மருத்துவக் காப்பீடு - Medi Claim Policy
பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும்
நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறி விட்டோம்.
மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை
சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும்
இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்
நிதி ஆலோசகர்கள்.
மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம்
சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது
புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான
மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம்.
யாருக்குக் கிடைக்கும்?
இந்த காப்பீடு தனித்தனியாகவும்,
குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் (floter) என இரண்டு வகையிலும்
கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில் காப்பீடு செய்பவர் மட்டும் க்ளைம் செய்து
கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
க்ளைம் செய்து கொள்ளலாம்.
திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி
எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும்
இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். வயதான
பெற்றோர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் இவர்களை
புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக்
கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி
அனுமதிக்கப்படுகிறது.
யாருக்கு எந்த பாலிசி?
நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து
மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக
இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம்
கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
எப்படி க்ளைம் செய்வது
- பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.
- சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கன மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை க்ளைம் செய்து கொள்ள முடியும்.
பாலிசி எடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை
பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு
நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக
பாலிசி எடுப்பதற்கு முன்பே சில நோய்கள் இருந்துவரலாம். உயிருக்கு ஆபத்தை
ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை
பெறக்கூடிய நோய்கள் இவற்றின் உண்மை தன்மைகளை மறைக்காமல் குறிப்பிட
வேண்டும். சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாகக்
குறிப்பிடும். மருத்துவமனை தங்கும் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில்
அதற்கும் கவரேஜ் கிடைக்க வேண்டும். மேலும் மருத்துவமனை தங்கும் கட்டணங்கள்
நாள் ஒன்றுக்கு இவ்வளவுதான் என வரம்பு வைத்திருக்கும். இதில் அதிக பட்சமாக
தொகை க்ளைம் ஆவது போல பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள்.
சில பாலிசிகளில் மருத்துவச் செலவுகளை
நாம் செய்த பிறகு, ரசீதுகளை சமர்பித்து க்ளைம் செய்து கொள்வதாக இருக்கலாம்.
இதற்கான காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முக்கிய
மருத்துவமனைகள், அல்லது அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளுடன் காப்பீடு
நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொண்ட பிறகே காப்பீடு
எடுக்க வேண்டும்.
சில தவறுகள்
புளோட்டர் பாலிசியில் வயதான பெற்றோர்களை
இணைக்கக்கூடாது. அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ செலவாகும் என்பதால் தனியாக
எடுப்பதே நல்லது. அதுபோல அலுவல கத்தில் குரூப் மெடிக்கல் இன்ஷூரன்ஸ்
இருந்தாலும், தனியாக தனிநபர் அல்லது புளோட்டர் பாலிசியில் இருப்பதே நல்லது.
ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகிவிட்டால் அந்த காப்பீட்டின்
கவரேஜ் காலம் முடிந்துவிடும். எனவே எப்போதும் தனியாக எடுத்துக் கொள்வது
நல்லது.
அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள்
காரணமாக மருத்துவக் காப்பீடு அத்தியாவசிய தேவை என்பதில் யாருக்கும்
மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மருத்துவ காப்பீடு - சில தகவல்கள்
- 3 மாத குழந்தை முதல் 86 வயது வரையானோர் இந்த பாலிசி எடுக்கலாம்.
- பிரீமியம் தொகை குறைவு. அதிக பலன்கள்.
- எதிர்பாராத விபத்து, திடீர் நோய்கள் போன்றவை, நிச்சயமில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் நம்மால் திட்டமிட முடியாது. ஆனால் ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வதன் மூலம் இது போன்ற நேரங்களில் செலவுகளைச் சமாளிக்க முடியும்.
- குடும்பத்தில் அனைவரது மருத்துவ செலவுகளையும் மருத்துவக் காப்பீடு மூலம் ஈடு செய்யலாம்.
பிரீமியம் எவ்வளவு
தனிநபர் பாலிசி ரூ. 3 லட்சம் கவரேஜ்
தொகைக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 முதல் பிரீமிய தொகை ஆரம்பமாகிறது. கணவன்,
மனைவி ஒரு குழந்தை கொண்ட குடும்பத்திற்கான புளோட்டர் பாலிசி ரூ.3 லட்சம்
கவரேஜ் என்றால் ஆண்டு பிரீமியம் தோராயமாக ரூ.6,000 வரை செலவாகும். காப்பீடு
நிறுவனங்களுக்கு ஏற்ப பிரீமியம் தொகை வித்தியாசப்படும். ரூ.6,000
த்துக்குள் 3 லட்சம் வரையில் மருத்துவ செலவுகளை செய்துகொள்ள முடியும்
என்பதுதான் இதன் சிறப்பு. மூத்த குடிமக்கள், சர்க்கரை நோய் மற்றும் மரபு
நோய்கள் உள்ளவர்களுக்கான பாலிசிகளுக்கு பிரீமிய தொகை சற்று அதிகமாக
இருக்கும்.
உண்மை விவரங்கள்
மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம்
என்றால், காப்பீடு விண்ணப்பத்தில் நமது உடல் நலம் குறித்த உண்மை விவரங்கள்
அனைத்தையும் குறிப்பிட வேண்டும். மரபு நோய்கள், நமக்கு ஏற்கனவே
இருந்துவரும் நோய்களின் தன்மைக்கு ஏற்ப பிரீமியத்தொகை அதிகரிக்கலாம். ஆனால்
உண்மை விவரங்களை மறைப்பதன் மூலம் க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
பாலிசி எடுப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு அதனை பாலிசி
விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள்.
ஆதாரம் : நீரை. மகேந்திரன்