முதுமையை எப்படி எதிர்கொள்வது?
60 வயதிற்கு பிறகு எப்படி வாழலாம்?
நடுத்தர வயது.தாண்டியவர்களுக்கும் உதவும்!
முதுமையை எப்படி எதிர்கொள்வது?
ஒருவரின்பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.
1.முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள்.
நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.
அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
2.காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.
நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும் முதுமை உங்களை ஒரு சராசரி வயதான மனிதராக மாற்றி விடும்.
நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.
உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்.
3.அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும்.
தேவையான மருந்துகளை தவறாமல்
எடுத்து கொள்ளுங்கள்.
உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெறுங்கள்.
ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.
4.இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.
நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.
அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.
5.கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம். அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.
மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.
வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.
ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று தற்போது புரிந்திருக்கும்.
உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.
நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக் கவலைப் படாதீர்கள்.
ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் தேவை இல்லாமல் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்.
இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள்.
மற்றவர்களை மதியுங்கள்.
பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள்.
யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.
தியானம் கற்றுக் கொள்ளுங்கள்
தினமும் எளிய உடற்பயிற்சி
தேவையான அளவு மட்டுமே உணவு.
நல்ல குடும்ப நண்பர் போல ஒரு டாக்டர்.
நல்ல புத்தகங்கள், நல்ல உறவுகள்.
தொலைக்காட்சி தொடர்கள் வேண்டாம்.
தன்னம்பிக்கை பேச்சுக்களை கேட்கலாம்.
நல்ல குணங்களை வைத்து கொள்ளுங்கள்.
நண்பர்களை அடிக்கடி சந்தித்து உங்களை நீங்களே புதுப்பித்து கொள்ளுங்கள்.
எதையும் சுலபமாக ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு இனி வரப்போகும் இறுதி நாட்களும் இனிமையாக இருக்க பிரார்த்தியுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து பார்ப்போம்.
மகிழ்வோடு,தன்னலமற்று,சந்தோஷமாக,வாழ்வோம்.
No comments:
Post a Comment