மனிதனுடைய ஆயுள், குறைந்த காலமே. இதை உணர்வதில்லை மனிதன்; ஆனால், மகான்கள் உணர்ந்திருக்கின்றனர். உலக சுகத்தில் ஆசை வைப்பதில்லை மகான்கள். மனிதனுக்கு மட்டும் ஆசை குறைவதில்லை. இதன் காரணமாக, குடும்பம், மனைவி, மக்கள் மீது ஆசை வைக்கிறான்.
மனைவியின் மீதுள்ள ஆசையால், எத்தனையோ துன்பங்களை ஏற்றுக் கொள்கிறான்; எத்தனையோ செலவு செய்கிறான். மனைவிக்கு பத்தாயிரம் ரூபாயில் ஒரு புடவை வாங்கும் அவன், தனக்கு நூறு ரூபாயில் வேஷ்டி வாங்கிக் கொள்கிறான். தனக்கென்று பெரிதாக எதுவும் செய்து கொள்வதுஇல்லை. மனைவிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார். காரணம், அவள் மீதுள்ள ஆசை!
அதேபோல், தன் குழந்தைகள் மீதும் ஆசை வைக்கிறான். அவர்களுக்காக நிறைய செலவும் செய்கிறான்; இதற்கும் ஆசைதான் காரணம். நிறைய ஆபரணங்கள் அணிந்து, பட்டுப் புடவை உடுத்தி, நாலு பேர் முன், தன் மனைவி போக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். தன் பிள்ளைகள் நன்றாக படித்து, பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறான். அதற்காக கடன் வாங்கியாவது நிறைய செலவு செய்கிறான். இப்படியாக, தன் ஆசையை நிறைவேற்றி சந்தோஷப்படுகிறான்.
இவர்களுடைய வாழ்நாள் எண்ணப்பட்டு வருகிறது என்பதை, அவன் உணர்வதே இல்லை.
பிறந்தால், இறக்க வேண்டும் என்பது நியதி. அற்ப சந்தோஷத்திலேயே மூழ்கியிருந்தால், தன் நற்கதியை பற்றியும் சிந்திக்க வேண்டாமா? அதற்கு தான் பூஜை, தெய்வ வழிபாடு, தெய்வ தரிசனம், மகான்களின் தரிசனம் என்று எத்தனையோ வழிகள் உள்ளனவே! இதிலும் சிரத்தை எடுத்துக் கொண்டால், மறு பிறவிக்கு உதவுமே! சும்மா உலக இன்பங்களில் ஆசை வைத்து, பேரின்பத்தை இழக்கலாமா? யோசியுங்கள்.
No comments:
Post a Comment