திருநங்கையர்களுக்கு தமிழக அரசு தக்க உரிமையும், பாதுகாப்பும் வழங்கி வந்தாலும், தனி நபர் அளவில் செய்யும் முயற்சிகளே அவர்களை மற்றவர்களுடன் சரிசமமாக வாழ வைக்க உதவுகிறது என்பதை உமா மகேஸ்வரியும், சமூக சேவகர் மெரோலின் சகாய ராணியும் நிரூபித்துள்ளனர்.
சமூகமும், குடும்பத்தாரும், அரசும் திருநங்கையர் சமூக அந்தஸ்துடன் வாழ்தலுக்கான உரிமைகளை அளிக்கவேண்டும்.
அரவாணியர் அல்லது திருநங்கையர் என்று சமீப காலமாக சற்று மரியாதையுடன் விளிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்நிலை ஒன்றும், கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரக் கல்லாக இல்லை. பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னும் கேலிப் பொருளாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவுமே அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். தெருவில் நடந்து செல்லும் அவர்களை, வினோதமாக வேடிக்கைப் பார்க்கும் வழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் தவிர, மற்றெங்கும் அவர்கள் மதிக்கப்படுவதாகக் காணோம். அங்கும் கூட அவர்களின் வாழ்நிலை, ஏதோ சில உரிமைகளைப் பெற்றிருக்கிறதே தவிர, அடி மட்டத்திலிருந்து மேலெழும்பி நிமிரவில்லை. இதே நிலைதான் நாடு முழுவதும் இருக்கிறது.
தமிழகம் தாண்டி மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் ஏதோ அவர்களுக்குக் கொஞ்சம் அந்தஸ்த்து கிடைத்திருப்பது தெரிகிறது. அவ்வளவு தான்!
உடலமைப்பால் ஆணாகவும் மன உணர்வால் பெண்ணாகவும் தங்களைப் பாவித்துக் கொள்ளும் அவர்கள், தங்கள் உணர்வுகளை அங்கீகரியுங்கள் என்று விடுக்கும் கோரிக்கைகள், அர்த்தமுள்ளவை. சமூக அந்தஸ்துடன் வாழ்தலுக்கான தங்களின் உரிமைகளைப் பெற அவர்கள் நடத்தும் போராட்டங்கள் எண்ணற்றவையாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை ஈடேறாத முடிவுகளையே தந்திருக்கின்றன.
இருந்தும் அவர்கள், தங்களின் சமூக அங்கீகரிப்புக்கானப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்கான மன உறுதி, சாதாரணமானதல்ல! மருத்துவர் ஊசி குத்தும்போது கண்களை இறுக மூடி, பற்களைக் கடித்துக்கொண்டு இருப்போமே.. அப்படியானதல்ல, அவர்களின் மனத்திண்மை. அது. அவர்களின் உள்ளத்திலிருந்து கிளர்ந்து வந்தது!
அவர்களை அரவணைக்காமல் எள்ளி நகையாடுவது, அவர்களுக்கு எத்தனை வேதனையைத் தரும் என்பதை அவர்களால் மட்டுமே உணர முடியும். பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டும், சமூக அங்கீகாரம் கிடைக்காமலும், கடை கடையாகப் பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலை வேறு வழியில்லாமல் செய்து வருவதும், அவர்களின் விருப்பத்தின் பேரில் அல்ல. வாழ்வதற்க்கானத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே!
அதனால் அவர்கள் படும் மனஅவஸ்தை, சொல்லி மாளாது. சட்டமும் நீதியும் தண்டிக்குமே என்று அச்சத்துடன் பயந்து பயந்து வாழும் அவலவாழ்க்கையைக் காட்டிலும் காவல் துறையும், சமூக விரோதிகளும் செய்யும் துன்புறுத்தல், அவர்களை மேலும் பாடாய்ப் படுத்தி வருகிறது.
சமீப காலமாக, திருநங்கைய்ரில் பலர் கடைகளில் கைத்தட்டிப் பிச்சைக் கேட்பதில்லை. மாறாக, கைத் தொழில்களைக் கற்றுக்கொண்டு, சமூகத்தின் மேம்பாட்டிற்க்கு உறுதுணையாகி வருகிறார்கள். சிலர் பூ, காய்கறி, மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இது, அவர்களின் மனமாற்றத்தையும் சமூகம் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் காட்டுகிறது.
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கையர். ரேவதி தொகுத்திருக்கும் 'உணர்வும் உருவமும்' நூலின் முன்னுரையில், சுபா சாக்கோ எழுதியிருப்பதைப் பார்ப்போம். 'ஒருவரை பராமரித்துப் பாதுகாக்க வேண்டிய குடும்பம். ஊக்குவித்து வளர்க்க வேண்டிய பள்ளிக்கூடம். ஆதரவாகச் சூழ்ந்திருக்க வேண்டிய நெருக்கமான உறவுகள். மனதுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய மதம். நீதிக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தொண்டு நிறுவனங்கள். பாரபட்சமின்றி செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும்அரசு: அரவாணிகளைப் பொறுத்தவரை, இவை அனைத்துமே வன்மமும் பாரபட்சமான நடவடிக்கைகளும் நிகழும் களமாகவே இருந்து வந்துள்ளன' என்கிறார்.
தன்னுரையில் ரேவதி குமுறுவதைக் கேட்போம் : 'அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுந்தானா? அரவாணிகளுக்கு இல்லையா? நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் தானே? எங்களுக்கும் ஓட்டுரிமை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், சொத்துரிமை, ரேஷன் அட்டை ஆகியவை வேண்டும். ஆணாகப் பிறந்த நான், ஆணாக இருந்தால் மட்டுந்தான் இந்த அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்னுடைய பாலினத்தை மாற்றிக் கொள்ள எனக்கு உரிமை இல்லையா? ஏன் என் உணர்வுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?'
பணம் சம்பாதிக்கும் வேட்கையுடனோ... கொழுப்பெடுத்துப் போயோ... பாலினத்தை மாற்றிக் கொண்டவரில்லை, இந்தத் தோழி!
மன உணர்வுகளின் புரிதல் அவரை வழிநடத்தி, அதன் அடிப்படையில், "என் பயணம் இது தான்!" என்ற திண்மையான முடிவுடன் களத்திற்கு வந்து போராட முடிவெடுத்தவர்.
சமூகத்தால் பல விதங்களில் ஒதுக்கப்பட்டும், அடக்கி ஒடுக்கப்பட்டும் வாழ்ந்து வரும் திருநங்கையர்களுக்கு கௌரவமாக வாழ சென்னையில் உள்ள 'ஃபீச்சர்ஸ்' என்ற அழகு நிலைய உரிமையாளர் உமா மகேஸ்வரி செய்துள்ள முயற்சிகளின் பலனாக 17 திருநங்கையர்கள் அழகுக் கலை நிபுணர்களாக உருவெடுத்துள்ளனர்.
திருநங்கையர்களுக்கு அழகுக் கலை பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் சிறப்பு சேர்க்கவும், அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காக கீழ்நிலையான சில காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.
மேற்கூறிய லட்சியத்தை நிறைவேற்ற 45 நாட்கள் அழகுக் கலை பயிற்சி முகாமைத் துவங்கி அதனை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்கள். இதில் சுமார் 17 திருநங்கையர்கள் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். 17 திருநங்கையர்களுக்கும் நடிகர் விக்னேஷ் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
No comments:
Post a Comment