பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்! செ.கார்த்திகேயன். Thanks to Vikatan.com
`வருங்கால வைப்பு நிதித் திட்டத் தின்கீழ் (EPFO) வரும் அனைத்து ஊழியர்களும் பென்ஷன் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்ற கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதியத்தொகையை வருங்கால வைப்புநிதி ஆணையம் கணக்கிட்டால், அது பலமடங்கு உயரும். இதனால் அரசு ஊழியர்களைப்போல, தனியார் ஊழியர்களும் பல ஆயிரம் ரூபாயை பென்ஷனாக பெறும் நிலை உருவாகும்.
பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!
இதுவரை 8.33% மட்டுமே
பொதுவாக, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்புநிதியாக (EPF) 12%, நிறுவனத்தின் சார்பில் 12% சேர்த்து வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும். ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67% மட்டுமே வருங்கால வைப்புநிதித் திட்டத்துக்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% `பணியாளர் ஓய்வூதியத் திட்டம்’ (EPS) என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.
1.9.2014-ம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களின்படி, அடிப்படைச் சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகிய இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் உள்ளபோது, பணியாளர்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பு பிடிக்கத் தேவை யில்லை எனக் கூறப்பட்டது. அதனால், நிறுவனத்தின் 12% பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதிக்கணக்கில்தான் வரவுவைக்கப்பட்டது. இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்கள் பென்ஷன் பெற முடியாத சூழல் உருவானது.
உச்சவரம்பு இனி கிடையாது!
மேலும், 1.9.2014-ம் தேதிக்குப்பிறகு புதிதாக வேலையில் சேர்பவர்களும், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை வருங்கால வைப்புநிதி ஆணையம் கடந்த 2018-ல் அறிவித்திருந்தது. வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் திட்டங்களில் இருக்கும் இந்த வேறுபாட்டை எதிர்த்து, கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியாளர்கள் சார்பில் கடந்த 2018-ல் வழக்கு தொடரப்பட்டது.
பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!
இந்த வழக்கினை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம், ‘ரூ.15,000 ரூபாய் என வரம்பு எதுவும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கக்கூடாது. வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்துக்குப் போன ஆணையம்
இந்தத் தீர்ப்பினை எதிர்த்து, வருங்கால வைப்புநிதி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என்று கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன்படி, கடந்த 1.9.2014 அன்று கொண்டுவரப்பட்ட வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் திருத்த மசோதா, மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைக்குச் சரிவருமா, இதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் (வேலூர் கிளை) உதவி ஆணையர் ஆர். கணேஷிடம் பேசினோம்.
இ.பி.எஸ் டெபாசிட் தொகை அதிகரிக்கும்
``பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் படி, ஒருவருடைய மாதச் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்புநிதியின் நிறுவனப் பங்களிப்பிலிருந்து 8.33% ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
பல மடங்கு உயரும் பி.எஃப் பென்ஷன்!
இதற்கான சம்பள வரம்பு மாதம் 5,000 ரூபாய் என ஆரம்பத்தில் வைக்கப்பட்டு, அதற்கு பி.எஃப் 12% பிடிக்கப்பட்டது. இந்த வரம்பு 6,500 ரூபாயாக அதிகரித்து, தற்போது 15,000 ரூபாயாக உள்ளது. இதில் 12% என்பது ரூ.1,800 பி.எஃப்-ஆகப் பிடிக்கப்படும். இதே அளவு தொகையை நிறுவன மானது பணியாளர்களின் பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்த ரூ.1,800-ல் 8.33% அதாவது, ரூ.1,250 ரூபாய் பணியாளர் பென்ஷன் கணக்குக்குச் செல்கிறது.
தனியார் நிறுவன ஊழியர்களின் பென்ஷன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வெறும் 15,000 ரூபாயை அடிப்படை ஊதியமாகக் கருதாமல், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, உச்ச நீதிமன்றமும் அப்படியே உறுதிசெய்திருக்கிறது. இதனால் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு அதிக பென்ஷன் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் கூறியதை நடைமுறைபடுத்த வேண்டும் என்றால், பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் நிறுவனத்தின் பங்களிப்பான 12% தொகையை முழுமையாக பென்ஷன் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.
இதுதவிர, பணியாளர்களின் 12% பங்களிப்பி லிருந்து குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அப்போதுதான் கூடுதல் தொகையை ஓய்வூதியமாக பணியாளர்களின் ஓய்வின்போது வழங்க முடியும். இதனால் பணி ஓய்வின்போது கிடைக்கும் பி.எஃப் மொத்தத் தொகை குறையும்” என்றார்.
தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் குழப்பங்கள் இருப்ப தால், விதிமுறைகள் அனைத்தும் முறைப்படுத்தப் பட்டபிறகு, இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்படும் நடவடிக்கையை பி.எஃப் அமைப்பு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் நிறுவன ஊழியர்கள் இந்தத் திட்டத்தின்மூலம் கிடைக்கும் பென்ஷனை மட்டுமே நம்பியிருக்காமல், புதிய பென்ஷன் திட்டத்தில் (NPS) சேர்ந்து, பணம் சேர்த்தால், எதிர்காலத்தில் கூடுதல் பென்ஷன் பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை!
செ.கார்த்திகேயன்
பென்ஷன் தொகை பல மடங்கு உயரும்!
தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி மாதச் சம்பளமாக ரூ.50,000 பெற்று பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால், தற்போது இருக்கும் பென்ஷன் திட்டத்தின்படி அவர் ஓய்வுபெற்றபிறகு மாதத்துக்கு ரூ.5,180 பென்ஷன் கிடைக்கும். இனிவரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழுச் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும்பட்சத்தில், புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
அதே நபர், 30 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசிச் சம்பளமாக ரூ.50,000 பெற்று, பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அவருக்கு ரூ.22,857 ஓய்வூதியம் கிடைக்கும். 25 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருந்திருந்தால், ரூ.19,225 ஓய்வூதியமாகக் கிடைக்கும். அதேபோல, ஒருநபர் தன்னுடைய கடைசிச் சம்பளமாக ரூ.1,00,000 பெற்றிருந்து 33 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்!
No comments:
Post a Comment