Total Pageviews

Thursday, November 14, 2019

முதியோர் பராமரிப்பு

முதியோர் பராமரிப்பு 

1) மக்கள் தொகை வளர்ச்சிக்கு (Population explosion) காரணங்கள்
2)  வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்
3) முதியவர்களிடம் காணப்படும் நோய்கள்
4) நோய்த்தடுப்பு (Immunization)
5) மனநலம்
6) மனஅழுத்தம் (Depression)
7) உணர்ச்சிமண்டலம் (Sensory System)
 8) பொதுவான நோய்கள்
 9) வயதான நோயாளிகளின் கவனிப்பு வகைகள் (Types of elderly case services)
10) வயதான நோயாளிகளுக்கு ஆலோசனை(Counseling the older patients)

 இந்த இருபதாம் நூற்றாண்டில் பல நாடுகளில் போர், பஞ்சம், வெள்ளம், மேலும் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க வகையில் மக்கள் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.



மக்கள் தொகை வளர்ச்சிக்கு (Population explosion) காரணங்கள்

நினைக்கமுடியாத வகையில் சமுதாய பொருளாதார வளர்ச்சி, தடுப்பு மருந்து மற்றும் ஆண்டிபயாடிக்குகள் கண்டுபிடித்தல், மற்றும் சிறந்த பொது சுகாதார கவனிப்பு, மக்கள் இப்போது வயது வந்த காலங்களில் நோயில்லாமல் இருப்பதைவிட வயதானவர்களும் நல்ல வாழ்க்கையே வாழ்கின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற பிரிவுகளை விட அதிகமாக இருக்கிறது.

செவிலியர்களுக்கும், மற்ற சுகாதார பணியாட்களுக்கும் வயதானவர்களை கவனிக்கும் முறையைப் பற்றி தெரிந்திருக்க 'வேண்டும். வயதானவர்களின் சுகாதார தேவைகள் மற்ற வயதினரிடமிருந்து வேறுப்பட்டது.


வயதானவர்களுக்கு கொடுக்கப்படும் உடல்நல கவனிப்பின் நோக்கங்கள் - வாழ்க்கையை அனுபவிக்கவும். முடிந்த அளவு சுறுசுறுப்பாக இயங்கவும், சுதந்தரமாக இருக்கவும், நலவாழ்வுப் பிரச்சினை உடையவர்களுக்கு சிகிச்சை யளிக்கவும் மற்றும் நோய்களிலிருந்து விடுபடவும் பராமரிப்பு அளிக்கப்படுகிறது.

முதுநிலை

முதுநிலை என்பது நிரந்தரமான ஒன்று இது மேலும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் முதுநிலையில் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக முதிர்ந்த வயதில் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் எனக் கூறலாம்.


வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்

உயிரியல் செயல் (Biological Process)

* மரபணுக்கள் வாழ்நாட்களை நிர்ணயிக்கிறது. எனவே முதிர்ச்சியடைவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

* தொடர்ந்து செயல்படுவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

* உடலின் முக்கிய உறுப்புகளான இருதயம், மூளை போன்றவற்றில் நச்சு பொருட்களான கொலஸ்ட்ரால், அமிலாய்டு (Amyloid) போன்றவை தேங்கி அவற்றை பாதிக்கின்றன.

* DNA பழுதுபார்க்கப்படும்போது ஒரு சில முக்கியமான மரபுப்பொருட்கள் மறைந்து போகின்றன.

* குறைவுபட்ட முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில் தளர்வு எ.கா: வளர்ச்சி ஹார்மோன், ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள்.

* வாழ்நாளில் ஏற்படும் அழுத்தங்கள், மேலும் அதனால் ஏற்படும் விளைவுகள்

* சுற்றுசூழல் நச்சு மற்றும் இடையூறுகளுக்கு நீண்டகாலம் உட்படுதல் Exposure)

வயதின் பரிணாம நிலை (Evolutionary Basis of Ageing)

பரிணாம வளர்ச்சியில் வயதும் இணைக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க வயது (அ) காலத்திற்கு பிறகு நீண்ட வாழ்நாள் பயனற்றது. இல்லையென்றால் மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வதற்கு பொருளாதார போட்டியும் ஏற்படும்.

முதிர்வயதில் மனநிலை சமூகபார்வை (Psycho-social aspects of ageing)

வயதானவர்களுக்கு தோற்றத்தில், பழக்க வழக்கத்தில், நினைவாற்றலில் மற்றும் மன நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். வயதானவர்கள் தங்கள் இடத்தை இளைய தலைமுறைக்கு விட்டுக் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தாங்கள் பாதுகாப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் மற்றும் பிறரை சார்ந்திருக்கவேண்டுமே என்ற மனநிலை உருவாகலாம்.


முதியவர்களிடம் காணப்படும் நோய்கள்

கீழ்கண்ட நோய்கள் பொதுவாக வயதானவர்களுக்கு இருக்கும் என மருத்துவமனைகள் கூறுகின்றன:

* உயர் இரத்த அழுத்தம், கண்ணில் புரை ஏற்படுதல் (Cataract), எலும்பு மூட்டுகளில் தேய்மானம், நீண்டநாட்கள் மூச்சுப்பாதை அடைப்பு நோய்கள், இருதயநோய், சர்க்கரைநோய், புரோஸ்டேட் சுரப்பி வீக்கம், செரிப்பு கோளாறு மற்றும் மலச்சிக்கல், மன அழுத்தம்

வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்புகளுக்கான பொதுவான காரணங்கள்

• மூச்சுக்குழல் அழற்சி மற்றும் நிமோனியா

* இருதய நோய்

* நோய் வன் தூக்கி (Strokes) (அ) வாதம்

* புற்றுநோய்

* காசநோய்.

வயதானவர்களிடம் கவனிக்க வேண்டிய சுகாதார பிரச்சனைகள்

* மாறுபட்ட ஊட்டச்சத்து, மிக அதிகமான ஊட்டச்சத்து, மிகவும் குறைந்த ஊட்டசத்து.

* நார் தன்மை உணவு மற்றும் பழங்கள் குறைவாக சாப்பிடுதல்

* உடல் இயக்கங்கள் குறைவுபட்டு, சுறுசுறுப்பில்லாத வாழ்க்கை முறை (Sedantary Life style),

* புகைபிடித்தல்

* அதிகமாக ஆல்கஹால் பருகுதல்

* மருந்தினால் ஏற்படும் விளைவுகள்

* விபத்து மற்றும் காயங்கள்

அதிக ஊட்டசத்து (Over Nutrition) :

ஊட்டசத்து அதிகமாவதால் உடல்பருமன் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான சுகாதார பிரச்சினைகளாகும்.

குறைந்த ஊட்டசத்து (Under- Nutrition):

இதுவும் சம அளவு கேடு நிறைந்தது. இதனால் உடலளவில் தன் வேலையை செய்ய முடியாமல் மற்றவர்களை சார்ந்திருத்தல், நோய்தடுப்பு குறைந்து காணப்படுவதால் வெகு விரைவில் ஏற்படும் இறப்பு, அதிகமான நோய்த்தொற்று மற்றும் காயம் மெதுவாக குணமடைதல் ஆகியவை காணப்படும்.

சில மனநிலை சமூக காரணங்கள் :

உணவு உட்கொள்ளுதலை பாதிக்கும் காரணங்கள் எகா. பொருளாதார நிலை. உணவு பற்றிய கட்டுப்பாடுகள் (சூடு மற்றும் குளிர்ச்சி), மதநம்பிக்கைகள், சமூக கட்டுப்பாடுகள், கவனிப்பவரின் விருப்பமில்லாமை மற்றும் பழிந்துரை, மன அழுத்தம், தனிமை.

பொதுவான ஊட்டசத்து குறைகள் :

இதில் மொத்த கலோரிகள், இரும்புசத்து, நார்சத்து, போலிக் அமிலம், விட்டமின் C, கால்சியம், துத்தநாகம் மற்றும் விட்டமின் A போன்றவைகள் அடங்கும்.

உடற்பயிற்சி :

வயதான காலங்களில் சக்தி, பலம், எலும்பு மற்றும் இருதயதசைகளின் தன்மை போன்றவை படிப்படியாக குறைந்து காணப்படும். சுறுசுறுப்பற்ற மற்றும் உடல் இயக்கங்கள் குறைந்து போவது, நோய் மற்றும் இறப்பு போன்ற பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

புகைபிடித்தல் :

வயதானவர்களுக்கு ஏற்படும் இறப்பு நோய்களுக்கு (Fatal disease) முக்கிய காரணம் சிகரெட் புகைப்பது. புகைபிடித்தல் கீழ்கண்டவைகளுக்கு காரணங்கள்

* வயதானவர்களுக்கு ஏற்படும் மூச்சுபிரச்சனைகள்

• நுரையீரல் மற்றும் இரைப்பை குடல்பாதை புற்று நோய்

* இருதயநோய்

* வாதநோய் (Stroke)

ஆல்கஹால் :

அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் இருதயவீக்கம், கல்லீரல் அழற்சி, நரம்புகள் பாதிப்பு, நினைவின்மை, கீழே விழுதல் மற்றும் விபத்துகள், குறை உணவூட்டம், நோய்தடுப்பில் குறைவு மற்றும் சமூகத்தில் இருந்து தனிமைபடுத்துதல் போன்றவைகள் உண்டாகும்.

வலி நீக்கிகள் மற்றும் மத்திய நரம்புமண்டல அழுத்திகளான தூக்கமருந்துகள், டிரைசைகிளிக் அழுத்த நீக்கிகள், பரபரப்பை குறைப்பவை மற்றும் பென்சோ டையபினைன்கள் போன்றவைகளின் பலன் அ) செயல் அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும்.

ஆல்கஹாலுக்கு அடிமையாவதால், நினைவின்மை, சமநிலை பாதிப்பு அடிக்கடி கீழே விழுதல் மற்றும் மோசமான உடல்நலமின்மை போன்றவைகள் முதுநிலை நோய்கள் என்று தவறாக ஊகிக்கப்படுகிறது.

சிகிச்சை

நீண்ட நாட்கள் ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது கடினம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, ஊட்டச்சத்து பராமரிப்பு, மனநிலை பராமரிப்பு மற்றும் ஆலோசனை சிகிச்சை போன்றவைகளால் சிகிச்சையளிக்கப்படவேண்டும்.

செவிலியர்கள் நோயாளிகளுக்கு ஆல்கஹால் குடிப்பதன் விளைவுகள் மற்றும் De-addiction முதலியவற்றை எடுத்துரைக்க வேண்டும்.

விபத்துக்களை தடுத்தல்

வலி, காயம், உறுப்புகள் வேலை செய்யாமை, நீண்ட நாட்கள் அசையாதன்மை மற்றும் சிக்கல்கள், எதிர்கால விபத்துக்களைப்பற்றிய பயம், தனிமை மற்றும் சுதந்திரமனப்பான்மை இழத்தல் போன்றவை விபத்துகளில் அடங்கும்.

சராசரியான வயதில் இருப்பவர்களைவிட வயதானவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் அதிகம் ஏனென்றால் உணர்ச்சி மற்றும் தசை எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே காரணமாகும். இந்த மாற்றங்களில் கீழ்கண்டவை அடங்கும்.

* புலன் உறுப்புகள் பழுதடைதல் - பார்வை, கேட்டல், வலி தொடுதல், வெப்பநிலை.

* உடல் சமநிலையில் சரிவு

* நிற்கும் தோரணை மற்றும் நடக்கும் முறையில் பாதிப்பு

* தசைவலிமை மற்றும் ஒருநிலைப் படுத்தல் குன்றிப்போதல்

வயதானவர்கள் கீழே விழுந்து, விபத்து ஏற்பட மற்ற சில காரணங்களும் உண்டு. அவை

* நினைவாற்றலில் பாதிப்பு

* மனக்குழப்பம்

* நீண்ட நாட்கள் உடல் நலமின்மை

* இருதய நோய்களுக்கு மருந்துகளை பயன் படுத்துதல்

* மன அழுத்தம்

செவிலியர், வயதானவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் காரணங்களையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் அவற்றை சரிசெய்வதற்கு தேவையான எளிய மற்றும் நவீன முறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவை.

* நடப்பதற்கான சாதனங்களை பயன்படுத்துதல்

* பார்வை கருவிகளை பயன்படுத்துதல்

* தட்டையான காலணிகளை பயன்படுத்துதல்

* வீட்டிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சரியான தரை அமைப்பு.

மருந்து செயல்களினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுத்தல்

பொதுவாக மருந்துகளுக்கு எதிராக ஏற்படும் விளைவுகள் ஆண்டிபயாடிக்குகள், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்து, இருதய துடிப்புகளை சரிசெய்யும் மருந்துகள், டிஜாக்சின் அழற்சியை தடுக்கும் மருந்துகள், தூக்கமருந்துகள், மன அழுத்தத்தை நீக்கும் மருந்துகள், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் மருந்துகள் இரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள் மற்றும் மனநோய் மருந்துகள்.

பொதுவாக மருந்துக்கு மாறாக ஏற்படும் செயல்கள் (Adverse reaction மனக்குழப்பம், மூளைக்கோளாறு, குறைந்த இரத்த அழுத்தம், கீழே விழுதல், படபடப்பு, மன அழுத்தம், துக்கமின்மை, மலச்சிக்கல், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை மற்றும் சிறுநீர் தேங்கியிருத்தல்.

இந்த விளைவுகளை குறைக்க செய்யப்படவேண்டியவை:

• மருந்துகளை பற்றி அடிக்கடி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டறிதல்

* ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைப் பற்றிய குறிப்பு

* பயன்படுத்தும் மருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தல்

* அதிகப்படியான பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்துதல்.


நோய்த்தடுப்பு (Immunization)


கீழ்காணும் மூன்று நோய்க் காரணிகளுக்கான தடுப்பு மருந்து பரிந்துரைக்கப் படுகிறது.

நியூமோகாக்கஸ், இன்புளுன்சா வைரஸ் மற்றும் டெட்டனஸ்

நியூமோகாக்கஸ், தடுப்பூசி மருந்து ஒரே ஒரு முறை கொடுக்கப்பட வேண்டும். இன்புளுன்சா தடுப்பு ஊசி ஒவ்வொரு வருடமும் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.


மனநலம்

முதிர்வயதில் ஏற்படும் மன அழுத்தங்கள்: வயது முதிர்ந்தவர்களுக்கு சூழ்நிலையினால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்


* கணவன் அல்லது மனைவி இழந்த நிலை மற்றும் மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பு

• வயதானவர்களை கவனிப்பவர்களுக்கு ஏற்படும்

மன அழுத்தம் மற்றும் உடன்பிறப்புகள், உறவினர்களின் நோய், இறப்பை பற்றிய பயம்

* பொருளாதார பிரச்சனை மற்றும் சுதந்தரமற்றநிலை

* சமூகத்தில் தனித்துவைக்கப்படல் மற்றும் தனித்தநிலை

வயது முதிர்ச்சியும் அதன் பிரிவுகளும்

• கீழ்கண்ட பிரச்சனைகளாலும் மனநிலை பாதிக்கப்படும்

* சோர்வு, பயம், தனிமை, அர்த்தமற்ற வாழ்க்கை மற்றும் குறிக்கோள் இல்லாமல் இருத்தல். படபடப்பு, கோபம், திறமை அ) வலிமையற்றநிலை மற்றும் மன அழுத்தம்.


வயதான காலங்களில் ஏற்படும் மனநோய்கள்

உடல் நல குறைபாடுகள் மனநல குறைபாட்டை அதிகப்படுத்துகிறது

.

* மன அழுத்தம்

* படபடப்பு நோய்கள்

* தவறான மனப்பான்மை

* அப்சஸ்சிவ் கம்பல்சிவ் பிரச்சனை

* தனிப்பட்ட பிரச்சனை (Personality disorder)

* பாதுகாப்பற்ற உணர்வு

* மது அருந்துதல்

* மருந்துகளுக்கு அடிமையாதல்

* பேச்சு குழறுதல் மற்றும் மறந்துபோதல்


மனஅழுத்தம் (Depression)

உடல்நலக்குறைவு, தூக்க பிரச்சனை மற்றும் உடல் தளர்வுறுதல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். மற்ற அறிகுறிகள் பசியில்லாத தன்மை, இறப்பை பற்றிய நினைவு, கவனக்குறைவு மற்றும் அதிகமாக வியர்த்தல்.


வயதானவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்துக்கு காரணங்கள் - மரபுத்தன்மை, நீண்ட நாட்கள் நோய் மற்றும் நடமாட்டம் இல்லாமல் இருத்தல், வலி, தினசரி வாழ்க்கையில் செயல் குறைவினால் ஏற்படும் வெறுப்பு, நிர்வகிப்பதில் மாற்றம், வாழ்க்கை நிகழ்வுகளின் பக்கவிளைவுகள் மற்றும் சமூக ஒத்துழைப்பு இல்லாமை.



மன அழுத்தத்தினால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வாழ்க்கை தரமும் அழிந்துவிடும்.


மன அழுத்தமும் செயல் திறமையும் பாதிக்கப்பட்டால் நோயின் முன்னேற்றம் மிகவும் மோசமாக இருக்கும். நோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நோயின் தன்மை, சிகிச்சை, நோயின் முன்னேற்றம் மற்றும் தற்கொலை முயற்சி போன்றவற்றைப்பற்றி போதனை அதிகம் தேவை. சிகிச்சையில் மூன்றில் ஒரு பங்கு நோயாளி சுகமடையலாம். ஒருபங்கு அப்படியே இருப்பார்கள் மற்றும் இன்னும் ஒரு பங்கு மோசமான நிலையை அடைவார்கள்.


உணர்ச்சிமண்டலம் (Sensory System)

தோல் (Skin) வயது சார்ந்த மாற்றங்கள்

புறத்தோல் தடித்து, தோலின் ஈரத்தன்மையை குறைந்து, தோலை உலர்ந்ததாகவும், கடினமானதாகவும் மாற்றுகிறது. மெலனின் நிறமிகளின் எண்ணிக்கை குறைவதால் சூரிய வெளிச்சத்திலிருந்து தோல் பாதுகாப்பு குறைந்து நிறமற்ற புள்ளிகள் தோலின் மேல் தோன்றும். உட்தோலில் பைப்ரோபிளாஸ்ட் (Fibroplast) எண்ணிக்கையும், செல்லுலார் மெஸ்மட்ரிக்ஸ் Cellular matrix) உற்பத்தியும் குறைக்கப்படுவதால் தோலின் மேற்பரப்பில் சுருக்கங்கள் ஏற்படும்.


மெலனின் நிறமி இல்லாத காரணத்தால் தலைமுடி நிறமிழந்து, முடி உதிர்தல் நடைபெறும், நகங்களின் வளர்ச்சி குறையும்.

பொதுவான நோயின் நிலைகள்

தொற்று ஹெர்பிஸ் போஸ்டர் : சொறி சிரங்கு மற்றும் பையோ டெர்மா (Pyoderma), தோலில் அரிப்பு (Pruritis) தோலின் உலர்ந்த தன்மை (அ) பொதுவான நோய்கள்.

ஸிரோஸிஸ் (Xerosis) : வயது முதிர்ச்சியினால் தோலின் வறண்ட மற்றும் கடினமான தன்மை, மருந்துகளின் எதிர் செயல்.

கண்

தளர்வுற்ற நிலையில், கருவிழிப்படலத்தின் சுழற்சி மாற்றப்படுவதால் கண்ணீர் வழிதலில் பிரச்சனை ஏற்படும். கண்ணீர் சுரப்பியின் சுரப்பு தன்மை குறைந்து காணப்படுவதால் கண் உலர்ந்திருக்கும்.


விழி வெண்படலத்தில் இருக்கும் இரத்தக் குழாய் மோசமான நிலையில் இருப்பதால் விழிவெண்படலத்தில் இரத்தக்கசிவு ஏற்படலாம்.

விழிலென்சில் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படும். லென்சு பாதிக்கப்படுவதால் கண்புரை (Catact) ஏற்படும்.


நிறப்பார்வையில் பாதிப்பு ஏற்படும். அதாவது நீலம், பச்சை மற்றும் ஊதா நிறங்களைவிட சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நன்றாகத் தெரியும்.


பொதுவான நோய்கள்

வயதானவர்களின் பார்வை குறைவுக்கு கண்புரை (Catract பொதுவான காரணமாகும்.

வலியற்ற மங்கலான பார்வை, படிப்படியாக பார்வை குறைதல், வெளிச்சத்தில் கண் கூசும் தன்மை அதிகரித்தல் மற்றும் பொதுவாக இருண்ட பார்வை போன்றவை கண்புரையில் காணப்படும்.

அடையாளங்களும் அறிகுறிகளும்


* அடிக்கடி கண்ணாடியை மாற்றுதல்

* படிப்பதற்கு அதிக வெளிச்சம் தேவைப்படுதல்

• இரவில் பார்வை குறைவாக இருத்தல்

* மங்கலான பார்வை

சிகிச்சை :

அறுவை சிகிச்சையில் லென்சை எடுத்துவிட்டு Intra - Ocular lens-ஐ பொருத்துவதால் பழைய முறையில் பார்வை கிடைக்கும்.

கிளாக்கோமா (Glaucoma)

இந்த நிலையில், கண்ணின் உள் அழுத்தம் அதிகமாக இருக்கும், இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வை இழந்து போகக்கூடும்.


நீண்ட நாள் கிளாக்கோமாவில் பக்கவாட்டில் பார்வை பாதிக்கப்படக்கூடும். பொதுவாக பார்வை இழப்பு விழியின் பக்கங்களில் இருந்து தொடங்கும். இதற்கு 'tunnel vision' என்று பெயர். இந்த நோயைக் கண்டறிய ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி கண்ணின் உள் அழுத்தத்தை கண்டறிய வேண்டும்.


குறுகலானகோண கிளாக்கோமாவில் அதிகமான வலி, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் மங்கலான பார்வை ஆகியவை காணப்படும்.

மாக்குயூலர் பாதிப்பு (Macular degeneration) :

வயதானவர்களின் பார்வை குறைவுக்கும், பார்வை இழந்து போதலுக்கும் இது பொதுவான காரணம். Exudative மாக்குயூலர் பாதிப்பினால் தந்துகிகளில் கசிவு ஏற்படும் ரெட்டினாவில் இரத்தக்கசிவு ஏற்படும் Laserphoto-coagulation இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.


இந்த தன்மையில் ரெட்டினாவில் நிறமி எபிதீலியம் மற்றும் தந்துகிகள் பாதிக்கப்படுவதால் ஒளிமுறிவு செயல் பாதிக்கப்படும். இந்த நிலைக்கு சிகிச்சை இல்லை.


டையபடிக் ரெட்டினோபதி : (Diabetic Retinopathy) இது சர்க்கரை நோயினால் ஏற்படும் பொதுவான சிக்கல் சர்க்கரை நோயின் காலம் மற்றும் தடுப்பு சிகிச்சையை பொறுத்து இந்த நோய் அமையும், இதைத் தடுப்பதற்கு முதலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரான நிலையில் இருக்க வேண்டும். தொடர்ந்து பரிசோதனை செய்வது, சிகிச்சையில் முக்கியமானது.


பரிசோதனை மற்றும் Laser Photo Coagulation மூலம் இன்றைய நாட்களில் ரெட்டினோபதி சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

செவி

வயது முதிர்ந்த காலங்களில் செவி உணர்ச்சி உறுப்புகளின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு ganglion மற்றும் hair செல்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். காக்ளியாவிற்கு இரத்த ஓட்டம் குறைவாக செல்லும். உணர்ச்சி உறுப்புகளில் உணர்ச்சி நரம்புகள் குறைந்து காணப்படும்.

செவிட்டுத்தன்மை ஏற்படுவதால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகுவது பேசுவது தவிர்க்கப்படக் கூடியதாகும் கீழ்கண்ட பண்புகள் வயது முதிர்ந்தவரின் கேட்கும் தன்மையை குறிக்கிறது.

வயதானவர்கள் பொதுவாக உரத்த குரலில் பேசுவார்கள், மற்றவர்களும் அவர்களிடத்தில் சத்தமாக பேசவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

வயதானவர்கள் பேசியதையே திரும்ப திரும்ப பேசுவார்கள்.

வயதானவர்கள் அவர்களைப் பற்றியாரும் பேசுகிறார்களா என சந்தேகப் படுவார்கள்.

எப்பொழுதும் கேட்கும் கருவி (hearing aid) பயனுள்ளதாக இருக்கும். அந்தக்கருவியை எவ்வாறு பொருத்துவது, எவ்வாறு பயன்படுத்துவது, பேட்ரியின் வகை, அது எங்கு கிடைக்கும் மற்றும் எவ்வாறு பரிசோதித்து அதை மாற்ற வேண்டும் என்று அந்த வயதானவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதானவர்களுடன் பேசும்போது உரத்த சத்தத்துடன் பேசுவதை விட மெதுவாக குறைந்த சத்தத்தில் பேசுவது பயனுள்ளதாக இருக்கும். சுற்றுசூழல் பின்னனி இரைச்சலை தவிர்க்க வேண்டும்.

காதில் மெழுகு (wax) போன்ற அழுக்கு பொருட்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். இதன் மூலம் கேட்கும் தன்மை பாதிக்கப்படலாம். காதில் சொட்டு மருந்தைவிட்டு அந்த மெழுகு போன்ற அழுக்கை (Cerumen) இளகச்செய்து காதினை சுத்தப்படுத்தவேண்டும்.

சுவை மற்றும் மணம்

நாக்கின் மேற்பரப்பில் சொரசொரப்பான சுவையரும்புகள் எனப்படும் மேடுகள் காணப்படுகின்றன. வயதான காலங்களில் இந்த சுவையரும்புகளின் எண்ணிக்கை குறைந்தும், மீதி இருக்கிற சுவையரும்புகளின் தன்மையும் பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால் அவர்கள் உண்ணுவதில் மகிழ்ச்சியடைய முடியாது. இந்த சுவையரும்புகளை ஊக்குவிப்பதற்கு மண மூட்டக்கூடிய வாசனைப்பொருட்கள் அதிகம் தேவை.

மூக்கின் மேல் பகுதியில் வாசனை நரம்புகள் காணப்படுகின்றன. வயதான காலத்தில் இந்த வாசனை நரம்புகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.




எனவே இந்த வயதான நிலையில் உள்ளவர்களுக்கு மணமும், வாசனையும் அறியக்கூடிய பாதிப்பு அதிகம் இருக்கும். அவர்கள் புகையின் வாசனையை உணரமுடியாத காரணத்தால் தீ போன்ற விபத்துகளை உடனே உணரமுடியாது.


வயதானவர்களுக்கும் அவர்கள் குடும்ப த்தினருக்கும் உணர்ச்சி உறுப்புகளில் ஏற்படும் மாற்றத்தைப் போதிக்க வேண்டும். மேலும் ஏற்படும் பாதுகாப்பாற்ற அபாயங்களை குறித்து எச்சரிக்கவேண்டும்.


வயதான நோயாளிகளின் கவனிப்பு வகைகள் (Types of elderly case services)


உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பின் சேவைகள்

சுகாதார போதனை (உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, பொதுவான உடல் நலத்தை பரிசோதித்தல், இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு, பார்வை, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தக் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல் (புகைபிடித்தலை தடுத்தல், நோய் தடுப்பு மருந்து)

சிகிச்சை

நோயை முன்னதாக கண்டுபிடித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையளித்தல். தீவிர மற்றும் மோசமான உடல் பிரச்சினைகளுக்கு மாவட்ட மற்றும் பொது மருத்துவமனைகளில் பரிசோதனையும், சிகிச்சையும் அளித்தல், நீண்ட நாள் சிகிச்சை மருத்துவமனைகளில், நிறுவனங்கள் அல்லது வீடுகளில் அளித்தல்,

மறுவாழ்விப்பு (Retabilitative)

பிசியோதெரபி (physiotherapy) உடல் உறுப்புகளின் வேலைகளை இயக்க அறுவை சிகிச்சை (Restorative surgery), செயற்கை உறுப்புகள் மற்றும் கருவிகள் (prosthesis), தொழில்முறை சிகிச்சை (Occupational therapy), நினைவு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டநாள் சிகிச்சை

மனநல சேவைகள்

ஓய்வு, மாற்று வசிப்பிடம், துணையை இழத்தல் மற்றும் நெருக்கமானவர்களை இழந்த நிலையில் ஆலோசனை கூறுதல், மருந்து மற்றும் பொருட்களை பயன்படுத்துதல், மனநோய்களுக்கான சிகிச்சை.


வயதான நோயாளிகளுக்கு
ஆலோசனை(Counseling the older patients)
 வயதானவர்கள் பல கோணங்களில் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஒரு சில பிரச்சனைகளுக்கு ஆலோசகர்கள் தேவை:


• வேலையை சரிவர செய்யமுடியாத நிலையைக் குறித்த பயம்

* ஓய்வுபற்றிய அச்சம்

* முதிர்வயதைப்பற்றி தெரிந்திருத்தல்

* உடல் நலக்குறைவு மற்றும் மற்றவர்களை சார்ந்திருந்த்தல்

* பாலின உணர்வு குறைவு பற்றிய பயம், தனிமை

* நெருக்கமானவர்களின் இறப்பும் இயலாமையும்

* சார்ந்திருத்தல் பற்றிய அச்சம் அதிகரித்தல்

* தொழில் பற்றிய ஆலோசனை

* கட்டுப்படுத்தும் தன்மையை இழத்தல்.


வயதானவர்களுக்கான சுகாதார போதனை

மனித உயிரியல் (Human biology) :

வயது முதிர்ச்சியினால் உடல் அமைப்பு மற்றும் வேலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குடும்பத்தினருக்கு விளக்கி சொல்லவேண்டும் நோய்க்கும், வயதான நிலைக்கும் உள்ள மாற்றங்களை விளக்க வேண்டும். குடும்ப நலம் (Family health) வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றி அறிவுறுத்த வேண்டும்.

சுகாதாரம் (Hygiene) :

தன்னுடைய சுத்தம், சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் சுகாதாரம்.

நோயாளியின் சுகாதாரப்போதனை

இதில் குளித்தல், ஆடை அணிதல், மலம் கழித்த பின்னும் சாப்பிடுவதற்கு முன்னும் கைகளை கழுவுதல், பாதங்கள் கவனிப்பு, நகம் மற்றும் பற்கள் பராமரிப்பு கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தடுத்தல், இருமுதல், தும்முதல் மற்றும் நல்ல பழக்கங்களை கையாளுதல் போன்றவை அடங்கும்.

சுற்றுசுழல் சுகாதாரம் பற்றிய போதனை

இதில் சுத்தமாக வீட்டை வைத்திருத்தல், தூய்மையான காற்று, வெளிச்சம், காற்றோட்டம், சுகாதார முறையில் சேமித்தல், கழிவுகளை அகற்றுதல், தூய்மை பராமரிப்பு, தேவையற்ற உணவுப்பொருட்களை அகற்றதல் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை அடங்கும். தொற்றாத மற்றும் தொற்றக்கூடிய நோய்களைத் தடுத்தல்.

மனநலம் (Mental Health)

நிலையற்ற மற்றும் பாதுகாப்பற்ற தன்மை வயது முதிர்ந்தவர்களிடையே பொதுவாகக் காணப்படும். வயதானவர்கள் அவர்களுடைய வயது மற்றும் ஓய்வு காரணமாக குடும்பத்திலும், சமுதாயத்திலும் அவர்களுடைய நிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதற்கு ஏற்றவாறு வாழ அவர்களுக்கு போதிக்க வேண்டும். மறதிநிலை, மன அழுத்தம், படபடப்பு, இழந்து போன நிலை போன்றவற்றிற்கும் போதனை அளிக்கவேண்டும்.

விபத்துக்களை தடுத்தல் (Prevention of Accidents)

விபத்துக்களுக்கு உள்ளாக நேரிட அதிக வாய்ப்புகள் உண்டு. பார்வை அல்லது காது கேட்டல் பலவீனம் அடைந்து இருப்பதாலும் அல்லது எலும்புகள் நொறுங்கும் தன்மை அடைந்திருப்பதால் வயது முதிர்ந்தோர் இந்த பாதிப்புகளுக்கும், உயிருக்கு ஆபத்தான காயங்களில் இருந்தும் தங்களை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். இவற்றைத் தடுக்க சிறிய, எளிய முறைகளை அன்றாடம் கையாளுவதன் மூலம் விபத்துக்கான பாதிப்புகளை குறைக்க முடியும்.

ஊட்டச்சத்து (Nutrition)

செவிலியர் வயதான நோயாளியை பராமரிக்கும்போது அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் சமசத்துள்ள, எளிதில் சீரணிக்கக் கூடிய நார்சத்து நிறைந்த ஊட்டசத்து அதிகமான உணவுகளைப் பற்றியும் உணவுக்காக செலவிடும் பணம், உணவின் சேமிப்பு, தயாரிப்பு மற்றும் சமைத்தல் பற்றி தெளிவாக விளக்கி அவர்களை பராமரிக்க வேண்டும். மேலும் அவர்கள் குடல் அசைவுகளை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள், நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...