Total Pageviews

Tuesday, July 12, 2016

மின் தாக்குதல் !




சமையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் போது சமயோசிதப் புத்தியோடு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும். மின்சாரத்தின் தாக்கம் எத்தனை அளவு (வோல்ட்) என்பதைப் பொருத்தும் உடலில் மின்சாரம் பாயும் பாதையின் மின் தடைத் திறனைப் பொறுத்தும் ஆபத்தின் அளவுகள் இருக்கும். குளியல் அறை, சமையல் அறை போன்ற ஈரமான சூழலில் உடல் மீது மின்சாரம்பாய நேர்ந்தால், தொடர்ந்து தடைபடாமல் மின்சாரம் பாய்வதால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். உயர் அழுத்த மின் கம்பிகளைத் தவறுதலாகத் தொடும்போது நம் உடலுக்குள் பாய்கின்ற மின்சாரமானது, சட்டென உடல் முழுவதும் பரவி பூமிக்குள் இறங்கிவிடும். இந்த வகையில், நம் உடலையும் ஒரு மின் கடத்தியாகவே மாற்றிவிடுகிறது மின்சாரம். உடலில் மின்சாரம் பாயும் இடத்திலும் வெளியேறும் இடத்திலும் தோலின் வெளிப்புறம் தீக்காயங்கள் ஏற்படும். ஆனால், உடலைக் கடந்து செல்லும் மின்சாரம் உள் உறுப்புகளையும் பாதிக்கும். இதனால்தான், மின் அதிர்வுக்கு ஆளானவர்களின் இதயத் துடிப்பு தடைபட்டு உயிர் இழக்க நேரிடுகிறது.

மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக்கொண்டு இருந்தால், முதலில் ‘மெயின் சுவிட்ச்’சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். சுவிட்ச் எது என்று கண்டறிய முடியாத சூழ்நிலைகளில் ப்ளக் கட்டையை உருவி எடுக்கலாம் அல்லது மின் கம்பியைத் துண்டித்தும் மின் ஓட்டத்தைத் தடை செய்யலாம். இப்படித் துண்டிக்கும் சமயங்களில், மின்சாரத்தைக் கடத்தாத ரப்பர் செருப்பு அல்லது ரப்பர் கை உறைகளை அணிய வேண்டும்; அல்லது உலர்ந்த மரக்கட்டை, துணி, அடுக்குப் புத்தகங்கள் மீது நின்றுகொண்டு மின் இணைப்பைத் துண்டிக்கலாம். உலோகப் பொருட்களைக் கொண்டு துண்டிக்கக் கூடாது.

உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளி வரையிலும் மின் பரவல் தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே, முதலில் மின் ஓட்டத்தை நிறுத்திவிட்டு நீண்ட உலர்ந்த மரக் கம்பு அல்லது கயிறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.

இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயத்தைச் செயல்படத் தூண்டலாம். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

மின்சாரத்தால் கருகிப்போன உடல் பாகத்தை சுமார் 10 நிமிடங்கள் சுத்தமான ஈரத் துணியால் மூடிவைக்க வேண்டும். பின்னர் சுத்தமான நீர் உறிஞ்சும் துணியால் மூடிக் கட்ட வேண்டும். மின் தாக்குதலால் தூக்கி எறியப்பட்டதால் உண்டான காயங்களுக்குச் சிகிச்சை கொடுக்கலாம். அடுத்ததாகக் கழுத்துப் பகுதியைத் தொங்கவிடாமல் சீரான முறையில் ஆதாரம் கொடுத்துப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மின் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு வெளிப்படையாகப் பாதிப்பு ஏதும் தெரியாமல் இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். ஏனெனில், மின்சாரம் தாக்கியதில் உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருப்பதால், அது பின்னர் பாதிப்பை ஏற்படுத்தலாம்!” என்று அக்கறையும் எச்சரிக்கையுமாகச் சொல்கிறார் டாக்டர் ராமச்சந்திரன்.

குழந்தைகள் பத்திரம்!

கையில் கிடைப்பதை எல்லாம் தொட்டுப் பார்க்கும் ஆர்வம் சிறு குழந்தைகளுக்கு அதிகம். ப்ளக் சாக்கெட்டுகளில் விரலை நுழைத்துப் பார்ப்பது, மின் பொருட்களை வாயில் வைத்துச் சுவைப்பது என விபரீதம் தெரியாமல் விளையாடும் குழந்தைகளை எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும். குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் சுவிட்ச் போர்டுகளை அமைப்பது நல்லது. முடியாதபட்சத்தில், ப்ளக் துவாரங்களை மறைப்பதற்கான ‘சேஃப்டி கார்டு’களை வாங்கி மூடுவது அவசியம். 

குழந்தைகள் தொடும் தூரத்தில், வாட்டர் ஹீட்டர்களைப் (காயில்) பயன்படுத்த வேண்டாம். பெரியவர்களும் வாட்டர் ஹீட்டர் செயல்பட்டுக்கொண்டு இருக்கும்போதே ‘தண்ணீர் சூடாகிவிட்டதா?’ என்று கையால் தொட்டுப் பார்ப்பது பேராபத்தை விளைவிக்கும்!

1 comment:

  1. Such a great articles in my carrier, It's wonderful commands like easiest understand words of knowledge in information's.

    ccna training in chennai saidapet

    ReplyDelete

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...