பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்!
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
அறிவின் வருவது யாதெனக் கேட்டேன்!
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகம் எனில் யாதெனக் கேட்டேன்!
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்!
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்!
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது யாதெனக் கேட்டேன்!
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தே
தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
அனுபவம் என்பதே நான் தான் என்றான் !
வாழ்க்கையில் எவருக்கும் எப்பொழுதும் வெற்றி கிடைப்பதில்லை. அதே போல் தோல்வி யாரையும் தொடர்ந்து தழுவுவதில்லை. வெற்றி-தோல்வி, ஏற்றம்-இறக்கம், இன்பம்-துன்பம், வளமை-வறுமை இப்படி எல்லாமே மாறி மாறித்தான் வரும். ஒரு செயலைச் செய்யத் திட்டமிடுகிறோம். சில நேரங்களில் வெற்றியும், சில நேரங்களில் தோல்வியும் கிடைக்கிறது. ஆனால் இரண்டு நிலைகளிலும் நமது மனம் அமைதியாக இருக்க வேண்டும். வெற்றி கிடைத்தால் மமதையில் எழுவதும், தோல்வி ஏற்பட்டால் துவண்டு விழுவதும் சரியல்ல.
நல்லது நடந்தால் சந்தோஷப்படுகிறோம். இல்லை என்றால் வருந்துகிறோம். இரண்டையும் அனுபவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் நமக்குத் தான் உசத்தியானது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. நினைத்தது கிடைத்தால் சரி. இல்லையென்றால் கோபமோ, பொறாமையோ, வெறுப்போ, கோபமோ, தாழ்வு மனப்பான்மையோ அளவிற்கு மீறிய வருத்தமோ கொள்வது தவறு. அதை மாற்றிக் கொண்டால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். வாழ்க்கை என்பது பல சம்பவங்களின் தொகுப்பு ! இதில் பல்வேறு உணர்ச்சிகளுக்கும் இடம் உண்டு.
ஒவ்வொன்றையும் ஒவ்வோர் அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் உண்ணும் உணவுகளில் பல்வேறு சுவைகளை நாம் அறிவோம். கசப்பும் உண்டு. இனிப்பும் உண்டு. துவர்ப்பும் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இவையெல்லாம் ஒரு சுவையிலிருந்து மற்றதை வேறுபடுத்திக் காட்டவே. ஒவ்வொரு சுவையையும் ருசித்துப் புசிக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தீதும், நன்றும் பிறர் தர வாரா!. எந்த நேரத்திலும் நிதானம் தவறினால் பாதிப்பு மற்றவர்களுக்கு அல்ல. நமக்குத் தான். நம் மகிழ்ச்சிக்கு என்றும் குறை வைக்கக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நம் மகிழ்ச்சி மற்றவர்களுக்குக் கெடுதலை விளைவிக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விடிந்தது முதல் நாள் முடியும் வரை பிரச்னைகளுக்கு இடையேதான் வாழ்க்கையே ஓடுகிறது. பெரும்பாலான நேரங்களில் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிடுகிறோம். சில நேரங்களில் நம்மால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். அப்போது என்ன செய்யலாம்? குழம்பலாம். ஆனால் குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது. தெளிவு ஏற்படாத பட்சத்தில் நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் மாயத்திரையை விட்டு விலகி வெளியே வரவேண்டும். தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருக்கலாம். இதுவே சாலச் சிறந்தது. தீர்வு காணமுடியாத இக்கட்டான நேரங்களில் கீதையின் சாராம்சத்தை நினைவு கூர்ந்தால் அமைதிக்கும், ஆனந்தத்திற்கும் உத்தரவாதம் உண்டு;.
நடந்தது நன்றாகவே நடந்தது. நடப்பது நன்றாகவே நடக்கிறது. நடக்கப் போவது நன்றாகவே நடக்கும்!
பிரச்னைகளின் முடிவில் நமக்குச் சாதகமான முடிவு கிடைக்கவில்லையென்றால் மனக் கசப்பு ஏற்படுகிறது. அதாவது மற்றவர்கள் நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வில்லை யென்றால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தமிழ்த் திரைப்படம் என்றால் பழிக்குப் பழி. ஆனால் இதற்குச் சரியான வழி மறப்போம், மன்னிப்போம் என்ற தாரக மந்திரமே.
எந்தவொரு செயலையும் இயந்திரம் போல் செய்தால், செய்யும் காரியத்தின் மீதோ அதன் தொடர்புடையவர் மீதோ வெறுப்பு வந்துவிடுவதை அனுபவபூர்வமாகச் சிலர் உணர்ந்திருக்கலாம். அவ்வப்போது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இந்தச் சலிப்பு உணர்வைத் தவிர்க்கலாம். மீசையில் மாற்றங்களைச் செய்யலாம். தலையலங்காரத்தில் மாற்றங்கள் செய்யலாம். புதுவகை ஆடைகளை அணியலாம். நிச்சயம் வித்தியாசமான உணர்வு ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைக்கலாம். நிலாச்சோறு உண்ணலாம். வசிக்கும் அறையில் தூங்கலாம். சிலருக்கு இதெல்லாம் பைத்தியக்காரத் தனமாகக் கூடத் தோன்றக் கூடும். முயற்சி செய்யுங்கள்.
மகிழ்ச்சியில் திளைப்பதும், துன்பத்தில் துவள்வதும் உங்களிடம்தான் உள்ளது. கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலத்தை நிச்சயமாகக் கூற முடியாது. நாம் இருப்பது நிகழ்காலத்தில். ஆகவே ஒவ்வொரு நிமிடமும், இல்லை.. இல்லை, ஒவ்வொரு வினாடியும் ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அது எப்படி ஆனந்தமாக வாழப்பழகுவது? நமக்குள் நாமே சொல்லிக் கொள்ளவேண்டும். “ஒவ்வொரு வினாடியும் நான் மகிழ்ச்சியில் இருக்க விரும்புகிறேன்”, என்பதை ஆழ்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்;. அப்புறம் பாருங்கள் துன்பம், கோபம், சோதனை, வெறுப்பு, பொறாமை, பேராசை இவையெல்லாம் உங்களைக் கண்டாலே தலைதெறிக்க ஓடிவிடும்.
“மனக்குதிரை எதை எதையோ நினைத்துப் புயலாகப் பறக்கும் போது, கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி நிகழ்காலத்துக்கு அழைத்து வந்து அந்த நேரத்தில் செய்து கொண்டிருக்கும் காரியத்தில் முழு கவனத்தை வைத்தால் நிம்மதி நிச்சயம்” என்பது கௌதமபுத்தரின் பொன்மொழி.
ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு ஈடுபட வேண்டும். அதுதான் முக்கியம்;. வேலை இல்லையென்றாலும் சின்னச் சின்ன வேலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். வேலைக்கா பஞ்சம். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் தூசி வந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. எங்கிருந்து தான் இந்தத் தூசி வருகிறதோ என்று நாம் தினம் தினம் அங்கலாய்த்துக்; கொண்டு தானிருக்கப் போகிறோம். ஆனால் அதோடு நிற்காமல் தூசி சென்றடையும் தொiலைக்காட்சி, ஜன்னல் ஓரங்களை, பயன்படுத்தாத நாற்காலிகளை, காற்றாடிகளை, குளியலறைக் கண்ணாடிகளை ஈரத் துணியால் துடைத்து அழகு பார்க்கலாம். இந்தக் காரியத்தை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அதைச் செய்வதற்கு ஓய்வு எடுப்பதே மேல் என்று நினைக்கலாம். ஓய்வு எடுப்பதில் தவறில்லை. கடினமாக உழைத்தால் ஓய்வு தேவைப்படும். அல்லது அடுத்து வரப் போகும் சிரமமான வேலைக்கு ஊக்கமாக இருக்கும் என்றால் ஓய்வு எடுக்கலாம்.
உண்ணும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவோர் உண்டு. வேலையை நினைத்துக் கொண்டு அப்போதைய கஷ்டங்களை அசைபோட்டுக் கொண்டு சுவையை அனுபவிக்க மறந்துவிடுவோரும் உண்டு. சாலையில் நடந்து போகும்போதும், பேருந்து நிறுத்தங்களிலோ, ரயில் நிறுத்தங்களிலோ காத்திருக்கும் போதும், பயணம் செய்யும் போதும்; நம்மில் பலர் பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியிருக்கிறோம். பச்சைப்பசேல் என்றிருக்கும் செடிகொடிகளைக் கண்டும் காணாதவாறு போய்க் கொண்டிருக்கின்றோம்.
பறவைகள் எழுப்பும் ஒலியும், வண்டுகளின் ரீங்காரமும் நம் காது மடல்களைத் தடவிக் காற்றில் கரைந்து விடுகின்றன. இலவசமான இந்த இசை நாதங்கள் நம்மை வந்தடையத் தயாராய் இருந்தாலும். உள்வாங்கி ரசிக்கும் நிலையில் நாம் இல்லை. இயற்கையின் அழகைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நம் மனதில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம் நம் மனம் அதில் இல்லை. மனத்தில் அன்றைய தினத்தில் அடுத்து வரப்போகின்ற, செய்யப்போகின்ற காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் காரியங்களால் நம் மனம் நிரம்பியிருப்பதால் கண் பார்த்தாலும் கண்ட காட்சிகளை மனதில் பதிவு செய்ய இடமில்லை. இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த இலவச இன்பங்களை அனுபவிக்க எத்தனையோ வாய்ப்பிருந்தும் இப்படித்தான் கோட்டை விடுகிறோம்.
ஆனந்தமாக இருக்கப் பல காரணங்கள் இருக்கும் போது ஏதோ ஒன்றை நினைத்து மகிழ்ச்சியான தருணங்களைத் தவறவிடுவது தவறு. ஒருவர் உற்சாகமாக இருக்கிறார் என்றால் அவர் இருக்கும் இடமே மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் கூட்டத்தில் ஒருவர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால், மகிழ்ச்சியாக இருக்கின்ற மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவி அவர்களையும் பாதிக்கும். அனைத்தையும் அனுபவித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வது சரியான முறையில் வாழ்வதற்கு மட்டுமல்ல. தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு. அனுபவம் என்பது அனைவரும் அனுபவித்துப் பார்க்கவேண்டிய ஒன்று. சுவையை எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியாதோ அப்படித்தான் அனுபவத்தையும் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது.