Total Pageviews

Wednesday, April 3, 2013

மன அமைதி நிம்மதி எங்கே? எதில் கிடைக்கின்றது ?


எனக்கு நிம்மதியே இல்லை...எனக்கு மன நிம்மதி வேண்டும்...' என்றெல்லாம் நம்மில் பலர் புலம்புகிறோம். ஆனால், அவர்களுடன் பேசிப் பார்த்தால் ஒன்று நமக்குப் புரியும். அதாவது, அவர்கள் உண்மையிலேயே அமைதியைத் தேடுகிறார்களா என்றால் -அதுதான் இல்லை. வியப்பாக உள்ளது அல்லவா?

தேடினால் மன அமைதி கிடைக்கும். அதற்காக முயற்சி செய்தால் வெற்றியும் கிட்டும். மனநிம்மதி மட்டுமே நம்முடைய குறிக்கோள் என்னும் நிலை நமக்கு வந்தால் மட்டுமே இந்த வெற்றி கைகூடும். அப்படியானால், மன அமைதியைத் தேடுகிறேன் என்று சொல்பவர்கள் தோற்பது ஏன்?

இங்கேதான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு சில ஏற்றுக் கொள்ள வேண்டிய-தவிர்க்க முடியாத பிரச்சினைகள் குறைந்தபட்ச அளவிலாவது இருக்கத்தான் செய்யும். இதுபோக, மனஅமைதி ஒருவருக்கு எந்த அளவு கிடைக்கிறது என்பது தான் முக்கியம். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, மன அமைதியை நாடுகின்றேன் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலர், மன அமைதியைத் தரக்கூடிய பொருள்கள், மனிதர்கள், சூழ் நிலைகள் என்ற சில காரணங்களைத்தான் நாடுகிறார்களே தவிர, உண்மையில் மன அமைதியை அல்ல.

அதாவது, ஏதோ ஒன்றை அடைந்தால், ஏதோ ஒன்று மாறினால் தாங்கள் மன அமைதி பெறமுடியும் என்ற உணர்வோடு தான் செயல்படுகிறார்கள். எனவே, அவர்கள் மன நிம்மதிக்கான சில வழிகளைத் தேடிக்கொண்டு மன அமைதியைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மன அமைதியைத் தருவதாகச் சொல்லப்படும் பொருள்களையும், சூழ்நிலை களையும் மனிதன் தேடுகிறான். ஆனால், அவன் மனதில் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், குற்ற உணர்வு, பொறாமை, அதிருப்தி போன்ற உணர்வுகள் நிறைய உள்ளன. அதிருப்தி என்ற குணம் ஒருவனுக்கு இருக்கும்போது, அவனுக்குக் கிடைத்த பொருளால் நிறைவு ஏற்படுவதில்லை. மன நிம்மதி பறிபோகிறது. எனவே, மன நிம்மதி வருவதற்குக் காரணம் ஒரு பொருள் அல்ல.

ஒரு பொருளின் வரவால் மனிதன் பெற்ற நிம்மதி சில  காலத்துக்குப் பின் மறைந்து போய், இன்னொரு பொருள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் மீண்டும் அவனை மன அமைதியைத் தேட வைக்கிறது.

ஆகவே, கிடைத்த பொருள்களிலும் ஏதாவது அதிருப்தி-குறை மனிதனுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. புதிய பொருள்களுக்காக ஏங்கும் எதிர்பார்ப்பு உணர்வாலும், மனிதன் மீண்டும் அமைதி பெற ஏதோ ஒன்றை மறுபடியும் நாடுகிறான்.

இதைப்போல, பொறாமை என்ற குணம் ஒருவனிடம் இருந்தால், முதலில் பறிபோவது அவனுடைய நிம்மதிதான். மற்றவர்கள் எதையாவது அடைந்தால், ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்து காணப்பட்டால் அவன் மன நிம்மதியை இழக்கிறான். காரணத்தைத் தன்னிடமே வைத்துக் கொண்டு மன அமைதி இல்லை என்று புலம்புகின்றான்.

மனிதன் தவறு செய்யாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். தன்னையும் அறியாமல் தவறுகள் நேர்ந்து விட்டால், அதற்காக வருந்தி மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடந்ததையே நினைத்துக் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டால் மன அமைதியை இழக்க வேண்டியது வரும். நடப்பவை எல்லாம் நம் எதிர்பார்ப்பின்படியேதான் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் மனிதனுக்கு இருக்கிறது. இதில் ஏமாற்றம் வரும்போது மனம் தன் அமைதியை இழக்கிறது. யாரோ ஏதோ புண்படும்படியாகச் சொல்லி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நேரமோ அல்லது கொஞ்ச நாட்களோ அதை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மன அமைதி எப்படி வரும்?

உண்மையிலேயே அமைதி தேவைப்படுபவர்கள் அந்த நினைவின் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டும். மன அமைதிக்கு எதிரான உணர்வுகளில் இருந்து விடுபடுவதுதான் மன அமைதிக்கு வழி. மனிதன் தன் மனதில் உள்ள சில எதிர்மறையான எண்ணங்கள் மூலம் சிறைப்பட்டிருக்கிறான். அந்த எதிர்மறைச் சிறையில் இருந்து அவன் விடுபட வேண்டும். இதற்காக முயலுவதே அமைதியைத் தேடும் நல்ல வழியாகும்.

5 comments:

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...