Total Pageviews

Wednesday, February 8, 2012

போக்குவரத்து விழிப்பு உணர்வுப் பூங்கா



''உங்களை எல்லாம் திருத்தவே முடியாது...' - வெளியே செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒரு லாரி, ஆட்டோ, மினி பஸ் டிரைவரை இப்படித் திட்டாமல் நாம் வீடு திரும்புவது அபூர்வம். என்றாவது அவர்களைத் திருத்த முயற்சித்திருக்கிறோமா என்றால், இல்லை. 'தனி மனுஷனால என்னத்தப் பெருசா சாதிச்சிட முடியும்?’ என்பது நாம் சொல்லும் சமாதானம்.
 
ஆனால், நரசிம்ம மணி என்ற இளைஞரை ஒருமுறை சந்தித்தால், நம் எண்ணம் அப்படியே தலைகீழாய் மாறிவிடும். யார் இவர்? மதுரைப் பக்கம் ஏதாவது லாரியை ஓரங்கட்டி, டிரைவருக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் நபரை நீங்கள் காண நேர்ந்தால், சந்தேகமே இல்லாமல் அவர்தான் நரசிம்ம மணி.

''அண்ணே, சில ரோடுகள்ல நடுவுல விட்டுவிட்டு கோடு போட்டிருக்காங்க. இன்னும் சில ரோடுகள்ல விடாம ஒரே கோடா போட்டிருக்காங்க அது எதுக்குண்ணே?' என்று அவர் கேட்க, ''தெரியலையே!'' என்று சொல்கிறார் டிரைவர். ''தெரியலைன்னு ஒப்பு கொள்வதே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதற்கான முதல்படி'' என்று சொல்லி பிஸ்கட் பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கும் நரசிம்ம மணி, ''விட்டு விட்டுப் போட்டிருந்தா வலது பக்கமா ஓவர் டேக் பண்ணிட்டு, திரும்பவும் நம்ம லைனுக்குள்ள வந்திடலாம். ஆனா, ஒரே கோடா இருந்துச்சுன்னா கண்டிப்பா கோட்டுக்கு அங்கிட்டுப் போகவே கூடாதுண்ணே! இதை மத்த டிரைவருக்கும் சொல்லிக் குடுங்கண்ணே' என்று அன்பொழுகச் சொல்கிறார்.
திருப்பாலை முனீஸ்வரன் நகர் விவேகானந்தா தெருவில் இருக்கும் அந்த வீட்டில் காலடி வைக்கும் போதே, சாலையில் நுழைந்த உணர்வு வந்துவிடுகிறது. காரணம், நடைபாதையையே சின்ன சாலை போல் மாற்றி ஆங்காங்கே சிக்னலும் வைத்திருக்கிறார். ஒரு ஹால், நான்கு அறைகளைக் கொண்ட அந்த வீட்டை டிரான்ஸ்போர்ட் ரூம், டிராஃபிக் ரூம், டூல்ஸ் ரூம், டிரையினிங் ரூம், ரெஸ்ட் ஹவுஸ் என்று போக்குவரத்து விழிப்பு உணர்வுப் பூங்காவாக மாற்றி வைத்திருக்கிறார் நரசிம்ம மணி.
விபத்து நடந்தால் யார் யாருக்குத் தகவல் கொடுக்க வேண்டும்?

முதலுதவி சிகிச்சை எப்படிச் செய்யலாம்? வாகனங்களின் தொழில்நுட்பங்கள், அவை செயலிழக்கும்போது எப்படிச் சமாளிப்பது? டூல்ஸ்களை எப்படிக் கையாள்வது என மாடல் கார், சாலைகளை வைத்து எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறார். இதற்கு எந்தக் கட்டணமும் இவர் வாங்குவதில்லை!

எப்படி வந்தது இந்த ஆர்வம்?

''1997-ல் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்துக் கொண்டு இருந்தபோது, ஒரு கொடூர விபத்து. லாரி டிரைவரின் தவறால் மோட்டார் சைக்கிளில் சென்ற என் நண்பன் உடல் நசுங்கி இறந்து போனான். தகவல் கிடைத்ததும் மாணவர்கள் எல்லாம் கோபத்தோடு கிளம்பிப் போனோம். தப்பு டிரைவர் மீதுதான் என்று தெரிந்தும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், இறந்துபோன என் நண்பனிடத்தில் டிரைவிங் லைசென்ஸ் கிடையாது. கோபம் தணிந்த பிறகுதான் புரிந்தது, ஒரு டிரைவருடைய அறியாமை யாரோ ஒருவரின் உயிரை அநியாயமாகப் பலி வாங்கிவிடுகிறதே என்பது! அப்போதே தீர்மானம் எடுத்தேன், 'யாருடைய சாவுக்கும் நான் காரணமாக இருக்க மாட்டேன்’ என்று.

அடுத்த கட்டமாக, அறியாத டிரைவர்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் இன்னும் பல பேருடைய உயிரைக் காப்பாற்றலாமே என்ற எண்ணம் வந்தது. அதே நேரத்தில் பிறருக்குக் கற்றுக் கொடுக்க நான் தகுதியானவன்தானா என்று கேள்வியும் எழுந்தது. அதனால், இலகு ரக, கன ரக ஓட்டுனர் பயிற்சி மட்டுமின்றி நடத்துனர், ஜே.சி.பி ஆபரேட்டர் ஆகிய உரிமங்களை பெற்றதுடன் முதலுதவி சிகிச்சை, தீ விபத்து மேலாண்மை, எம்.ஏ,. பொது நிர்வாகம் போன்ற பிற படிப்புகளையும் கற்றுத் தேர்ந்தேன். 'ஏன் இப்படி வாழ்க்கையை வீணடிக்கிற?' என்று கேட்காமல், இதற்கெல்லாம் என் குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்ததுதான் மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரைவர்களுக்காகவே 'டிரைவிங் நீட்ஸ் அகாடெமி’ என்ற டிரஸ்ட்டை நான் தொடங்கியபோது, அதற்காக வீட்டின் கீழ் தளத்தையே விட்டுத் தந்தார்கள்.
லாரி டிரைவர்களுக்கு நான் சொல்லும் முக்கியமான விஷயம், ''மற்ற வாகன ஓட்டிகள் தவறாக வந்தால், அவர்களுக்குத்தானே நஷ்டம் என்று மோத விட்டு விடாதீர்கள். அந்த காரில் உங்களது மகன் வந்தால் எப்படி நடந்து கொள்வீர்களோ, அப்படி நடந்து கொள்ளுங்கள்!'' என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறேன்.

பயிற்சி அளிக்க கடைசியாக நான் பயன்படுத்தும் ஆயுதம் வீடியோ. கவனக்குறைவு, சிக்னலை மதிக்காமை, அதிக வேகம், ஓவர் லோடு உள்பட வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 10 ஆயிரம் நேரடி விபத்துக் காட்சிகளை நான் வைத்திருக்கிறேன். இருண்ட அறைக்குள் புரொஜக்டரில் சினிமா போல அவற்றைக் காட்டி, சின்னத் தவறால் நொடியில் ரத்தமும் சதையுமாக மனிதர்கள் நசுங்கிப் போவதை விளக்கும்போது மனம் வெறுத்துப் போவார்கள். கோவிலுக்குச் சென்றால் எப்படி பக்தி வருமோ, அதைப்போல என் வீட்டைத் தேடி வந்தால் இனிமேல் யாருடைய சாவுக்கும் நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு டிரைவருக்கும் வந்துவிடும்.

கடைசியாக, ஒவ்வொரு டிரைவரிடமும் சின்ன நோட்டு ஒன்றைக் கொடுத்து, 'இன்று என்னால் உயிர் பிழைத்தவர்கள் இத்தனை பேர்’ என்று தினமும் அந்த டைரியில் எழுதச் சொல்வேன். ஒரு டிரைவர் ஒரே மாதத்தில் அந்த டைரியை முடித்துவிட்டு, 'வேறு டைரி தாங்க சார்’ என்று சொன்னார். என்னால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள்தான் என்னை இன்னும் இன்னும் செயல்பட வைக்கிறது' என்றார். டிரைவர்களுக்கு மட்டுமின்றி படித்த இளைஞர்களுக்கும், கல்லுரி, பள்ளி மாணவர்களுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார் நரசிம்ம மணி!
-
மோட்டார் விகடன்

 பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை. 

ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.



No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...