Total Pageviews

Monday, April 18, 2016

கோடையை சமாளிப்பது எப்படி ?

*உஸ்... என்ற களைப்புப் பெரு மூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி..

*வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள்.

*இன்னும் சிலரோ மலை வாசஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே இருக்கும் என வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இந்தக் காலத்தில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன. இதனால் உற்பத்தி அதிகரிக்கும்.

*கோடை வெயில் மாணவச் செல்வங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் பருவம் அல்லவா...

*அவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களாக நீங்களும் கோடையை குளிர்ச்சியாகக் கழிக்க இதோ ஜில்லுன்னு சில டிப்ஸ்.

*கோடைக் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் தான் சிலருக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வருவதால் உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.

*கோடைக் காலத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை பெண்கள் முடித்துவிடுவது நல்லது.

*முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

*அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும்.

*குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரை அருந்த வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும் 10 நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும்.

*மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது.

*அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம்.

*இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.

*ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம்.

*குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியபின் குடிநீராக அருந்தலாம்.

*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறைந்து சமநிலைப்படும்.

*கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.

*கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சிரணமாகும்.

*மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசணிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சிரணமடையும் உணவுகளை உண்பது நல்லது.

*தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக்கூடாது.

*மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

*வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

*வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

*கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.

*சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.

*வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை தவிர்த்து வெண்மை நிற குடைகளை பயன்படுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது..........

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...