Total Pageviews

Saturday, April 23, 2022

முதியோர் நலன் காப்பது நம் கடமை!

குடும்பத்தின் மேன்மை மட்டுமின்றி சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் முதியோர்கள் பெரியளவில் நன்மைகளை வழங்குகின்றனர். இருப்பினும் பாரபட்சமும், சமூகப் புறக்கணிப்பும் தொடர்கின்றன.woman sitting on brown bench

சர்வதேச அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025-ல் இரட்டிப்பாகி, 2050-ல் 200 கோடியைத் தாண்டிவிட வாய்ப்புள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கிறார்கள். மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் பொருளாதார உயர்வு போன்றவற்றால் அவர்களுடைய வாழ்நாள் அளவு உயர்ந்து வருவதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

முதியவர்கள் தன்னுடைய அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொள்வது, பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வது, தன்னார்வப் பணிகளை செய்வதோடு, தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

மேலும் அவர்களுடைய முழு பங்களிப்பு அனைத்துத் தலைமுறையினருக்கும் மிகுதியான பலனைக் கொடுக்கிறது. எனவே, வயதாகும் நிலையிலும் ஆரோக்கியமாக அவர்கள் இருப்பதற்கு, நீடித்த பராமரிப்பை அளிப்பது நம் ஒவ்வொருவரின் முக்கியக் கடமை.

முதியவர்களுக்கு வயது அதிகரிக்கும்போது நீண்டநாள் நோய்கள் உருவாகி, உடல்நலம் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளது. இதனால் தனியாக, சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடுகிறது. அவர்களுடைய நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது. பிறரை சார்ந்திருக்கும் நிலை, சமூக வாழ்க்கையில் இருந்து விலகுதல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் போன்றவற்றால் அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிறது. இதய நோய்கள், நீரிழிவு, மற்றும் புற்று நோய் போன்ற நோய்களே வளர்ந்து வரும் நாடுகளின் நோய்ப்பளுவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தேசிய திட்டத்தின் கீழ் சுகாதாரப் பராமரிப்பு, பல்வேறு நோய்த்தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்குத் தனித்த, சிறப்பான, விரிவான சுகாதாரப் பராமரிப்பை மாநில சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் மூலமாக அளிப்பதே இந்த தேசியத் திட்டங்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது.முதியோருக்கு ஏற்படும் பொதுவான நோய்கள்

* முதுமை மூட்டழற்சி, எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு போன்ற எலும்பு சார்ந்த நோய்கள்.

* தைராய்டு பிரச்னைகள், நீரிழிவு, மாதவிடாய் போன்ற இயக்குநீர் பிரச்னைகள்.

* முதுமை மறதி, பார்க்கின்சன் நோய், பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைவு, உடல் சமநிலை இழப்பு போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

* கண்புரை, கண்ணழுத்த நோய் போன்ற பார்வை சார்ந்த நோய்கள் மட்டுமன்றி நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் உண்டாகும் சிக்கல்கள்.

* மாரடைப்பு, தமனித்தடிப்பு, ரத்த அழுத்தம் சார்ந்த இதய நோய்கள்.

* சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாமை போன்ற சிறுநீரக பிரச்னைகள். சில சமயங்களில் உடல் நோய்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் டயாலிசிஸ் போன்ற நீண்ட நாள் பராமரிப்பு தேவைப்படும்.

* பற்களை இழத்தல், ஈறு நோய், சரியாகப் பொருத்தப்படாத பற்களால் ஏற்படும் பற்கள் சார்ந்த பிரச்னைகள்.

* களைப்பால் உண்டாகும் பலவீனம், எடை இழப்பு, மருந்துகளின் பக்க விளைவு, தூக்கக் கோளாறுகள், உடல் நடுக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகள் முதுமையில் ஏற்படுகிறது.

எனவே, முதுமையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை தனிப்பட்ட ஒரு முதியவரின் பிரச்னையாகப் பார்க்காமல் சமூக சிக்கலாகவே பார்க்க வேண்டும். ஒருநாள் நமக்கும் அதேபோல் வயதாகும். இன்று நமது முதியோர் சந்திக்கும் பிரச்னைகளை நாளை நாமும் சந்திக்க நேரிடும் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

முதியோர் நலன் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகள்

* முதியோரை விலைமதிக்க முடியாத வளமாக அங்கீகரிக்க வேண்டும்.

* அவர்களுடைய கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

* அவர்கள் நேசிக்கப்படுவதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

*  முதியோருக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்பையும், நல மேம்பாட்டையும் வழங்க வேண்டியது நமது கடமை.

60 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு…

* உங்கள் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்து கொண்டு முறையாக நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும்.

* உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

* அதிக உடல் எடை மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதால் மிதமான உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். அது உடல் வலிமை, சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண உதவி செய்யும். நடை, யோகா, தியானம் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும். 

* புகை, மது மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

* உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது அவசியம் என்பதால் உடலை அதிக    மாக வருத்தக் கூடாது.

* சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பது நல்லது.

* பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. தேவைப்படும் சமயங்களில் முதியோர் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...