Total Pageviews

Thursday, February 16, 2012

ஜெயந்தி என்றொரு நீதிதேவதை!

அஜீத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சிட்டிசன்’ திரைப்படத்தில், அதிகாரிகளின் அராஜகத்தால் அத்திப்பட்டி எனும் கிராமமே அழிந்துபோகும். கிட்டத்தட்ட அதற்கு இணையான ஓர் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது,

 சென்னை, திருமுல்லைவாயில், ஜெயா காலனி. இதற்கு காரணமான நீதிபதி ஐ.ஜெயந்தியை... நீதிதேவதையாகவே போற்ற ஆரம்பித்துவிட்டனர் அந்த மக்கள்!

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேலான நரிக்குறவர்கள் வசிக்கும் 1.8 ஏக்கர் நிலம், தனக்குச் சொந்தமானது என்று அம்பத்தூர் முன்சீப் நீதிமன்றத்தில் பாலு என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 18 வருடங்களாக இழுபட்ட வழக்கில்தான்... 'அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. அந்த மக்களே தொடர்ந்து அங்கு வாழலாம்’ என அதிரடியாக தற்போது தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜெயந்தி.

'கிழிந்த உடைகளுடன் தினமும் காலையிலிருந்து மாலை வரை நீதிமன்றத்தில் காத்திருந்து நீதிக்காக போராடியுள்ளனர் அந்த ஏழைகள். ஆனால், மனுதாரர் தரப்பில் 'டாம் அண்ட் ஜெர்ரி' ஓடிப் பிடித்து விளையாடுவது போல 18 ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
காரணம் இல்லாமல் வாய்தா கேட்டு வழக்கை தள்ளி வைப்பதால், சட்டங்களை அந்த ஏழைகள் தங்களின் நண்பனாக கருதாமல் எதிரியாகத்தான் கருதுவார்கள். வழக்கை ஒரு நாள் தள்ளிப் போட்டாலும்கூட, அது அந்த ஏழைகளின் ஒரு நாள் சாப்பாட்டில் மண் அள்ளி போடுவதற்கு சமமாகும்’
- இப்படியெல்லாம் நெத்தியடியாக இன்னும் பல கருத்துக் களையும் தீர்ப்பில் ஜெயந்தி வெளிப்படுத்தியிருப்பது... அவருடைய மதிப்பை பல படிகள் உயர வைத்துவிட்டது.

''ஜெயந்திம்மா இந்த கோர்ட்டுக்கு வந்த பின்னதான், கோர்ட்டுக் குள்ள எல்லாம் எங்களால வரமுடிஞ்சுதுங்க. அதுக்கு முன்ன... 'உள்ள வரக்கூடாது'னு அதிகாரிங்க வெரட்டி வெரட்டி அடிப்பாங்க. ஜெயந்தியம்மாதான் உள்ள அனுமதிக்கச் சொல்லி, என்ன பிரச்னைனு அன்பா, அக்கறையா விசாரிச்சாங்க. எங்களையும் சக மனுசங்களா மதிச்சி பேசின முதல் மனுஷி!'' என்று முகத்தில் நன்றியும், நெகிழ்ச்சியும் ததும்பப் பேசுகிறார் நரிக்குறவர்கள் பொதுநலச் சங்கத்தின் தலைவர் தனலட்சுமி.


''எப்பவுமே ஜெயந்தி இப்படித்தாங்க. இல்லாதவங்களுக்காக இரக்கப்படுறது... அவங்க ரத்தத்துல ஊறின ஒண்ணு'' என்று சொல்லி நெகிழ்கிறார், அவருடைய கல்வி வழிகாட்டிகளில் ஒருவரான, சென்னைப் பல்கலைக்கழக பொது நிர்வாகவியல் துறை பேராசிரியர் ரவிசங்கர்.

''ஜெயந்தியோட பூர்விகம்... கன்னியாகுமரி மாவட்டம். படிப்புனா... ஜெயந்திக்கு ரொம்பப் பிடிக்கும். மனித உரிமையியல், இந்திய அர சியல் சட்டம், இன்டர்நேஷனல் லா இப்படி பத்துக் கும் மேலான மேற்படிப்பு பட்டங்களை வாங்கியிருக் காங்க. ரெண்டு பிஹெச்.டி. முடிச்சிருக்காங்க.
'என்னோட படிப்பு ஆர்வத்துக்கு காரணமே... அப்பா ஐசக்தான். அவர் ஸ்கூல்ல தலைமை ஆசிரியரா இருந்தவர். எங்களோட சாப்பாட்டை பத்திக்கூட கவலைப்பட மாட்டார். யாராவது படிப்பு செலவுனு கேட்டா போதும்... கையில இருக்குற பணத்தை எடுத்துக் கொடுத்துடுவார். அந்த ஆர்வம்தான் என்னையும் படிக்கத் தூண்டிக்கிட்டே இருக்கு!’னு ஜெயந்தி சொன்னப்ப... நான் அசந்துட்டேன்.

ரோட்டுல ஒரு சின்னக் குழந்தை அழுக்கு சட்டையோட போறதை பார்த்தாலும்... பக்கத்துல அழைச்சு... 'என்ன படிக்கிறே... அப்பா, அம்மா எங்கே?'னு கேட்பாங்க. படிக்கலைனா... அந்தக் குழந்தையை பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பாங்க!

டயானா அப்படிங்கற திருநங்கை, நோய் வாய்ப்பட்டு கவனிக்க ஆளில்லாம உடல்நிலை ரொம்ப மோசமா கிடந்தாங்க. கடைசி கட்டத்துலதான் ஜெயந்திகிட்ட உதவி தேடி வந்தாங்க. அதுக்குப் பிறகு, டயானாவுக்காக ரொம்ப பிரயத்தனம் பண்ணினாங்க ஜெயந்தி. ஆனாலும் காப்பாத்த முடியல! ராத்திரி பன்னிரண்டு மணினுகூட பார்க்காம ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போயி அடுத்து ஆக வேண்டிய வேலைகளையெல்லாம் ஜெயந்திதான் செய்து முடிச்சாங்க. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

அவங்களோட வேலை, படிப்பு, பொதுச்சேவைனு பல விஷயங்களுக்கும் உறுதுணையா இருக்கறது... கணவர் தேவதாஸ். குடிநீர் வடிகால் வாரியத்துல வேலை பார்க்கறார். இவங்களுக்கு ஒரே பொண்ணு மாஸி. பல் டாக்டருக்கு படிச்சுட்டிருக்காங்க! இத்தகைய குணம் வாய்ந்த அவங்களுக்கு லெக்சரரா பாடம் எடுக்கறதையே நான் பெருமிதமாத்தான் நினைப்பேன்'' என்று ஜெயந்தி பற்றி நம்மிடம் எடுத்து வைத்தார் ரவிசங்கர்.

ஆனால், ஜெயந்தியின் தீர்ப்பு தந்த மகிழ்ச்சி 24 மணிநேரம் கூட நீடிக்காததுதான் எதிர்பாராத சோகம். தற்போது சென்னை, 20-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்துக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுவிட்டார் ஜெயந்தி.
இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று கொதிக்கும் ஜெயா காலனி மக்கள், 'ஜெயந்தியம்மாவ மறுபடியும் எங்க பகுதி நீதிமன்றத்துக்கே பணிமாற்றம் செய்யணும்’ என்று உயர் நீதிமன்றம், கமிஷனர் அலுவலகம் என்றெல்லாம் எழுப்பிக் கொண்டிருக்கும் கோஷங்களை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

- அவள் விகடன்

No comments:

Post a Comment

சர்க்கரை நோயாளிகள் - உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

  சுகர்னு  டாக்டர் கிட்ட போராங்க ..   அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet  கொடு க்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொட...