Total Pageviews

Monday, March 19, 2012

மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!
மனிதனுக்கு மனம்தான் அஸ்திவாரம். எல்லா விஷயங்களும் இங்குதான் ஆரம்பமாகிறது. மனிதனின் உடல் மரம் போன்றது. அதன் ஆணி வேர் மனம். மரத்தின் மேலே தெரியும் தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்கிறோம். ஆனால் ஆணிவேர் மோசமாகிக் கொண்டே இருந்தால் மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி இலையோ, பூவோ, காயோ, கனியோ மோசமாகிக்கொண்டே தான் இருக்கும். நாம் பல நேரங்களில் இலை இலையாகப்பார்த்து, காய்காயாகப் பார்த்து, பழம்பழமாகப்பார்த்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறோம். வேரை கவனிக்காவிட்டால் ஒரு நாள் மரமே (மனமே) பட்டுப்போய்விடும்.

இன்று மனித மனம் பலகீனமாக இருந்து கொண்டிருக்கிறது. அதை பலப்படுத்தும் முயற்சிகளில் நாம் இறங்காமல், கூடுதலான வேலைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதற்கு கொடுத்து மென்மேலும் அதை பலகீனமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது உடல் பலகீனமாவது தெரிந்ததும், உடனே வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வு, மருந்து என்று சிந்திக்கிறோம். ஆனால் மனதை கவனிப்பதும் இல்லை. தேவைக்கு ஓய்வு கொடுப்பதும் இல்லை. அதனால் ஆர்வமற்ற நிலையில் வேலைகளை செய்யவேண்டியதாகி விடுகிறது. வேலையை ஆர்வத்தோடு அனுபவித்து செய்தால், அதிலே மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் ஆர்வமின்றி, கடனே என்று வேலையை செய்வதால், வேறு வழியில் மகிழ்ச்சியை தேடவேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

`பேலன்ஸ்செய்வது, அதாவது சமநிலையை கையாளுவதில் நமக்கு பக்குவம் குறைவு. வேலையாக இருந்தாலும், பொழுதுபோக்காக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் ஒன்று, அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுகிறோம். முக்கியத்துவம் கொடுக்கி றோம். நெருங்குகிறோம்.

இல்லாவிட்டால் அத்தனையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அதில் இருந்து முழுமையாக விலகி ஓடி விடுகிறோம். இதில் எல்லை என்பது நமக்கு தெரிவதில்லை.

மனதை சரி செய்தால்தான் நம்மால் எல்லையை உணர முடியும். எல்லையை உணர்ந்தால் தான் எல்லை வரை மகிழ்ச்சியை அனுபவிக்கவும், எல்லை மீறாமல் இருக்கவும் முடியும். மனதை சரிசெய்ய அதன் மீது கவனம்செலுத்த வேண்டும்.
தியானம் என்பது இன்று எல்லோரும் உச்சரிக்கும் சொல். தியானம் என்றால், கவனம் என்றுதான் அர்த்தம். உங்கள் கார் மீது, செல்போன் மீது, வீட்டின் மீது, உறவினர்கள் மீது கவனம் வைத்திருக்கிறீர்கள். அதுபோல் மனதின் மீது கவனத்தை முழுமையாக விஞ் ஞான ரீதியாக செலுத்துவதுதான் தியானம்.

`நீங்கள் யாரை எல்லாம் கவனிக்கிறீர்கள்?’- என்று உங்களிடம் கேட்டால், `வீடு, மனைவி, மக்கள், அலுவலகம்.. என்று பலவற்றை அடுக்குவீர்கள். `நான் என்னையும் கவனித்துக் கொள்கிறேன்என்றும் சொல்வீர்கள். `நான்என்று நீங்கள் உங்கள் உடலைத்தான் சொல்வீர்கள். மனதை சொல்வதில்லை.

மனதே சரியில்லை என்ற வார்த்தை இப்போது ரொம்ப மலிந்துபோய்விட்டது. கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் உபன்யாசம் கேட்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்களை கேட்கும் அந்த நேரத்தில், மனது நன்றாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது என்று கைதட்டுகிறோம்.

 அங்கிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மீண்டும் பழைய குழப்பங்கள், பிரச்சினைகள், சச்சரவுகள். மீண்டும் போவோம்.. வருவோம்.. ஆனால் அங்கு வார்த்தைகளில் கிடைத்ததை, அவர்களால் வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் வாழ்க்கை, குழப்பம் நிறைந்த மனதின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம், கவனம் செலுத்தி நம் மனதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், நம்மைச் சார்ந்த யார் மனதையும் நம்மால் கவனிக்க முடியாது. நமது மனைவி, குழந்தைகள் மனதைக்கூட கவனிக்க முடியாது.
இந்த உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்று சொன்னால், அது நல்ல ஆசை!
ஆனால்..
- உங்களிடம் உணவு இருந்தால்தான் அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.
-உங்களிடம் பணம் இருந்தால்தான் அடுத்தவர் களுக்கும் கொடுக்க முடியும்.
அதுபோல் உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முடியும். அதனால் இந்த உலகம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
விளக்கம்: சகோதரி ஜெயா, பிரம்மகுமாரிகள் இயக்கம்.

No comments:

Post a Comment

நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்

      நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுத...