நமது நாட்டில் பெருகி வரும் சுகாதார சீர் கேட்டினால் நாம் நினைத்தே பார்த்திராத அளவுக்கு விதவிதமான நோய்கள் பரவி வருகின்றன.
பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு, மூளை காய்ச்சல், சிக்குன் குனியா என்று பல விதமான நோய்கள் படையெடுத்துள்ளன.
இவற்றில் சிக்குன் குனியா நோய் இப்போது இல்லை என்பது சற்று ஆறுதல் தரும் செய்தி. இருபது வருடங்களுக்கு முன்பு இந்த நோய் வேகமாகப் பரவி அநேகம் பேரை பலி வாங்கியதை அறிவோம்.
இவற்றை தவிர, என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத சில காய்ச்சல்களுக்கு 'மர்மக்காய்ச்சல்' என்று மருத்துவ உலகம் பெயரிட்டு விடுகிறது.
மேற்கண்ட நோய்கள் சிலவற்றுக்கு மருத்துவ உலகம் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. இதனால் நோயின் தீவிரத்திற்கு ஆளாகுபவர்கள் தப்பிப் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வித நோய்கள் பெரும்பாலும் சிறுவர்களையும் வயதானவர்களையுமே தாக்குகின்றன. காரணம், இவர்கள் நோயின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய உடல் திறனும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவர்களாக இல்லாததால் உயிரிழக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.
பெரும்பாலும் மழைக்காலத்தில் மட்டுமே தோன்றக் கூடிய இந்நோய்கள், கடும் கோடையிலும் தோன்றுகின்றன.
மற்ற மாநிலங்கள் எப்படியோ, தமிழகத்தை பொருத்த வரை சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை என்கிற நிலையே உள்ளது. வரும் முன் காப்பதற்கான நடவடிக்கைகளோ, வந்த பின்பு முழு வீச்சில் களம் இறங்கி களையும் போக்கோ சுகாதாரத் துறையிடம் காணப்படுவதில்லை.
சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பிய பின்னரே சுகாதாரத்துறை விழித்துக் கொள்கிறது. ஆனால் அதேசமயம் ஒட்டு மொத்தமாக சுகாதாரத் துறையையும் அரசையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சுகாதார சீர் கேட்டிற்கு மக்களாகிய நாமும் காரணமாகிறோம்.
பொது இடங்களில் சிறு நீர் கழிப்பது, எச்சில் உமிழ்வது, குப்பைகளை போடுவது போன்ற சுகாதாரச் சீர் கேடுகளை அன்றாடம் அரங்கேற்றி வருகிறோம்.
துர்நாற்றம் வீசாத பேருந்து நிலையங்களை பார்ப்பது அரிது. கழிப்பறை வசதி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பேருந்து நிலையத்தைச் சுற்றி, திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் அதிகம். போதிய கழிப்பறை வசதி இல்லை என்கிற குற்றச்சாட்டும், கழிப்பறைகள் சுத்தம் சுகாதாரத்துடன் இல்லை என்கிற கருத்தும் பரவலாக உள்ளது.
பாரதப் பிரதமரின் 'தூய்மை இந்தியா' திட்டத்தால் ஓரளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு வந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் அந்த உணர்வு வரவில்லை. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கிற வேறுபாடு இல்லை.
இன்னும் சொல்லப்போனால் மெத்தப் படித்தவர்களிடையேதான் சுகாதாரம் பற்றிய
விழிப்புணர்வு இல்லை எனலாம். அல்லது விழிப்புணர்வு இருந்தும் பொது
இடங்களில் அசுத்தம் செய்வது பற்றிய குற்ற உணர்வு இல்லாமையும் மற்றும்
ஒருவித அலட்சியப் போக்கும் இவர்களிடையே காணப்படுகிறது.
இதன் காரணமாக விதவிதமான நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கிறோம்.
நீர் நிலைகள், மழை நீர்க் கால்வாய்கள், வடிகால்கள் போன்றவற்றில் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதால் மழைக் காலத்தில் அடைப்பு ஏற்பட்டு தேங்கும் நீரோடு கழிவு நீரும் கலந்து கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
இதேபோன்று கழிவு நீர் கால்வாய்களில் வீசி எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் கழிவு நீரை தடுத்து தேக்கத்தை ஏற்படுத்தி கொசு உற்பத்திக்கு இடம் கொடுக்கிறது.
திறந்த வெளியில் சிறு நீர் கழிப்பது நோய் பெருக காரணமாவதோடு சுற்றுச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கிறது.
'இங்கு சிறு நீர் கழிக்காதீர்கள்' என்று எச்சரிக்கை பலகை வைத்தும் மீறுபவர்கள் மீது அபராதம் விதித்ததாக சரித்திரமே இல்லை. குப்பையை எரிப்பதால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மட்டுமின்றி புற்று நோயும் வருவதற்கு வாய்ப்புண்டு என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
ஆனால் யார் இதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்? குப்பையை எரிப்பது சட்டப்படி குற்றம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. சில இடங்களில் மாநகராட்சியே குப்பை கிடங்கை தீ மூட்டி எரித்து, வான் உயரத்திற்கு புகை மண்டலத்தை உருவாக்கி அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் பாதசாரி மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த பாதிப்பை உண்டாக்குகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே சுகாதாரச் சீர் கேடு விளைவித்தால் சமூகத்தில் எப்படி விழிப்புணர்வு வளரும்?
அடுத்து சாலையோர தின்பண்ட கடைகளும், விரைவு உணவகங்களும் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இவற்றில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் பற்றி சரியாக அறியாமல் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் இல்லாதுபோனால் அடுத்த தலைமுறைக்கு நாம் நோய்களைத்தான் கொடுத்து விட்டுப் போவோம்.
சுகாதாரத்தை நாம் வசிக்கும் இடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். முதலில் நமது இருப்பிடத்தைச் சுற்றி குப்பை கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுகாதாரம், தூய்மை பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே வளர்ந்துவிட்டால் நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்வதோடு மருத்துவமனை பக்கம் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா!
Thanks to Dinamani.com
No comments:
Post a Comment