Total Pageviews

Friday, February 8, 2013

இளைஞனாகும் பருவ பிள்ளைகளை கையாள்வது எப்படி?



வளங்களில் சிறந்தது மனித வளம். பருவங்களில் வியப்புக்குரியது பதின் பருவம் என்ற விடலைப் பருவம். எதையும் செய்து பார்க்கிற பருவம். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத பருவம். 14 முதல் 21 வயதுள்ள விடலைப் பருவம், ஒரு குழந்தை இளைஞனாகும் காலம். வாழ்க்கையில் முதன்முதலில் ஹார்மோன்களோடு போராட வேண்டிய கால கட்டம். ஒரு குழந்தையாகவும் திரிய முடியாமல், பெரியவன் என்ற சமூக அங்கீகாரமும் கிடைக்காமல் திரிசங்கு சொர்க்கத்தில் நின்று திண்டாடும் ஒரு சூழல். பிறந்தது முதல் பதினான்கு வயது வரை சுதந்திரப் பறவையாகத் திரிந்தது ஒரு காலம். இந்தச் சுதந்திரம் விடலைப் பருவத்தில் மறுக்கப்படுவதால் அல்லது மறுக்கப் படுவதாக நினைத்துக் கொள்வதால் இந்த இளைஞர்கள் இழந்து விட்டதாக நினைக்கும் மகிழ்ச்சியை 14 முதல் 21 வயதுக்குள் பூர்த்தி செய்ய மன ரீதியாகத் துடிக்கிறார்கள்.

விடலைப் பருவத்தினரை ஈர்க்க எங்கும் தீய சக்திகள் சமூகத்தில் நிறைந் துள்ளன. அவற்றுள் பெரும்பங்கு வகிப்பது டி.வி., என்கிற சின்னத் திரை. இது அறிவியலின் அற்புதமான கண்டுபிடிப்புதான். ஆனால் இதில் காட்டப்படும் பாலியல் ஈர்ப்புகள், பாலியல் வக்கிரங்கள், கொலை, கொள்ளை, தீவிரவாதச் செய்திகள், பிரபலங்களின் குடி, புகைப் பழக்க வழக்கங்கள் இவ்வறியா பருவத்தினரிடம் நாமும் இப்படிச் செய்தால் என்ன என்ற புது உணர்வைத் தூண்டுகிறது.

விடலைப் பருவமோ ஒரு வித விவரம் புரியாத பருவம். ஓடும் பாம்பை மிதிக்கும் பருவம். இனம் புரியாத ஆவல்கள், பரபரப்புகள், குழப்பங்கள் நிறைந்தது. மாணவர்களைக் கவரும் சினிமா மோகம், இசை மோகம், பாலியல் மோகம், அரசியல் மோகம், விளையாட்டு மோகம் அவர்களைக் கவர்ந்து இழுப்பதால் படிப்பு மறந்து சினிமா, டி.வி., விளையாட்டரங்கம் இவற்றில் புதைந்து கிடக்கச் செய்கிறது. இளைஞர்கள் ஒரு சினிமா நடிகர், நடிகை, அரசியல்வாதியை அறிந்த அளவுக்கு விஞ்ஞானியையோ, தொழில் நிபுணரையோ அறிந்திருப்பதில்லை. டி.வி. பார்ப்பது தவறல்ல. படிக்கும் பொறுப்பை விட்டுவிட்டு டி.வி. பார்ப்பதுதான் தவறு. பெற்றோர்கள் ஒவ்வொன் றுக்கும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி, ஒரு திட்டமிட்ட வாழ்க்கையை அமைத்துத் தர முன்வர வேண்டும்.

விடலைப் பருவத்தினர் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். பொதுவாக உணர்ச்சிகள் தோற்றுவிக்கும் விளைவுகள் பயமும் கோபமும். இவர்கள் பயத்தை வெளியே காட்டுவதில்லை. ஆனால் கோபத்தைக் காட்டிவிடுவார்கள். விடலைப் பருவத்தினரின் கோபத்துக்கு, தங்கள் நண்பர்களைப் போலத் தங்களால் ஆடம்பரமாகவும் வசதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிய வில்லையே என்ற எண்ணம்தான் காரணம். இந்த ஆதங்கம் கோபமாக வெளிப்படுகிறது. இப்பருவத்தில் இவ்வாறு விரும்புவது தவறல்ல. பெற்றோ ரும் தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தை நிறை வேற்றவே உழைக்கின்றனர். தங்களது பிள்ளைகள் படிப்பிலும் விளையாட் டிலும் ஒழுக்கத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசை. எனவே நீங்கள் உங்கள் படிப்பில் முதன்மை கவனம் செலுத்தி தேர்ச்சி பெறுங்கள். வாய்ப்புகளும் வசதிகளும் உங்களைத் தேடி வரும்.

விடலைப் பருவத்தில் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் நல்லொழுக்கங்கள் புகுத்தப்படல் வேண்டும். நற்பண்புகள் கற்றுத்தரப்பட வேண்டும். உங்கள் மகன் நண்பர்களோடு சேர்ந்து, சிகரெட் புகைத்துவிட்டு வருகிறான். உங்களால் இதைத் தாங்க முடியவில்லை. உன்னால் இந்த வீட்டின் புனிதமே கெட்டுப் போய்விட்டது என்று முகம் சிவக்க அவனிடம் எகிறுகிறீர்கள். உடனே அவன் சிகரெட் புகைப்பதை விட்டு விடப் போகிறானா? இல்லை. ஏதோ ஓர் இருட்டு மூலையில் ரகசியமாக நின்று சிகரெட் பிடித்துவிட்டு, வாயில் பாக்கை மென்று கொண்டு வருவான்.

நீங்கள் சிகரெட் பிடிப்பது தவறு என்று கற்றுத் தரப் பார்த்தீர்கள். அதற்கு மாறாக, கள்ளத்தனத்தையும் பொய்களையும் கற்றுத் தந்து விட்டீர்கள். அதைத் திருத்த வேண்டுமென்ற ஆர்வத்தில் நீங்கள் அவனை மிரட்டலாம். அதிகாரத் தால் கொஞ்சம் காலத்துக்கு இழுத்துப் பிடிக்கலாம். ஆனால் உங்களின் உண்மையான அக்கறை அவனுக்குப் புரியாமலேயே போய்விடும்.

மகனிடம் அன்பை காட்டப் பழகி விட்டீர்களானால், உங்கள் நண்பனாக அவன் மாறியிருப்பான். நீங்கள் சொல்வதைத் தனது நன்மைக்காகவே என்பதைப் புரிந்து கொண்டிருப்பான். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து உணரும் புத்திசாலித்தனமும் வந்திருக்கும். சிகரெட்டில் உள்ள நச்சுப் பொருள்கள் மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், கண்பார்வைக் குறைவு, நுரையீரல் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது. இந்தச் செய்தி அவன் மனத்தில் ஆழப் பதியும். சிகரெட் பழக்கத்தை விட முயற்சிப்பான்.

குழந்தையை அடித்து வளர்ப்பது அருவருப்பான செயல். உண்மையில் அந்தக் குழந்தையால் எதிர்க்க முடியாது என்பதுதானே உங்கள் கைகளை உயர்த்து வதற்கான காரணம். நிராயுத பாணியுடன் வாள் வீசுவது வீரமும் அல்ல. விவேகமும் அல்ல.

ஒரு பூச்செடி நன்றாக வளர வேண்டுமானால் அதன் அருகிலேயே உட்கார்ந்து அதை நோண்டிக் கொண்டே இருப்பீர்களா? மாட்டீர்கள். தேவையான உரத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றி, அதைத் தானாக வளர விடுவீர்கள். அது தானாய் பூத்துக் காய்க்கும். அப்படி அதற்குத் தேவையான பாதுகாப்பை அளித்துவிட்டு, உங்கள் எண்ணங்களை அதன் மீது திணிக்காமல் இருங்கள். அதுபோதும். உங்களுக்குப் பிறந்த குழந்தையும் உங்களைப் போலவே வளர வேண்டு மென்று எதிர்பார்ப்பது தவறு. நீங்கள் செய்த தவறுகளை அதுவும் செய்ய வேண்டுமா? நீங்கள் செய்யத் துணியாத காரியங்களைச் செய்து பார்க்கும் வல்லமையைப் பெறட்டுமே. அப்படி அடுத்தடுத்த தலைமுறைகள் செய்தால் தான் உலகில் புதுமைகள் பிறக்கும். புகழ் குவியும். உலகம் வளர்ச்சியுறும்.

உங்கள் அன்பும் அரவணைப்பும் உண்மையான கவனிப்பும்தான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வழங்க வேண்டியது. ஆதிக்கம் அல்ல. அப்படி வளரும் குழந்தை தவறான பாதைக்கு ஒரு நாளும் போகாது. சந்தர்ப்ப சூழ்நிலையில் அப்படிப் போனாலும் திருந்தி உங்களிடமே திரும்பி வரும்.

பேராசிரியர் டாக்டர் பி.கி.சிவராமன்
தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர்

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...