வாழ்நாள் முழுவதும், மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான், ஒருவன். அதற்கு என்ன வழி என்று, நண்பர்களிடம் கேட்டான்.
'பணம் இருந்தால், மகிழ்ச்சி வரும். அதனால், பணம் சம்பாதிக்கிற வழியைப் பாரு...' என்றனர்.
இவனும், பாடுபட்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளிலே அவனிடம் நிறைய செல்வம் சேர்ந்து விட்டது. அப்போதும், அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. திரும்பவும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.
'பணம் சம்பாதித்தால் போதாது. தாராளமா செலவு செய்யணும்...' என்று, ஆலோசனை தந்தனர், நண்பர்கள்.
இவனும், விருப்பப்பட்டதை எல்லாம் வாங்கிக் குவித்தான்; ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட்டான்; பல ஊர்களுக்கு சென்று வந்தான். இறுதியாக, திருமணம் செய்தும் பார்த்தான். அப்போதும், நிம்மதி இல்லை.
கடைசியில், ஒரு முனிவரிடம் யோசனை கேட்டான். சற்று நேரம் யோசித்தவர், 'துறவறத்தில் தான் உனக்கு நிம்மதி கிடைக்கும். ஆனால், அதற்கு எல்லாவற்றையும் துறக்கணும்...' என்றார்.
அவனும் சரி என்று, தன்னிடமிருந்த செல்வம் அனைத்தையும் மூட்டையாக கட்டி எடுத்து வந்து, முனிவர் காலடியில் வைத்து, 'எனக்கு, மகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கச் செய்ய வேண்டும்...' என்று, வேண்டினான்.
திடீரென்று, காலடியில் கிடந்த பண மூட்டையை துாக்கிக் கொண்டு ஓடினார், முனிவர். உடனே, இவனும் அவரை துரத்திச் சென்றான்.
சந்து, பொந்தெல்லாம் மூச்சு இரைக்க ஓடியவர், புறப்பட்ட இடத்துக்கே வந்து நின்றார். துரத்தி வந்தவனும், அங்கு வந்து சேர்ந்தான்.
'என்ன, பயந்து விட்டாயா... இந்தா உன் மூட்டை...' என்று, திருப்பி கொடுத்தார், முனிவர்.
அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
'இதோ பாருப்பா... நீ இங்க வர்றதுக்கு முன்பும், இந்த செல்வம் உன்னிடம் தான் இருந்தது. ஆனால், அப்போது உனக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இல்லை. இப்போதும் அது உன்னிடம் தான் இருக்கிறது. முன்பு இருந்ததை விட, இப்போது அதிக மகிழ்ச்சியும், நிம்மதியும் உன்னிடம் இருக்கிறது அல்லவா!
'இதிலிருந்து என்ன தெரிகிறது... மகிழ்ச்சியோ, நிம்மதியோ வெளியில் இல்லை. நம் மனதில் தான் உள்ளது...' என்று கூறி, அவனை அனுப்பி வைத்தார்.
நிம்மதி எங்கு உள்ளது என்று, நமக்கும் புரிந்ததல்லவா!
பி. என். பி.,
No comments:
Post a Comment