான உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க முயல்கிறீர்கள்.

நட்பை உருவாக்கிக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, தொழில் தொடங்குவது, இவையெல்லாமே மகிழ்ச்சியாய் இருப்பதற்கான முயற்சிகள்தான். இதையே வேறுவிதமாக சொல்வதென்றால், மனிதர்களை கசக்கிப் பிழிந்து மகிழ்ச்சியின் சாறெடுக்க முயல்கிறீர்கள். இதைச் செய்கிறபோதுதான் உறவுகள் உங்களுக்கு தொடர்ந்து தொந்தரவுகளையே தருகின்றன.

பெரும்பாலான மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உறவுகளிலேயே மிகவும் நெருக்கமானது ஆண், பெண் உறவுகள்தான். அவர்கள் சேர்ந்திருக்கும் நேரங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பிரித்து வைத்தீர்கள் என்று சொன்னால் 24 மணிநேரத்திற்கு மேல் அவர்களால் பிரிந்திருக்க முடியாது. மறுபடியும் சேர்த்து வைத்தால் 10 நிமிடங்களுக்குள் சண்டையைத் தொடங்கி விடுவார்கள். அவர்களால், சேர்ந்தும் இருக்க முடியாது, பிரிந்தும் இருக்க முடியாது. பிரச்சினையே இதுதான். இது அவர்களுக்குள் இருக்கும் ஒருவிதத் தேவையின் காரணமாக ஏற்படுகிற மோதல். தங்களுக்குள் மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ அவர்கள் உணரவில்லை. ஒருவர் இன்னொருவரிடமிருந்து மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ பிழிந்தெடுக்கப் பார்க்கிறார். ஆனால், இதுவொரு போராட்டமாகத்தான் இருக்கும். நெருக்கமான உறவுகளில் இருக்கும் இத்தகைய இரண்டு பேர் ஒருவரையொருவர் கொலை செய்துவிடப் போவதில்லை. ஆனால், ஒருவரையொருவர் வெவ்வேறு விதங்களில் சித்ரவதை செய்து கொள்வார்கள். இது ஓர் ஒப்பந்தம். ஏனெனில், இன்னொருவரை கொலை செய்துவிட்டால் அவருக்கு வேறு போக்கிடம் இல்லை.

எனவே, மேன்மையான உறவுகள் மலர வேண்டுமென்றால், ஒரு மனிதர் உறவு கொள்வதற்காக இன்னொருவரைத் தேடுவதற்கு முன் தனக்குள் ஆழமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஆனந்தத்திற்கு நீங்களே மூலமாக இருக்கும்போது, உங்கள் உறவுகள் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழியாக இருக்கும்போது, உறவுகளைக் கசக்கிப் பிழிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. எல்லோரோடும் மிக அற்புதமான உறவுகளை உங்களால் மேற்கொள்ள முடியும்.

மனிதர்களுக்கு உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? அவர்கள், தங்கள்
வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உறவுகளைப் பயன்படுத்தாமல், வாழ்க்கையிலிருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கே உறவுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வருத்தமாக இருந்தாலும் அதனை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வீதிமுனைகளில் நின்று கவனிப்பீர்களேயானால், நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் உங்களைக் கடந்து செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடிய முகங்களுடன்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னாயிற்று? இத்தனைக்கும் உங்கள் முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்கள்.  உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்குமென்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.

உலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்தவரையில் அனைவருமே ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்தவரை நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அனுபவம் உங்கள் அளவில் முழுமையானதாக இருக்கலாம். உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் வெளிச்சூழலுக்கு அடிமையாக்கப்பட்டோ, அடகு வைக்கப்பட்டோ இருந்தால்தான் அது சாத்தியமில்லை.
 நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவுகொள்ளத் தான் விரும்புவார்கள். யாரிடமாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள் கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள். வாழ்க்கை பலரையும் சார்ந்திருக்கிறது என்பதால்தான் உறவுகளையே நீங்கள் உருவாக்கினீர்கள். உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நீங்களே கையாள முடியாது. உங்களைச் சுற்றி மனிதர்கள் வேண்டும். அதற்காகத்தான் உறவுகள். ஆனால், எல்லோரிடமிருந்தும் நீங்கள் எதையாவது பெற்றுக் கொண்டே இருக்க விரும்பினால், உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஓர் அந்நியருடன் இருப்பதை விடவும் எச்சரிக்கையாக உங்களிடம் நடந்து கொள்வார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

உறவுகளை இனிமையானவையாய் வைத்துக் கொள்வதும், சிக்கல்மிக்கதாய் உருவாக்கிக் கொள்வதும் உங்களைப் பொறுத்துதான் இருக்கிறது. நெருக்கமானவர்கள் என்றால் அவர்களுடனான மனத்தடைகள் உடைந்திருக்க வேண்டும். ஆனால், அந்நியர்களிடம் இயல்பாய் இருக்கிறீர்கள், நெருக்கமானவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் அதீத எதிர்பார்ப்பையே காட்டுகிறது. ஒருவரோடொருவர் நெருங்கியிருக்கும் போதே ஒருவரிடமிருந்து ஒருவர் தற்காத்துக் கொள்ள தேவைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில் உங்களால் உங்களுடன் உறவுகொண்டிருப்பவர்களோடு சேர்ந்திருப்பதும் சாத்தியமில்லை, விலகியிருப்பதும் சாத்தியமில்லை. இந்த உலகத்தில் வாழ்கிறபோது உறவுகளைப் பொறுத்தவரையில் உங்களுக்கு தேர்வுகள் ஏதும் கிடையாது. நீங்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், யாருடனும் உறவுகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க சாத்தியமில்லை. ஆனால், உறவுகள் மேன்மையானவையாக இருக்க வேண்டுமா? சிக்கல் உள்ளவையாக இருக்க வேண்டுமா? என்று தேர்வு செய்வது உங்களால் முடியும்.

வாழ்க்கை எப்போதுமே நேர்கோடாக இருப்பதில்லை. வாழ்வை நடத்துவதற்கென்று எத்தனையோ விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் புரிதலை நீங்கள் கைவிட்டால் உங்கள் செயல்திறனை நீங்கள் இழக்கிறீர்கள். தனிப்பட்ட உறவாகட்டும், தொழில்முறை நிர்வாகமாகட்டும், எல்லா இடங்களிலும் அடிப்படைத் தேவையென்னவோ ஆழமான புரிதல்தான்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...