Total Pageviews

Friday, June 7, 2024

வாழ்க்கையின் நோக்கம் !

 வாழ்க்கையின் நோக்கம் என்ன?

புகழும் பெருமையும் பெறுவதா?

அன்பையும் காதலையும் அனுபவிப்பதா?

வளத்தையும் வசதிகளையும் பெருக்கிக் கொள்வதா?

மதத்தையும் கடவுளையும் மதிப்பதா

 இல்லை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே எல்லை இல்லாமல் போகவேண்டும் என்பதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் படிப்பு, பதவி, பணம், குழந்தைகள், சொத்து என்று ஏதேதோ குறுக்கிட்டுள்ளன.

உங்கள் நோக்கத்தின் கவனத்தைத் திசை திருப்பியதில் அவற்றுக்கும் பங்கு உண்டு. அவை வாழ்க்கைக்கு நிறைவு தரும் தீர்வுகள் அல்ல என்பதால், எல்லாம் கிடைத்தும் அடுத்து என்ன என்று பதின் வயதில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு அறுபதில் வந்துவிட்டது.

வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை.

வாழ்க்கையின் முழு ஆழத்தையும் அகலத்தையும் வேர்வரை ஊடுருவி மனித மனம் எப்போதும் புரிந்துகொண்டது இல்லை. அதனால்தான், வாழ்க்கைக்கு மேலோட்டமான ஏதாவது நோக்கத்தை அது தேடிக்கொண்டே இருக்கிறது.

'முழுமையான நிறைவு இல்லாமல், உள்ளுக்குள் ஓர் ஆசைத் தீ எப்போதுமே எரிந்துகொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?'

இந்தக் கேள்வி கேட்கும் மனதை சிறிது காலத்திற்குச் சமாதானம் செய்துவைக்க, மகான்களின் தத்துவங்கள், மதக் கோட்பாடுகள், புராண விளக்கங்கள், மறைநூல்களின் சொல்லாக்கம் எல்லாம் பயன்படலாம். ஆனால் அடிப்படைக் கேள்வி காணாமல் போய்விடாது. விரைவிலேயே மீண்டும் தலை நிமிர்த்தி தவிப்பு ஏற்படுத்தும்.

வாழ்க்கையின் உண்மையான நோக்கம் முழுமையாக வாழ்வதுதான். அதை ஒழுங்காகச் செய்யவிடாமல், அதற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களை கரைத்துவிட்டால், வாழ்க்கை அதன் முழுமையை நோக்கித் தானாகவே மலரும்.

இந்தப் பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றே என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் ஆசை சட்டென்று அதன் தவிப்பை விட்டுவிடும்.

இந்த அறியாமையை எப்படிக் களைவது?

முறையான யோகாவின் மூலம் குறுகிய எல்லைகளை உடைக்க முடியும். பேரானந்தத்தை ருசிக்க முடியும். உங்கள் உச்சபட்ச சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், அப்புறம் இந்த உலகில்  வாழ்க்கையை ஆனந்தமாக வாழ முடியும்.

No comments:

Post a Comment

நிம்மதியான வாழ்க்கை என்றால் என்னென்ன இருக்க வேண்டும்?

  நிம்மதி என்றால் , எந்த ஒரு குழப்பமும் , கவலையும் , யோசனையும் இல்லாத நிலை … தேவையற்ற எண்ணங்களை சுமக்காமல் இருந்தாலே , நிம்மதியை...