Total Pageviews

Monday, May 27, 2013

மதுவை ஒழித்து, மக்களைக் காப்போம்



மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து, சீரழித்து, சின்னாபின்னமாக்குகின்ற மது என்ற கொடிய அரக்கனை, எமனை, விஷத்தை, தமிழ்நாட்டிலிருந்து விரட்ட வேண்டும்.


தமிழ்நாட்டின் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில்  உள்ள திருமணமான ஆண்களில் பெரும்பாலானவர்கள் இப்போது மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். குடும்பங்களின் மீது பற்றின்றி, தன் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் குறித்த சிந்தனை இன்றி, வேலைக்குச் செல்வது – கிடைக்கும் பணத்தில் குடிப்பது – ஒன்றையே கடமையாகக் கொண்டுள்ளனர். 

கூலி வேலையில்லாத நாள்களில், "நேற்று கொடுத்த கூலியைக் கொடு’ என்று மனைவியிடம் தகராறு செய்து, கொடுக்காவிட்டால் அடித்து உதைத்து வாங்கிச் செல்கின்றனர்.

பெண்களின் நிலையைக் கூறிடவே மனம் துடிக்கிறது. வருகின்ற சொற்ப 
வருமானத்தில் தினத் தண்டல், வாரத் தண்டல், மகளிர் குழுக் கடன், குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, வயிற்றுப் பசிக்கு என்று செலவுகளை மிகுந்த துயரத்தோடு அங்குமிங்கும் கடன் வாங்கிச் சமாளிக்கிறார்கள். குடிகாரக் கணவனை மாற்றவும் முடியாமல் திருத்தவும் முடியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அடி – உதைகளைத் தாங்கிக்கொண்டு குடிகாரக் கணவனோடு வாழ்கிறார்கள்.


பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் கதை இதுவென்றால், "நாளைய தமிழகம்’ என்று வர்ணிக்கப்படும் இளைஞர்களின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். ஹான்ஸ், பான்பராக், மாவா போன்ற போதைப் பொருள்களையும் சேர்த்தே பயன்படுத்துகின்றனர்.

இவர்களைப் பார்த்து இவர்களுடைய தம்பிமார்களான பள்ளிக்கூட மாணவர்களும் பீர், சிகரெட் ஆகியவற்றைப் பழகிக்கொண்டுவருகிறார்கள்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்தாலும், மரணம் ஏற்படுத்தும் விபத்துகள் மட்டுமே பதிவாகின்றன. அதிலும் குடிபோதை விஷயம் முக்கியப்படுத்தப்படுவதில்லை. எனவே இதன் தீமை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. குடிகாரர்கள் தங்களுடைய குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், தாங்கள் பணி புரியும் இடத்திலும் பஸ், ரயில் போன்ற பொது இடங்களிலும்கூட வம்புச் சண்டை இழுத்து பொது அமைதியைக் குலைக்கிறார்கள்.



குடிகாரர்கள் புற்றுநோய், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களுக்கும் ஆளாகிவருகின்றனர். சாராய வருமானத்தைவிட அதிக அளவு பொது சுகாதாரத்துக்குச் செலவிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

குடும்பங்களின் வருமானம் குறைந்து வறிய நிலை நோக்கி வேகமாகச் செல்லத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்ற நினைக்கும் முதல்வரின் கனவுக்கு இது பெருத்த இடையூறாகவே அமையும் என்பதால் மதுவை ஒழிக்கும் முயற்சியில் முதல்வர்  உடனே இறங்க வேண்டும்.

தமிழக முதல்வர் ஏழைகளிடத்தில் பாசமும், சட்டத்தை மீறுகிறவர்களிடத்தில் கண்டிப்பும் காட்டும் பண்புள்ளவர். எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் கடத்துவதையும் காவல்துறை உதவியுடன் தடுத்து தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே மதுவை எதிர்ப்பவர்களின் வேண்டுகோள்.

நன்றி-தினமணி



No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...