ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
நீங்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்….. அவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா? இது தான் நம்முடைய மனநிலை. இதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்த நபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.
உங்களை விட கீழ்நிலை வேலையில், இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்….. அவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க முடியாது. அதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடத்திலெல்லாம் உங்களைப் பற்றி மோசமாகச் சொல்லி பழிதீர்த்துக் கொள்வார்கள். இதனால் உங்களுடைய மதிப்புப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய சூழலில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில், எதிர்மறையான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மன அமைதியை இழந்து தவிக்கிறார்கள். இதுபோன்றநிலையில், வேலை பார்க்கும் இடங்களில் மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின் அமைதியின்மைக்குப் பிறரையோ, சூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்ற இரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
மேலதிகாரிகளுடன் நல்லுறவு கொள்ளவேண்டும். பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போது மேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும். உங்கள் பணியை பற்றிய உண்மை உங்களைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். இந்நிலையில் மேலதிகாரியுடனான தகவல் பரிமாற்றம் இல்லையெனில் 50% தவறுகளுக்கு அப்பணியாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
உங்கள் அதிகாரியுடன் முழுமையான நல்லுறவுக்கு மனதைத் தயார்படுத்திக் கொள்ள தவறவேண்டாம். முதுகுக்குப் பின்னால் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளைப் பரப்புவது, வம்பு பேசுவது போன்றகுணங்களை முழுமையாக விட்டொழிக்க வேண்டும். இதனால் இன்று உங்களால் விமர்சிக்கப்படுபவர் இன்னொரு நாள் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலையை தவிர்த்திட இது வகைசெய்யும். உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
நம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான். அதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் பிரச்சனைகளைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்து, அதை சரிசெய்ய முயற்சித்தால் எதிர்மறைஎண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
மனோபாவத்தை மாற்றநீங்கள் தயாரா?
எதிர்மறைமனோபாவத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது கீழ்க்கண்ட கேள்விகளைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்த நபர் எனக்கு முக்கியமானவரா?
இதற்கு முன் இதே போன்றஒரு மனோபாவத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறாரா?
அவரின் இந்த எதிர்மறை மனோபாவம் என்னை எந்த அளவிற்குப் பாதிக்கிறது?
இந்த நபரின் எதிர்மறை மனோபாவம் மாறும் வரை பொறுத்துப் பார்க்கலாம் என்னும் அளவிற்கு தன்னுடைய நேரத்தைச் செலழிக்கத் தயாராக இருக்கிறீர்களா?
அவருடைய எதிர்மறை மனோபாவத்தை மாற்றுவதற்கான முயற்சியைச் செய்து பார்க்கத் தயாராக இருக்கிறீர்களா?
மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு ‘இல்லை’ என்றபதில் உங்களிடமிருந்து வந்தால் அந்த இடத்தை விட்டு அமைதியாக வந்துவிடுங்கள். தயவு செய்து உங்களுடைய ஆத்திரத்தை, கோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள். அது தான் உங்களுக்கு நல்லது. மேற்கண்ட கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில் கூறினால் இரண்டாவது படிக்குச் செல்லுங்கள்.
உண்மையான காரணத்தைக் கண்டறியுங்கள்:
அந்த நபரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டாரா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நிலையை விளக்குங்கள். ஆனால் சமயம் பார்த்து இதனைச் செய்ய வேண்டும். பொறுமையாக இருங்கள். உங்களின் அமைதி, மௌனம் நிச்சயமாக அவரைச் சோதிக்கும்.
நீங்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொண்டால்….. எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட அவர்களுடைய கோபம் தணிந்தவுடன், மனநிலை மாற்றம் ஆனவுடன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருந்துவார். உங்களை அழைத்துப் பேசுவார். அவ்வாறு பேசத் தயாராகும் போது நீங்கள் இயல்பாக அவரை வரவேற்பது போல, உற்சாகப்படுத்துவது போலப் பேசவேண்டும். உங்களின் உண்மையான விளக்கத்தை இப்போது கூறலாம். இப்படியெல்லாம் நடக்கும் என்றநம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மூன்றாவது படிக்குச் செல்லுங்கள்.
மனநிலையை மாற்றுங்கள்:
இப்போது அவரது மனநிலையை உங்களுடைய நேர்மறைச் சிந்தனையால் மாற்றமுயற்சியுங்கள். பிரச்சனையைத் தெளிவாகப் பேசிவிடுங்கள். உங்களின் மேல் தவறுகள் இருந்தால் தாராளமாக மன்னிப்புக் கேளுங்கள். மீண்டும் நடக்காது என்பதை நிச்சயப்படுத்துங்கள். உங்களிடம் தவறு இல்லையென்றால் அது போன்றசூழ்நிலைக்கு யார்? அல்லது எது காரணம்? என்பதைக் கண்டறியுங்கள். ஏனென்றால் புரிதலின்மை (Misunderstanding) என்பது பெரும்பாலான உறவுகளைப் பிரிக்கிறது. இதனை சரியான புரிதல்கள் (Understanding) மூலம் தான் தீர்க்க முடியும். மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் கேள்விகள் கேட்டு உண்மைகளைக் கண்டறிவதன் மூலம் தான் அதைச் சரி செய்ய முடியும். ஆனால், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி ஒருவருக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது என்றால் அதை மாற்றவேண்டியது உங்களின் கடமை. ஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயமாய் ஏதாவது ஒரு விதத்தில் உங்களைப் பாதிக்கும்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்
:
o பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு அதற்கானத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.
o என்ன செய்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்
.
o அதற்கு ஒத்து வருகிறாரா? என்று ஆராய்ந்து பாருங்கள்.
o இருவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினை நோக்கிச்செல்லுங்கள்.
o ஆனால், தீர்வு காணாமல் விட்டு விடாதீர்கள்.
o ஏனென்றால் அது எப்போதாவது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்பும்.
பழைய நிலைக்குத் திரும்புங்கள்:
இப்போது அந்த மனநிலை மாறி விட்டதென நீங்கள் நினைத்தால், அந்த நபரை இயல்பான சூழ்நிலைக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டால், கசப்புகளை நிச்சயமாக மறந்து இயல்பாகப் பேசுங்கள். கசப்புகளை, கோபங்களை மனத்திற்குள் வைத்து வெறும் ஒப்புக்குச் சிரிக்காதீர்கள். இப்போது அவரும் நீங்களும் நிச்சயமாக பழைய, இயல்பான, சுமூகமான, நட்பான சூழ்நிலைக்கு வந்து விட்டால் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்த அந்த விஷயத்தைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
இது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்குத் துணைபுரியும். இதனையே உங்களின் குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் கூடச் செயல்படுத்திப் பார்க்கலாம்.
முனைவர் க. அருள், எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி.
என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.-SSK