உலகில் உள்ள அனைவருக்குமே "வாழ்க்கை நிரந்தரம் அல்ல"
இதை தான் கண்ணதாசன் தன் பாடல் வரிகளினால் உணர்த்தியிருக்கிறார்.
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை
இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது!
"வாழ்க்கை நிரந்தரம் அல்ல" என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இன்று(26-ஜூலை-2021) இணையத்தில் பார்த்த அப்படிப்பட்ட ஒரு செய்தியை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த படத்தில் இருப்பவரின் பெயர் தீபா சர்மா.
ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர்.
இவர் தனது 38 வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர் சென்ற இடமெல்லாம் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்திருக்கிறார்.
அதுபோல தான் 25-ஜூலை-2021 நண்பகல் 12.59 மணிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நகஸ்டி செக் பாய்ண்டில் நின்று போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
“இதுதான் இந்திய எல்லையின் கடைசி இடம்.
இங்கு வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இடத்திலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் திபெத்தில் இந்திய எல்லை உள்ளது.
ஆனால் அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது”
என்று தனது கடைசி பதிவை பதிவிட்டுள்ளார்.
இது தான் அவருடைய கடைசி பதிவு என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த புகைப்படத்தை பதிவிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் (1.25 மணி) இவர் உயிரோடு இல்லை.
ஹிமாச்சலம் பிரதேசத்தில் உள்ள கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைகளிலிருந்து ராட்சத பாறைகள் வேகமாக உருண்டு தரை பகுதியை நோக்கி வந்தன.
இந்நிலையில் சங்லா-சிட்குல் சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்றும் வந்து கொண்டிருந்தது.அந்த சமயத்தில் பாலத்தின் மீது நிறைய பாறைகள் விழுந்ததால் தரையிலிருந்த பாலம் இடிந்து விழுந்தது.
அந்த நேரத்தில் பாலத்தின் மீது டெம்போவும் இருந்ததால் பாலத்துடன் சேர்ந்து டெம்போவும் கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே டெம்போவிலிருந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
அதில் தீபா சர்மாவும் ஒருவர்.
"ஜூலை 29 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றார்.
மிகவும் மகிழ்ச்சியோடு இந்த பயணத்தை மேற்கொண்டார்.
இந்த பயணத்திற்காக புதியதாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராவும் புது ஸ்மார்ட்போனையும் வாங்கி இருந்தார்.
சிறுவயது முதலே இயற்கையை மிகவும் நேசித்தார்.
இப்போது இயற்கையின் மடியில் சரணடைந்து விட்டார்.
அவரின் ஆத்மா நிம்மதியாக உறங்கட்டும்"
என்று தீபாவின் சகோதரரான மகேஷ் குமார் சர்மா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.