Total Pageviews

Friday, August 5, 2022

இரத்த சோகை என்றால் என்ன? Anemia [ Tamil ]

 இரத்த சோகை என்றால் என்ன?

இரத்த சோகை என்பது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவதே. ஹீமோகுளோபின் என்பது, திசுக்களுக்கு ஒக்சிஜனைக் கொண்டுசெல்லும், இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள (RBC) இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும்.

ஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குறைவுபடும்போது இரத்த சோகை ஏற்படுகிறது. அதாவது உடலில் போதியளவு ஒக்சிஜன் வழங்கப்படாதிருக்கும் நிலையாகும். இது உடல் வெளிறுதல், களைப்பு அல்லது சோர்வு, மற்றும் உடற் பலவீனத்தை ஏற்படுத்தலாம்.

இரத்த சோகை ஒரு குறுகிய காலத்துக்கு அல்லது ஒரு நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம். தீவிரம் குறைந்த நிலைமைகளில், உணவு முறையில் ஒரு எளிமையான மாற்றம் தான் சிகிச்சையாக அளிக்கப்படுகிறது. தீவிரம் கூடிய நிலைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

இரத்த சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

இரத்த சோகைக்கான அறிகுறிகள் அதன் கடுமை, ஹீமோகுளோபின் எவ்வளவு விரைவாகக் குறைகிறது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பனவற்றை பொறுத்திருக்கிறது. ஒரு பிள்ளையின் உடல் எவ்வளவு நன்றாக ஹீமோகுளோபினின் தாழ்ந்த நிலையைச் சமாளிக்கின்றது என்பதிலும் தங்கியுள்ளது. அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு ஹீமோகுளோபின் தான் காரணமாக இருப்பதால், தோல் வெளிறுதல்
  • உடலில் ஒக்சிஜனின் அளவு குறைக்கப்பட்டதால், உடலில் சக்தி குறைவுபடுதல்
  • உடலில் ஒக்சிஜனின் அளவு குறைந்ததால், உடற்பயிற்சி செய்தபின் அல்லது விளையாடிய பின் விரைவான சுவாசம்

இரத்த சோகைக்கான காரணங்கள் மற்றும் அதன் வகைகள்

இரத்த சோகையில் அநேக வகைகள் இருக்கின்றன. பொதுவாக, காரணங்களின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஊட்டச் சத்து இரத்த சோகைகள்

இரத்த சோகை வகைகளுள் மிகவும் பொதுவானது, இரும்புச் சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையாகும். இது உணவில் இரும்புச் சத்து குறைவதால் ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு இரும்புச் சத்து தேவை. தாய்ப்பால், இரும்புச் சத்தால் பலப்படுத்தப்படாத பசுப்பால் ஃபோர்முலாக்கள், அல்லது முழுப் பசுப்பால் மாத்திரம் குடிக்கும் குழந்தைகளுக்கு 6 மாதங்களின் பின்னர், இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. உங்கள் குழந்தை இன்னமும் திட உணவு உண்ணத் தொடங்காவிட்டால் குழந்தைகளின் ஃபோர்முலாக்கள் இரும்புச் சத்தால் செறிவூட்டப்பட்டதாயிருக்கவேண்டும்.

முழுமையாக முதிர்ச்சியடைந்த குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆரோக்கியமுள்ள தாய்மார்கள், இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் பரிந்துரை செய்யப்படும் வரையில், 6 மாதங்களுக்குத் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான இரும்புச் சத்தைக் கொண்டிருப்பார்கள். தாய்ப்பாலிலுள்ள இரும்புச் சத்து நன்கு உறிஞ்சப்படும். 6 மாதங்களில் திட உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. இது தாய்ப்பாலூட்டுதல் மாத்திரமல்ல, ஆனால் சிபாரிசு செய்யப்படும் சமயத்தில் இரும்புச் சத்து நிறைந்த திட உணவுகள் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், இரத்த சோகையை ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

உணவில் ஃபோலிக் அசிட், விட்டமின் பி 12, அல்லது விட்டமின் ஈ குறைவு படும்போது விட்டமின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் தயாரிப்பதற்கு உடலுக்கு, இந்த எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன.


நோயினால் ஏற்படும் இரத்த சோகைகள்

அரிவாள்செல் இரத்த சோகை என்பது சிவப்பு அணுக்களை உருக்குலையச் செய்யும் பரம்பரை வியாதியாகும். இந்த உயிரணுக்கள், சாதாரண இரத்தச் சிவப்பு அணுக்களைப்போல உடல் முழுவதும் நன்கு நீந்திச் செல்ல முடியாது. இதனால் உடலுக்கு குறைந்தளவு ஒகிசிஜனே கிடைக்கின்றது.

சிறுநீரகம் செயற்படாமல் போதல், புற்றுநோய், மற்றும் க்ரோன்ஸ் நோய் என்பனவற்றாலும் தீராத இரத்த சோகை ஏற்படலாம். எலும்பு மஜ்ஜை நோய் மற்றும் லூபஸ் நோய் போன்ற தன்னுடல் தாக்கும் நோயினாலும் இரத்த சோகை ஏற்படலாம்.

அப்ளாஸ்டிக் இரத்த சோகை என்பது ஒரு அரிதான மற்றும் கடுமையான நோய். இது உடல் போதிய அளவு புதிய இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். ஒரு பிள்ளை இந்த இரத்த சோகை நோயுடன் பிறந்திருக்கலாம் அல்லது ஒரு வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் ஏற்படலாம் அல்லது ஒரு மருந்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் இது இரத்தப் புற்றுநோயின் தொடக்க அறிகுறியாகும்.

ஹீமொலிட்டிக் இரத்த சோகை பெரும்பாலும் ஒரு மரபுவழி நோய். இது அதிகளவில் இரத்தச் சிவப்பு அணுக்களை அசாதாரணமுறையில் அழிக்கும்.

இரத்த சோகைக்கான வேறு காரணங்கள்

  • கடுமையான அல்லது தீராத இரத்தக் கசிவினால் இரத்த சோகை ஏற்படும். தீராத இரத்த இழப்பினால் ஏற்படும் இரத்த சோகை, இரப்பைக் குடற் பாதையில் மிகவும் சாதாரணமாகச் சம்பவிக்கும். இது பசுப்பாலிலுள்ள புரதச் சத்தின் ஒவ்வாமையினால் பெரும்பாலும் சம்பவிக்கும்.
  • தைரோயிட் இயக்குநீர் அல்லது டெஸ்டோஸ்டிரோன் இயக்குநீரின் தாழ்ந்த அளவுகள்.
  • குறிப்பிட்ட சில மருந்துகளின் பக்கவிளைவுகள்.

இரத்த சோகைக்கான ஆபத்தான காரணிகள்

இரத்த சோகையை விருத்தி செய்வதற்கான உயர்ந்த ஆபத்திலிருக்கும் சில பிள்ளைகளின் பிரிவுகள் இருக்கின்றன. உயர்ந்த ஆபத்துக்குக் காரணமாகக்கூடிய காரணிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • குறைமாதப் பிரசவம் மற்றும் பிறப்பின்போது எடை குறைவாக இருத்தல்
  • முன்னேற்றமடைந்துவரும் உலகிலிருந்து சமீபத்தில் குடியேற்றம் செய்தல்
  • வறுமை
  • உடற்பருமன் அல்லது தவறான உணவுப் பழக்கங்கள்

இரத்த சோகையின் நீண்ட காலப் பாதிப்புகள்

பிள்ளைகளிலுள்ள சிகிச்சை செய்யப்படாத இரத்த சோகை அவர்களின் வளர்ச்சியில் ஒரு கடுமையான பாதிப்பைக் கொண்டுவரலாம். இரத்த சோகை மூளை விருத்தியடைவது மற்றும் செயற்படுவதைப் பாதிக்கலாம். பெரும்பாலும் இது, கூர்ந்து கவனிப்பதில் பிரச்சினைகள், வாசிக்கும் திறனில் தாமதம், மற்றும் மோசமான பள்ளிக்கூடச் செயற்திறன்கள் என்பனவற்றை விளைவிக்கும்.

இரத்த சோகையைக் குறித்து உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்ன செய்யலாம்

உங்கள் பிள்ளையின் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவைத் தெரிவிக்கும் ஒரு எளிமையான இரத்தப் பரிசோதனையை உங்கள் மருத்துவர் செய்வார். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, அளவு, மற்றும் வடிவம் என்பன இரத்த சோகையின் வகையைக் காண்பிக்கும். ஒரு சில இரத்தத் துளிகளினால் ஹீமோகுளோபினின் அளவை விரைவாக அளந்துவிடலாம். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை இரத்தத்தின் மொத்தக் கனவளவுடன் ஒப்பிட்டும் அளவிடலாம். இந்தப் பரிசோதனை ஹிமட்டோக்றிட் என அழைக்கப்படும்.

உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு உடற் பரிசோதனையையும் செய்வார். உங்கள் பிள்ளையின் சக்தியின் அளவுகள், பொதுவான உடல்நலம் , உணவுகள், மற்றும் குடும்ப வரலாறு என்பனவற்றைப் பற்றியும் கேட்பார்.

இரத்த சோகைக்கான சிகிச்சைகள்

சிகிச்சை, உங்கள் பிள்ளையின் இரத்த சோகை எ​வ்வளவு கடுமையானது மற்றும் அதற்குக் காரணம் என்ன என்பனவற்றைச் சார்ந்திருக்கிறது. பொதுவான சிகிச்சைகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • இரும்புச் சத்தைக் கொடுக்கக்கூடிய மருந்துகள் மற்றும் சப்ளிமென்டுகள்.
  • குழந்தைகளின் இரும்புச் சத்து​ நிறைந்த ஃபோர்மூலா.
  • பாலைக் குறைத்து இரும்புச் சத்தைக் கூட்டுதல் போன்ற உணவு முறையில் மாற்றங்கள். இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவை, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளுக்குள் உட்படுகின்றன. இறைச்சி சாப்பிடாத பிள்ளைகள் கேல், ஸ்பினாச், கொலாட் க்றீன்ஸ் மற்றும் ஆட்டிச்சோக்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்ணவேண்டும்.
  • ஃபோலிக் அசிட் மற்றும் விட்டமின் பி 12 சப்ளிமென்டுகள்.

கடுமையான நோயொன்றினால் உண்டாகும் இரத்த சோகை பின்வருவனவற்றை தேவைப்படுத்தலாம்:

  • சிலகுறிப்பிட்ட வகையான இரத்த சோகைக்கு இரத்தம் ஏற்றப்படும். இவை ஹைப்போபிளாஸ்டிக் இரத்த சோகை, தாலஸ்ஸமியா, மற்றும் ஹீமோகுளோபினோபதீஸ் என்பனவற்றை உட்படுத்தும். அடிக்கடி இரத்தம் ஏற்றுவதனால் உடலில் இரும்பின் அளவு அதிகரித்து விஷம் சார்ந்த பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்தலாம். இரத்தமேற்றுதல்களுடன் உடலிலிருந்து இரும்புச் சத்தை அகற்றும் மருந்துகள் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப்படலாம்.
  • தொற்று நோயை எதிர்க்கக்கூடிய மருந்துகளினால் சிகிச்சை.
  • எலும்பு மஜ்ஜையை அதிகளவு இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யச் வைப்பதற்கான சிகிச்சை.
  • மண்ணீரலை அகற்றுதல். பிறப்பு சார்ந்த ஸ்ஃபெரொசைற்றோசிஸ் மற்றும் பிறப்பு சார்ந்த எலிப்ற்றோசிற்றோசிஸ் போன்ற சில நிலைமைகள், மண்ணீரலைக்கொண்டு அதிகளவு இரத்தச் சிவப்பணுக்களை அழிக்கச் செய்கின்றன.
  • ​ அரிவாள்செல் இரத்த சோகை, தலஸ்ஸெமியா, மற்றும் அப்ளாஸ்டிக் இரத்த சோகை போன்ற கடுமையான நிலைமைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை ஒரு தெரிவாக இருக்கலாம்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்

பின்வரும் நிலைமைகளில் உங்கள் பிள்ளையின் வழக்கமான மருத்துவரை அழைக்கவும்:

  • உங்கள் பிள்ளை அடிக்கடி வெளிறி, களைப்படைந்து மற்றும் விரைவாகச் சுவாசிக்கிறான்.
  • உங்கள் பிள்ளைக்கு இரத்த சோகை இருக்கலாம் என நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.

முக்கிய குறிப்புகள்

  • மிகவும் பொதுவாக, இரத்தத்தில் போதியளவு இரும்புச் சத்து இல்லாதிருப்பதால் இரத்த சோகை ஏற்படுகிறது.
  • உங்கள் பிள்ளை அடிக்கடி களைப்படைந்து, பெலவீனமாக மற்றும் வெளிறி இருந்தால் இரத்த சோகைக்காக உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும்.
  • உங்கள் குழந்தை இன்னும் திட உணவுகள் உண்ணத் தொடங்காவிட்டால் குழந்தை ஃபோர்மூலாக்கள் இரும்பு சத்தால் நிறைந்திருக்கவேண்டும்.
  • இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள் உட்பட, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.​​

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...