Total Pageviews

Saturday, May 11, 2013

கார் வாங்கலாம் வாங்க !



மிடில் கிளாஸ் மக்களின் கனவுகளில், முதல் இடத்தில் இருப்பது சொந்த வீடும், காரும்தான். ஆனால், தேவைக்கும் பயன்பாட்டுக்கும் சரியான கார் எது என்பதைத் தேர்ந்தெடுப்பதில், பலருக்கும் குழப்பம் துவங்குகிறது. பெரிய எஸ்யூவி காரை வாங்க வேண்டியவர்கள், மாருதி ஈக்கோ போன்ற காரை வாங்கிவிட்டு விழி பிதுங்குவதும், ஹூண்டாய் ஐ10 வாங்க வேண்டியவர்கள், மஹிந்திரா ஸைலோ வாங்கிவிட்டுப் புலம்புவதும் வாடிக்கை. உங்களுக்கான சரியான காரைத் தேர்ந்தெடுப்பதின் மூலம், பல லட்சங்கள் விரயமாவதைத் தடுக்க முடியும். உங்களுக்கான கார் எது?

 

முதலில், கார் வாங்க முடிவெடுத்தவுடன் உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ஒரு பேப்பரில் எல்லோருடைய தேவைகளையும் எழுதுங்கள்.



காரில் அடிக்கடி நிறையப் பொருட்களுடன் பயணிக்க வேண்டியது இருக்குமா? அப்படி என்றால், எவ்வளவு பெரிய டிக்கி வேண்டும்? அல்லது வீக் எண்ட் ஷாப்பிங் மட்டும்தானா?



நீங்கள் அதிகம் பயணிப்பது, முன் சீட்டிலா அல்லது பின் சீட்டிலா? அப்பா, அம்மா போன்ற வயதானவர்கள் அதிகம் பயணிப்பார்களா அல்லது சின்னக் குழந்தைகள் மட்டும்தான் பின் பக்க இருக்கைகளில் உட்கார்வார்களா?



தினமும் எவ்வளவு தூரம் பயணிப்பீர்கள்? நகருக்குள் அதிகம் பயணிப்பவரா அல்லது வேலை அல்லது தொழில் நிமித்தம் அடிக்கடி காரில் வெளியூர்களுக்குப் பயணம் செய்ய வேண்டியது இருக்குமா?



பெட்ரோல் காரா, டீசல் காரா? இப்படி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டு, அதற்கான பதில்களை அந்தத் தாளில் எழுதுங்கள்.



பேப்பரில் எழுதி முடித்த உடனே, புதிய காரில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடும். உங்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் கார்கள் எவையெல்லாம் இருக்கின்றன என்று தேடுங்கள்.  அடுத்து, காரின் பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள்.



பட்ஜெட்



உங்கள் பட்ஜெட் என்ன? அதில் நீங்கள் பட்டியலிட்ட வசதிகள் கொண்ட கார் எதெல்லாம் மார்க்கெட்டில் இருக்கின்றன என்று பாருங்கள். நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்திருக்கும் பட்ஜெட்டைவிட, நீங்கள் வாங்கும் கார் ஒரு லட்சம் ரூபாய் முன்னும் பின்னும் இருக்கலாமே தவிர, அதற்கு மேல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம், கார் வாங்குவதோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அதற்குப் பிறகு எரிபொருள் செலவு, மெயின்டனன்ஸ், சர்வீஸ் செலவுகள் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



புது காரா, பழைய காரா?



பட்ஜெட் முடிவானதும் புதிய காரா அல்லது பழைய காரா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்ப்பது எஸ்யூவி. ஆனால், உங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை என்றால், பழைய காரை வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.



பெட்ரோலா, டீசலா?



'பெட்ரோல் கார் என்றால் மெயின்டனன்ஸ் குறைவு, டீசல் கார் என்றால் அதிகச் செலவு வைக்கும்’ என்பதெல்லாம் பழைய புராணம். காமென் ரெயில் டீசல் இன்ஜின், டர்போ சார்ஜர் என பல நவீனத் தொழில்நுட்பங்களுடன் பெட்ரோல் இன்ஜினை மிஞ்சும் அளவுக்கு டீசல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால், டீசல் இன்ஜினின் மெயின்டனன்ஸ் குறித்து கவலைப்பட வேண்டாம். அதே சமயம், பெட்ரோல் மாடலைவிட, டீசல் மாடலின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் அதிகம் என்பது நினைவிருக்கட்டும். அதிக தூரம் பயணிக்க மாட்டோம் என்பவர்கள், டீசல் கார் வாங்க வேண்டிய தேவையே இல்லை. டீசல் காரை வாங்கும் போது கூடுதலாகக் கொடுக்கும் 1 லட்சம் ரூபாய்க்கு, நீங்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பெட்ரோல் காரில், எரிபொருள் செலவைச் சரிக்கட்டலாம்.

 

என்னென்ன வசதிகள் வேண்டும்?



மியூசிக் சிஸ்டம், ஏ.சி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் போன்ற வசதிகள் ஒரு காருக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பாதுகாப்பு வசதிகளும் முக்கியம். காற்றுப் பை, ஏபிஎஸ் பிரேக் வசதிகள் கொண்ட காரை வாங்குவது பாதுகாப்பானது. 50,000 ரூபாய் கூடுதலாகப் பணம் செலுத்த வேண் டும் என்பதற்காக, பாதுகாப்பு வசதிகளைப் பின்னுக்குத் தள்ளக் கூடாது.



நீங்கள் வாங்குவது புது காரா?



உங்களுக்கான காரைத் தேர்ந்தெடுத்ததும், அதில் புது மாடல் எதுவும் வர இருக்கிறதா அல்லது இந்த காரையே கம்பெனி விரைவில் நிறுத்தும் எண்ணத்தில் இருக்கிறதா என்பதைத் தீர ஆராய்ந்துவிட்டு முடிவெடுங்கள். உதாரணத்துக்கு, இப்போது ஹோண்டா சிட்டி காரை வாங்குவது லாபகரமான விஷயம் இல்லை. காரணம், புதிய மாடல் ஹோண்டா சிட்டி, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் டீசல் இன்ஜினுடனேயே வெளிவர இருக்கிறது. இந்த நேரத்தில், புதிதாக ஹோண்டா சிட்டி வாங்குவது லாபகரமான விஷயமாக இருக்காது.



கார் வாங்க சிறந்த நேரம்!



கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் பிசினஸ் டல் மாதங்கள். இந்த மாதங்களில் அதிக டிஸ்கவுன்ட் கிடைக்கும் என்பதால், இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், வாரத்தின் மூன்றாவது, நான்காவது வாரங்களில் டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது. எப்போதுமே டீலர்களிடம் சேல்ஸ் டார்கெட் இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில் டார்கெட்டை முடிப்பதற்காக டிஸ்கவுன்ட், ஆக்சஸரீஸ் சலுகைகள் என வாரி வழங்குவார்கள். அதனால், மூன்றாவது, நான்காவது வாரத்தில் டீலர்ஷிப்பை நோக்கிப் படையெடுப்பது நல்லது.



டெஸ்ட் டிரைவ் பண்ணுங்க!



நீங்கள் ஓட்டுவதற்கு எந்த கார் சிறந்த காராக இருக்கிறது, உங்களுக்கு கியர் பாக்ஸ் பயன்படுத்த எளிதாக இருக்கிறதா? உங்கள் குடும்பத்தினர் காருக்குள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடிகிறதா? டிக்கியில் பொருட்கள் வைக்க அதிக இடம் இருக்கிறதா? என்றெல்லாம் பார்க்க, காரை டெஸ்ட் செய்து விட்டுத்தான் வாங்க வேண்டும்.



டெஸ்ட் டிரைவின் போது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் கருத்துகளும் முக்கியமானதாக இருக்கும். பல விஷயங்களை அவர்கள் வேறு கோணத்தோடு அணுகுவார்கள். அவர்களுக்கு கார்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.



கார் லோன்



கார் வாங்குபவர்களில் 75 சதவிகிதம் பேர் லோன் மூலம்தான் கார் வாங்குகிறார்கள். தனிப்பட்ட முறையில் கார் வாங்க வங்கிகளை அணுகலாம். ஆனால், நீங்கள் உங்கள் கம்பெனிக்காக வாங்குகிறீர்கள் என்றால், இப்போது லீஸிங் முறையில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அர்வால், லீஸ் பிளான், ஒரிக்ஸ் போன்ற கம்பெனிகள் கார் லீஸிங்கில் ஈடுபட்டு வருகின்றன. இதில், அர்வால் எனும் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற சர்வதேச நிறுவனமாகும்.



கார் லீசிங் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, தனி நபர் லோன் பற்றிப் பார்ப்போம்.



கார் வாங்குவதற்கான முழுத் தொகையையும் கடனாகத் தர மாட்டார்கள். காரின் வகையைப் (ஹேட்ச்பேக், செடான்...) பொறுத்து காரின் விலையில் 15 - 30 சதவிகிதத் தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஒருவர் நான்கு லட்ச ரூபாய் விலைகொண்ட ஹூண்டாய் ஐ10 காரை வாங்குகிறார் என்றால், அவர் கிட்டத்தட்ட 80,000 - 1 லட்சம் ரூபாயை முன்பணமாகச் செலுத்த வேண்டும். மீதித் தொகைக்குத்தான் கடன் கொடுப்பார்கள்.



பொதுவாக, முன் பணத்தை (Down Payment) எவ்வளவு அதிகமாகச் செலுத்த முடியுமோ, அவ்வளவு அதிகமாகச் செலுத்திவிடுவது நல்லது. வாங்கும் கடனை 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். கடன் திருப்பிச் செலுத்தும் ஆண்டுகளை எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் நீங்கள் கட்டும் வட்டித் தொகை குறைவாக இருக்கும்.



எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதைத் தீர விசாரியுங்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். தனியார் வங்கிகளில் உடனடியாக கடனுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், சில இடங்களில் அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படும். கடன் வாங்கும்போதே மறைமுகக் கட்டணங்கள் (Hidden Charges)  எதுவும் இருக்கிறதா என்பதை நன்கு விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.



பழைய கார்களுக்கும் கடன் தரப்படுகிறது. ஆனால், இதற்கான வட்டி விகிதம் புதிய கார்களைவிட 2 முதல் 4 சதவிகிதம் வரை அதிமாக இருக்கும். அதேபோல, மிகப் பழைய கார்களாக இருந்தால், அதற்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. அதாவது, பொதுவாக ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்களாக இருந்தால், கடன் கிடைக்காது.



லீஸிங்



கார் லீஸிங் முறையில் முன்பணம் அதாவது, டவுன் பேமென்ட் கிடையாது. 5 லட்சம் ரூபாய் காருக்கு, நீங்கள் 1 லட்சம் ரூபாய் முன் பணம் கட்டி 80 சதவிகிதத் தொகைக்கு 3 வருடங்களுக்கு லோனில் கார் வாங்குகிறீர்கள் என்றால், 12,888 ரூபாய் மாதந்தோறும் இ.எம்.ஐ (வட்டி விகிதம் 10.5 சதவிகிதம்) கட்டுவீர்கள். அதுவே லீஸ் என்றால், முன் பணம் கட்ட வேண்டாம். அதற்குப் பதில் 3 வருடங்களுக்கு, மாதந்தோறும் 16,892 ரூபாய் இ.எம்.ஐ(வட்டி விகிதம் 14 சதவிகிதம்) கட்டுவீர்கள். 3 வருட முடிவில், கம்பெனி பெயரில் இருந்து உங்கள் பெயருக்கு காரை மாற்றிக் கொள்ள நீங்கள் இ.எம்.ஐ தொகையில் 10 சதவீதம் பணத்தைக் கட்ட வேண் டும். இதில் 5 லட்சம் ரூபாய் கார் என்றால், 3 வருட முடிவில் சுமார் 62,000 ரூபாய் செலுத்தினால், கார் உங்கள் கைக்கு கிடைத்துவிடும்.



இப்போது நீங்கள் இ.எம்.ஐ திட்டத்தில் கார் வாங்கியிருந்தால், முன் பணம் 1 லட்சம் மற்றும் 3 வருட இ.எம்.ஐ சேர்த்து 5,63,975 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். இதே லீஸ் என்றால் 6,08,103 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள்.



நீங்கள் மாதாமாதம் கட்டிய இ.எம்.ஐ தொகையை வருமான வரியில் கழித்துக் கொள்ளலாம் என்பதுதான் லீஸிங்கின் பெரிய ப்ளஸ். கம்பெனிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

 

ஆனால், லீஸிங்கில் வாங்குவதில் சில குறைகளும் உண்டு. லீஸ் காலகட்டத்தில் கார் இருக்கும்போது, காரில் நீங்கள் எந்த மாடிஃபிகேஷன் அதாவது தனியாக மியூஸிக் சிஸ்டம் வாங்குவது, அலாய் வீல் மாட்டுவது என எதையும் செய்ய முடியாது. அதேபோல், லீஸ் காலம் முடியும் வரை உங்கள் பெயரில் கார் இருக்காது.



கார் எக்ஸ்சேஞ்ச்



நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் காரைக் கொடுத்துவிட்டு, புதிதாக கார் வாங்குகிறீர்கள் என்றால், புது காருக்கான டீல் முடியாமல் பழைய காரைப் பற்றி வாய் திறக்காதீர்கள். உங்கள் புதிய காருக்கான சலுகைகள் எல்லாம் இறுதியான பிறகு, உங்கள் பழைய காரை எவ்வளவு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்று கேட்டு, அதன் பிறகு அந்த டீலை முடியுங்கள். ஒரே சமயத்தில் இரண்டையும் சொன்னால், ''உங்கள் பழைய கார் இந்த ரேட்டுக்குப் போகாது சார். உங்களுக்காகத்தான் இவ்வளவு விலைக்கு எடுத்துக்குறோம். புது காரில் பெரிதாக எந்த டிஸ்கவுன்ட்டையும் எதிர்பார்க்காதீர்கள்'' என்று சொல்லி சேல்ஸ்மேன்கள் காது குத்தப் பார்ப்பார்கள். உஷார்!



ரிஜிஸ்ட்ரேஷன்



காரை ரிஜிஸ்டர் செய்வதற்கு முன்பு, உங்கள் காரை ஒருமுறை டீலர்ஷிப்பிலேயே நேரில் போய் பார்த்துவிடுவது நல்லது. ஸ்க்ராட்ச் இருக்கிறதா அல்லது எவ்வளவு கி.மீ கார் ஓடியிருக்கிறது என்று பார்ப்பது மிகவும் முக்கியம். காரின் ஓடோ மீட்டர் ரீடிங் 50 கி.மீ-க்குள் இருந்தால் ஓகே. அதற்கு மேல் ஓடியிருந்தால், அந்த காரை வேறு வேலைக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அதிக கி.மீ ஓடியிருந்தால், அதிக டிஸ்கவுன்ட் கேட்டு வாங்கலாம்.



புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் லாபமா?



சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆடி, பிஎம்டபிள்யூ, வால்வோ உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்கள் புதுச்சேரி நம்பர் பிளேட்டுடன் வலம் வருவதைப் பார்க்கலாம். புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்வதற்குக் காரணம் குறைந்த வரி என்பதுதான். தமிழகத்தில் 10 லட்ச ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட கார்களுக்கு 20 சதவிகிதம் சாலை வரி. ஆனால், புதுச்சேரியில் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கார்களுக்கு 55,000 ரூபாய் மட்டுமே வரி.



மேலும், 'புதுச்சேரியில் காரை ரிஜிஸ்டர் செய்ய தற்காலிக முகவரி இருந்தாலே போதுமானது’ என்ற விதிமுறை முன்பு இருந்தது. அதனால் ஏஜென்ட்டுகள், கார் டீலர்களே அவர்களது முகவரியை தற்காலிக முகவரியாகவும், கார் உரிமையாளர்களின் முகவரியை நிரந்தர முகவரியாகவும் போட்டு, ரிஜிஸ்டர் செய்து தருவார்கள். இதனால், பெரிய கார்களை புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்வதால், பல லட்சம் ரூபாய் லாபம் பார்த்து வந்தார்கள்.



புதுச்சேரியின் இந்த விதிமுறைக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், காரை ரிஜிஸ்டர் செய்ய, புதுச்சேரியை நிரந்தர முகவரியாகக் கொண்ட வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு அல்லது பான் கார்டு உள்ளிட்ட முகவரிச் சான்றிதழ்கள் வேண்டும் என அறிவித்திருக்கிறது புதுச்சேரி அரசு.



அதனால், இப்போது புதுச்சேரிக்கு காரைக் கொண்டுசெல்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதோடு, இது சட்டப்படியும் தவறு!



இரவில் டெலிவரி வேண்டாம்!



காரை டெலிவரி எடுக்கும்போது, பகல் நேரத்திலேயே டெலிவரி எடுங்கள். அப்போதுதான் காரில் சிராய்ப்புகள் ஏதும் இருக்கிறதா, நீங்கள் கேட்ட ஆக்சஸரீஸ் அனைத்தும் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். ''ஃப்ளோர் மேட் இப்போது இல்லை. அடுத்த வாரம் வாங்க சார். நீங்கள் கேட்ட மியூசிக் சிஸ்டம் இல்லை. அதற்குப் பதில் இதைப் பொருத்தி இருக்கிறோம்'' என்று சேல்ஸ்மேன்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மியூசிக் சிஸ்டம் அல்லது அலாய் வீல் மாறியிருந்தால், அதற்கு நீங்கள் டிஸ்கவுன்ட் கேட்கலாம்.



காரை நீங்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள் என்பதால், இதைக் கேட்கலாமா? இதைக் கேட்டால் ரொம்பவும் கேவலமாக நினைத்து விடுவார்கள் என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். காரை வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. அந்த காரோடு அடுத்த 10 வருடங்கள் வாழ இருக்கிறீர்கள் என்பதால், காரை வாங்கும்போது மிகவும் கவனமாக இருங்கள்.



ஆல் தி பெஸ்ட்!



- சார்லஸ்

Thanks to Motor Vikatan



No comments:

Post a Comment

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...