Total Pageviews

Thursday, February 25, 2016

பாசம், அன்பு !

அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.

அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.

மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.

மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.

அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான். மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.

அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.

மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.

ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.

இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.

அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.

அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.

இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். வாழ்கவளமுடன்!!!

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...