Total Pageviews

Monday, July 4, 2016

மாரடைப்பு 5 காரணங்கள்

மாரடைப்பு 5 காரணங்கள்

நன்றி-விகடன்.

‘நல்லாத்தான் இருந்தார்... 40 வயசுதான்... நேத்து ராத்திரி படுத்தவர், காலையில எந்திரிக்கலை; ஹார்ட் அட்டாக்காம்’ இப்படியான துயரக் கதைகளை சமீபகாலங்களில் அடிக்கடி கேட்கிறோம். மாரடைப்பு வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மோசமான வாழ்வியல்முறை காரணமாக ஏற்படும் மாரடைப்பு குறித்து, ‘உலக சுகாதார நிறுவனம்’ பட்டியலிட்டுள்ள மிக முக்கியமான, பொதுவான ஐந்து காரணங்கள் இங்கே...


உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ‘அத்ரோஸ்க்லிரோசிஸ்’ எனும் இதயநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் தடித்து வீங்கிவிடும். ரத்தக் குழாய்கள் வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்படும். இதனால், ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்படும்.

உடல் பருமன்

உடல் பருமன், மாரடைப்புக்கு மிக முக்கியமான மறைமுகக் காரணி. உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் வந்துவிடும். சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேரும்போது, கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு வரலாம். உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்குக்கூட சமீபகாலமாக மாரடைப்பு வருவது கவனிக்கத்தக்கது. எனவே, உடல் பருமன் உடையவர்கள் உடனடியாக உடற்பயிற்சி் செய்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி டயட் கடைப்பிடித்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் மெள்ளமெள்ள படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும். கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள்வைத்திருப்பது அவசியம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாத சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். சர்க்கரை நோய் காரணமாக ரத்தக் குழாய்கள் வீங்கி, ரத்தம் செல்வது தடைப்பட்டு, மாரடைப்பு வரலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இரண்டு பிரச்னைகளும் இருப்பவர்களுக்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்பதால், விழிப்புஉணர்வு அவசியம்.

புகைபிடித்தல்

தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கும், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும், புகையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் மெள்ள மெள்ள நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைக்கும். மேலும், இவை ரத்தக் குழாய்களிலும் படியும். கொலஸ்ட்ரால் படிவது போலவே சிகரெட் பிடிப்பதால் பல்வேறு வேதிப்பொருட்கள் ரத்தக் குழாயில் படியும்போது, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைப்படுவதால், மாரடைப்பு வரும். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவராக இருந்தால், என்றாவது ஒரு நாள் நீங்கள் பிடிக்கும் சிகரெட் உங்களின் உயி்ரைப் பறிக்கும் கடைசி சிகரெட் ஆகும் அபாயம் உள்ளதால், சிகரெட் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.


- பு.விவேக் ஆனந்த்

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...