Total Pageviews

Saturday, September 28, 2019

எலக்ட்ரிக் வாகனங்களும், பொதுவான சந்தேகங்களும்...

எலக்ட்ரிக் வாகனங்களும், பொதுவான சந்தேகங்களும்...

பேட்டரி வாகனங்கள் பற்றிய புரிதல், மக்களிடையே மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் அதுபற்றிய சந்தேகங்கள் மட்டும் ஏராளமாக இருக்கின்றன.

எதற்காக பேட்டரி வாகனங்களை வாங்க வேண்டும்?, அதை பெட்ரோல்-டீசல் வாகனங்களை போல பயன்படுத்த முடியுமா?, சார்ஜ் செய்வது சுலபமா?, பெட்ரோல்-டீசல் வாகனங்களை விட, எலக்ட்ரிக் வாகனங்கள் லாபமா?, இந்திய பொருளாதாரத்திலும், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றங்களை கொண்டுவருமா?... போன்ற பல கேள்விகள் நம் மனதிலும் எழுவதுண்டு. அப்படி பொதுமக்கள் முணுமுணுக்கும் சந்தேக கேள்விகளுக்கு, ‘கூகுள்’ தேடலின் மூலம் விடை காண முயன்றிருக்கிறோம்.

* ஏன் மாறவேண்டும்?

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்பது மிகமுக்கிய காரணமாக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியும், பேட்டரி வாகனங்களுக்கான தேவையை அதிகப்படுத்தியிருக்கிறது. கச்சா எண்ணெய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கங்கள், அதன் கொள்முதலில் இருக்கும் சர்வதேச சிக்கல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு என பெட்ரோல்-டீசலுக்கு ஏராளமான கெடுபிடிகள் உருவாகியிருப்பதால், இந்திய அரசாங்கம் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க தொடங்கி இருக்கிறது. அதேசமயம், வெப்பமயமாதலை தவிர்க்கும் பார்முலாவாகவும், எலக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்றன.

* சாத்தியமா?

சாத்தியமாக்கவேண்டிய முயற்சிதான். ஏனெனில் இதை சீன மக்கள், சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அமெரிக்கர்களை விட, இருமடங்கு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கெடுத்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான எலக்ட்ரிக் வாகனங்கள் உலாவருவதும் சீனாவில்தான். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, நார்வே, ஜப்பான், இங்கிலாந்து என எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் நீள்கிறது.

நாம் இன்றிலிருந்து தொடங்கினால் கூட, 2025-ம் ஆண்டில் எரிபொருளை புறக்கணிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடமுடியும்.

* வளரும் நாடான இந்தியாவிற்கு பொருந்துமா?

புதுமைகளை விரும்பும் இந்தியர்களும், எலக்ட்ரிக் வாகனங்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களையும், சந்தைப்படுத்தப்படும் வண்டிகளையும் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் புனே, டெல்லி ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரிவோல்ட்’ எலக்ட்ரிக் பைக்கின் முன்பதிவு, தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முடிந்துவிட்டது.

இந்தியாவில் நிலவும் எரிபொருள் விலையேற்றமும், பேட்டரி வாகனங்கள் மீதான வரவேற்பை அதிகப் படுத்துகிறது. சமீபகாலமாக இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால், பேட்டரி வாகன திட்டம் விரைவிலேயே வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

* மக்களுக்கு என்ன பயன்?

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளின்படி எலக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல்-டீசல் வண்டிகளை விட, அதிகளவில் ‘மைலேஜ்’ தருவது நிரூபணமாகி இருக்கிறது. அதேசமயம், பெட்ரோல்-டீசல் விலை மற்றும் மின்சார விலை, மைலேஜ் விஷயங்களை ஒப்பிட்டு பார்த்தால், எலக்ட்ரிக் வண்டிகள் லாபகரமானதாகவே தோன்றுகின்றன.

உதாரணத்திற்கு, பெட்ரோல் வாகனம் ஒன்று 5 லிட்டர் பெட்ரோலில், 100 கிலோமீட்டர் ஓடுகிறது என்றால், எலக்ட்ரிக் வாகனத்தில் 100 கிலோமீட்டர் மைலேஜ் பெற, 10 கிலோவாட்ஸ் (10 யூனிட்) மின்சாரமே போதுமானதாக இருக்கிறது. அப்படி என்றால், 5 லிட்டர் பெட்ரோல் விலையையும், 10 யூனிட் மின்சார விலையையும் ஒப்பிட்டு பார்த்தால், குறைந்தது இரண்டு மடங்கு லாபம் கிடைப்பது தெளிவாகிறது.

* இருமடங்கு லாபம் எப்படி சாத்தியமாகிறது?

மின்சார வாகனங்களில் மின்சாரம் என்பது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இங்கே, பேட்டரி, மோட்டார், பியூஸ் மற்றும் கண்டக்டர் போன்ற இடங்களில் சில ஆற்றல் வீணாகி நமக்கு 80 சதவீதம் மெக்கானிக்கல் எனர்ஜியாக கிடைக்கும்.

பெட்ரோல் வாகனங்களை எடுத்துக்கொண்டால் கெமிக்கல் எனர்ஜியில் இருந்து வெறும் 35 சதவீதம் மட்டுமே நமக்கு மெக்கானிக்கல் எனர்ஜியாகக் கிடைக்கிறது. அதனால்தான், எலக்ட்ரிக் வாகனங்களில் இருமடங்கு ‘மைலேஜ்’ சாத்தியமாகிறது.

* நடுவழியில் பேட்டரி தீர்ந்து போனால்?

இது கொஞ்சம் தலைவலியான பிரச்சினைதான். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ள பெட்ரோல் பங்க் போன்று ஏராளமான சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு இந்த பிரச்சினை குறைவு. ஆனால் பேட்டரி வாகன பயன்பாட்டில், இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால், இத்தகைய சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு, புனே போன்ற இடங்களில் சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களும், பொதுவான சந்தேகங்களும்...அதேசமயம், பேட்டரி நடுவழியில் தீர்ந்து போனால், அதையும் சமாளிக்க சீனர்கள் மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான், ‘ஸ்டெப்னி பேட்டரி’. கார்களில் இருக்கும் ஸ்டெப்னி சக்கரங்களை போல, முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வைத்து கொள்ளும் பழக்கத்தையும் கடைப்பிடிக்கிறார்கள். மேலும் ‘ரோட் அசிஸ்ட்’ எனப்படும் சாலையோர வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அதாவது பேட்டரி வாகன நிறுவனங்களே, வண்டி நடுவழியில் நிற்கும் இடத்திற்கு சென்று, ஸ்டெப்னி பேட்டரிகளை வழங்கும் திட்டமும், அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

* ‘மாசு கட்டுப்பாடு’ உண்மைதானா?

அமெரிக்க அரசு நடத்திய ஆய்வில் மின்சார கார்களுக்கு மின்சாரம் தயாரிக்கும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு, கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல்-டீசல் எடுத்துப் பயன்படுத்தும் ஐ.சி. என்ஜின் கார்களைவிடக் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது. அதனால் மாசு குறைக்கப்படுகிறது. இதன்மூலம் ஓசோன் படலத்தின் ஆயுள் காலத்தையும், பூமியில் நிலவும் ஒழுங்கற்ற வெப்பநிலையையும் கட்டுப்படுத்த முடியும். மேலும் பூமியின் பசுமையையும், தக்கவைத்து கொள்ளமுடியும்.

* பொறியியல் மாணவர்களுக்கு என்ன பயன்?

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கும், பட்டயப்படிப்புகளை முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் பிரகாசமாகின்றன.

பேட்டரி தயாரிப்பு, பேட்டரி வாகன தயாரிப்பு, திட்டமிடல், உதிரி பாக தயாரிப்பு, தொழிற்சாலை பணிகள் வாயிலாக ஆட்டோமொபைல் தொழில்துறை மீண்டும் புத்துணர்ச்சி பெற வாய்ப்பிருக்கிறது.

டெஸ்லா, லெக்சஸ்... போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் சந்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால், பொறியியல் மாணவர்கள், ஒருசில கூடுதல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பை பெறலாம்.



வீட்டிலேயே சார்ஜ் போடலாம்

எலக்ட்ரிக் பைக்குகளை பொறுத்தவரையில், அதை நம் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகளையும், ஏற்பாடுகளையும் எலக்ட்ரிக் பைக் நிறுவனங்களே ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன.

நிறுவனங்களை பொறுத்து, 4 மணிநேரம், 6 மணிநேரம், 8 மணிநேரம்... என சார்ஜ் செய்யும் நேரம் மாறுபடுகின்றன. இரவு தூங்கும் நேரத்தில் சார்ஜ் செய்தால், காலை வேலைக்கு செல்ல எலக்ட்ரிக் பைக் தயாராகிவிடும். அதேசமயம் எலக்ட்ரிக் கார்களுக்கு, சோலார் வசதியுடன் கூடிய பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. அதனால் கார்களை பார்க்கிங்கில் நிறுத்தும் போதெல்லாம், சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.

Thanks to dailythanthi.com

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...