Total Pageviews

Wednesday, May 16, 2012

ஊருக்குப் போகிறீர்களா? திருடர்கள் ஜாக்கிரதை



கோடை விடுமுறைக்காலம்  சுற்றுலாத் திட்டம் போட்டு வைத்திருப்பார்கள்.
வீட்டு பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பதை திட்டமிட்டீர்களா?
அது தான் பெரிய பூட்டாகப் போட்டு பூட்டி விட்டுத் தானே போவோம் என்பீர்கள். அது மட்டும் போதுமா? இன்னும் சில ஜாக்கிரதைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த திருட்டும் திட்டமிடாமல் நடத்தப்படுவதில்லை. வீடு கட்டுபவர்கள் பந்தாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதுகாப்புக்கு கொடுப்பதில்லை. ஐம்பது லட்ச ரூபாயை கொட்டி தாம்தூம் என்று பகட்டாக வீடு கட்டுபவர்கள், பெரிய ஜன்னல், பெரிய கதவு, வென்டிலேட்டர், ஏ.சி..க்காக பெயர்த்தெடுத்த ஜன்னல் என்று ஆரம்பத்திலேயே திருடர்கள் விசிட்டுக்கு வசதி பண்ணிக் கொடுத்து விடுகிறார்கள். அதோடு வீட்டு பாதுகாப்புக்கு காயலான் கடையில் கால்வாசி விலைக்கு வாங்கிய பூட்டு வாசலில் தொங்கும். இம்மாதிரி பூட்டுக்கள் திருடர்களை பார்த்த மாத்திரத்தில் அதுவாகவே திறந்து கொள்ளும்.
வெளியூர் போவதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் தம்பட்டம் அடித்து விட்டுப் போவது நல்லதல்ல. அதுமாதிரி பயண தினத்தில் ஆட்டோ, அல்லது டாக்சியை வீட்டுக்கு வரவழைத்து ஒட்டுமொத்த குடும்பமும் ஏறிச்செல்வதும் சரியல்ல. ஆளில்லா வீடு என்பது அப்போதே உறுதிப்படுத்தப் பட, திருடர்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. குறைந்த பட்சம் தெருமுனை வரை வந்தாவது ஆட்டோ பிடிக்கலாம்.
நீங்கள் வெளியூரில் எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள் என்பதையும் அதுவரை பாதுகாப்பு அவசியம் என்பதையும் ஒரு மனுவாக குறிப்பிட்டு அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுக்கலாம். நள்ளிரவு ரவுண்ட்ஸ் வரும் நேரங்களில் உங்கள் வீட்டீன் மீது போலீசாரின் விசேஷப் பார்வை படும். இதுவே வசதியானவர்கள் என்றால் தனியார் செக்யூரிட்டி உதவியையும் நாடலாம்.
ஊருக்குப் போகும்போது நகைகளையோ பெரிய தொகையையோ வீட்டில் வைத்து விட்டுப் போவது சரியல்ல. ஊரில் இருந்தாலும் உங்கள் கவனம் முழுக்க அவற்றின் மீதே இருக்கும். அதிக நகைகள் இருந்தால் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு சேப்டி லாக்கர் வாங்கி அதில் வைக்கலாம்.
நீங்கள் பிளாட்டுகளில் வசிப்பவர்களாக இருந்தால், ஒன்று அல்லது இரண்டு செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் அது போதாது. உங்கள் அருகாமை வீடுகளில் உள்ள பிளாட்டில் இருப்பவர்களிடம் அவர்கள் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஊருக்குப் போனதும் நட்பு ரீதியில் தினமும் ஒருமுறையாவது அவர்களுடன் பேசி விடுங்கள். அப்போது வீட்டுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என்பதை அவர்கள் இயல்பாக பேசுவதில் இருந்தே உணர்ந்து கொள்வீர்கள்.
சிலர் வீடுகளுக்கு பேப்பர் பையன்கள் பால் போடுபவர்கள் அனுதினமும் வருவார்கள். இவர்களிடம் ஊருக்குப் போகும் ஒரு வாரத்துக்கு முன்பே இத்தனை நாட்களுக்கு பால், பேப்பர் வேண்டாம் என்பதை தெளிவுபடுத்தி விடுங்கள். இவர்களில் யார் ஒருவரிடம் சொல்ல மறந்தாலும் வீட்டுவாசலில் நீங்கள் கட்டி வைத்திருக்கிற பை நிரம்பி நீங்கள் வீட்டில் இல்லை ஊருக்கே உரக்கச் சொல்லி விடும்.
இதையெல்லாம் சரியாக செய்து விட்டீர்களானால் உங்கள் டூர் நிச்சயம் கொண்டாட்டம் நிறைந்ததாய் அமையும்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...