Total Pageviews

Friday, April 19, 2013

உன் நண்பனே உன் எதிரி

உன்னுள்ளே அல்லது வெளியே இருக்கும் எதிரிகளை இனங்கண்ட பின்னரும் சும்மாயிருக்கலாமா? உடனே செயல்படுங்கள்.

உன் நண்பனே உன் எதிரி

உன் வகுப்பில் உன்னோடு படிக்கும் சில நண்பர்கள் – உன்னைப் புகைக்க அழைப்பார்கள். இப்போது சொல் அவர்கள் உன் எதிரிகள் தானே?


இவர்களில் சிலர் மனதளவில் ஆர்வத்தைக் குலைப்பார்கள். இரண்டு மடங்கு ஆர்வத்தோடு படிப்பது தான் நீ இவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும்.
 
சிலர் வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு வெளியே சண்டைக்கு இழுப்பார்கள். இவரோடு நேரடியாக மோதாதே. பழிக்குப் பழி என்றபோக்குத் தவறானது. என் கண்ணைக் குத்தினான். எனவே அவன் கண்ணைக் குத்தினேன் என்று இருவரும் குருடாகலாமா?
 
தாக்க வந்தால் பொறுமையாயிரு. உடனே தலைமையாசிரியரிடம் சொல். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருபோதும் சட்டத்தை நீ கையில் எடுக்காதே.
 
கழுத்தைப் பிடித்து நெருக்கினால் பொறுமையாய் இருக்காதே. திருப்பித்தாக்கு. நமது உயிரை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான உரிமை (Right of Private Defense) நமக்குள்ளளது.
 
எனக்கும் இப்படிப் பட்ட நண்பர்கள் இருந்தார்கள். கொஞ்சம் சண்டையும் போட்டேன். பிறகு ஞானோதயம் வந்தது. அவர்களை ஒதுக்கி விட்டு, படிப்பில் இரண்டு மடங்குஆர்வம் காட்டினேன். அவர்கள் இன்றும் சிட்டுக் குருவிகளாக – ஆட்டோ ஓட்டுநராக, ஆட்டோ பழுதுநீக்குபவர்களாக இருக்கிறார்கள். நான் மேகங்களின் மேலே பறக்கும் பருந்தாக – காவல்துறை உயர் அதிகாரியாக வலம் வருகிறேன். இப்போது அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான்தான் அவர்களுடைய சிறந்த நண்பன் என இப்போது சொல்கிறார்கள்.
 
எனவே தீய நண்பர்களோடு சேராதே. அவர்களுடைய சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டாம். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள ஒரே வழி – இரு மடங்கு வெறித்தனத்தோடு படிப்பது தான். இதுதான் நான் சென்றவழி, உனக்கு சொல்லும் வழி; எதிரிகளை வெல்லும் வழி.
உனக்குள்ளே எத்தனை எதிரிகள்

உனக்குள்ளேயே இருக்கும் எதிரியைச் சமாளிப்பது சற்று கடினம்தான். அதற்கு அதீத துணிச்சலும், மிகுந்த கட்டுப்பாடும் வேண்டும். கூடுதலாக நிறைய சுயபரிசோதனை செய்ய வேண்டும்.


உன் நண்பன் உன்னை புகைப்பிடிக்கச் சொல்கிறான். சரி எனத் தலையாட்டும் முன் – கை நீட்டும் முன், ஒரு கேள்வி கேள்.

நான் புகைப்பதை என் தாய் விரும்புவாளா? நான் புகைப்பதைப் பார்த்தால் ஏற்றுக் கொள்வாளா?

தாய் விரும்பாத ஒன்றை, நீயும் விரும்பாதே, விட்டொழி. ஒரு எதிரியை வீழ்த்தியாயிற்று.
 
முதல் மதிப்பெண் பெறுகிறான் உன் நண்பன். அவனைப் பார்த்து உனக்கேன் பொறாமை? அவன் முதல் மதிப்பெண் பெற விலையாகக் கொடுத்தது அவனது வியர்வை. அதை உணராமல், பொறாமைப்படுவது, அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது காலவிரயம். அவனைப் போல் நானும் உழைப்பேன். மதிப்பெண் பெறுவேன் என்று எண்ணி பொறாமை என்னும் எதிரியை வீழ்த்து.

உன் செயல்பாட்டுக்கு உன் உடலே தடையாக இருக்கலாமா? கூடுதல் எடையா? கூடுதல் விழிப்புணர்வு தேவை.

‘ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கு’ என்று கூறினர் நம் முன்னோர். உண்பதைக் குறை ஆனால் மனதில் உறுதி வேண்டும். வருத்த வேர்க் கடலையைக் கைநிறைய கொடுத்தாலும் ஒன்றை மட்டும் கொரித்து விட்டுப் போதும் எனச் சொல்லும்
மன உறுதி வேண்டும்.

பீசா, பர்கர் போன்றவற்றை உண்பதை நீக்கி, காய்களையும் கனிகளையும் உண்டால், பாரதியார் விரும்பியவாறு வாள் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் கிடைக்குமே.

தினமும் உடற்பயிற்சி செய்க. அல்லது வாரத்தில் மூன்று நாள்களாவது ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என்பதை வழக்கப்படுத்திக் கொள். எடை குறைந்து, நடையில் மிடுக்கு ஏற்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். உனக்குள் நம்பிக்கையும் உற்சாகமும் ஒருசேர ஊற்றெடுக்கும். மிதமான உணவும் முறையான உடற்பயிற்சியும் மருத்துவ செலவைப் பாதியாய் குறைக்கும். ஆம். உடற்பயிற்சி ஒரு தவம். அதன் பயன் உடல் நலம் என்னும் வரம்.

இந்த நல்ல செய்தியை உன் பெற்றோருக்கும் சொல்.
 
நம் அக எதிரிகள் மற்றும் புற எதிரிகளுக்கான போரை நிறுத்தவே கூடாது. வாழும் வரை இப்போரைத் தொடருவோம்.

 நன்றி: சைலேந்திர பாபு செ



No comments:

Post a Comment

ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் பு...