நிலத்தடி நீர் பாதாளத்தில் இறங்கி மாசு அதிகரித்து வருவதாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை நகரிலும் சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மதுரை நகரிலும் சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீரின் தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தி மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் விவரம் வருமாறு: மதுரை நகரில் நிலத்தடி நீர் 300 முதல் 700 அடி வரை இறங்கி உள்ளது.
பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 59 நிலத்தடி நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 48 மாதிரிகள் குடிக்க உகந்ததாக இல்லை. நிலத்தடி நீரின் தன்மை மாறி மாசுபாடு அதிகரித்து கொண்டே போகிறது. சுமாரான நிலையில் இருந்து உப்புத் தன்மைக்கு மாறி உள்ளது. நகரின் மத்திய பகுதியில் வைகை ஆறு சென்றாலும், ஆற்றுக்குள் ஊரும் ஊற்று நீரும் மாசுபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலக்கிறது
.
பாதாள சாக்கடை முழுமையாக நிறைவேறிய பகுதிகளில் நிலத்தடி நீரில் நோய் தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள் குறைவாக உள்ளன. பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை இயங்க வேண்டும். பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலக்காமல் தடுக்கப்படுவது முக்கியமாகும். நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
மதுரை நகரிலும் சுற்றிலும் 38 கண்மாய்கள் இருந்துள்ளன. இதில் பல கண்மாய்கள் அழிக்கப்பட்டு அரசு அலுவலகம், மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நீதிமன்ற கட்டிடங்களாக மாறி விட்டன. பல்வேறு கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழிந்துள்ளன.
வண்டியூர், மாடக்குளம், செல்லூர், கொடிக்குளம், தென்பரங்குன்றம் உள்ளிட்ட சில கண்மாய்கள் தப்பி உள்ளன. அதுவும் மண்மேடாகி நீர் கொள்ளளவு குறைந்துள்ளது. இதை சீரமைத்து மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை காக்க தவறினால் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் இறங்கி, மக்கள் அனைத்து தேவைகளுக்கும் குடிநீரை பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலம் குடிநீர் தேவை அதிகரித்து தட்டுப்பாடு கூடுதலாகும். அதை சமாளிக்க முடியாமல் மாநகராட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இந்த ஆபத்தை தடுக்க முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். .
Thanks to Dinakaran