Total Pageviews

Wednesday, December 14, 2011

மனிதர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?



தற்கொலை செய்துகொள்ளும் பெரும்பாலோனோருக்குத் தீவிர மன அழுத்தப் பாதிப்பு இருந்திருக்கும்.அந்நிலையில் அவர்களுடைய மூளையில் ரசாயன மாற்றம் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை. மன அழுத்தத்தில் உள்ளவர்கள் நல்லநிலையில் உள்ளவர்களைப் போல் சிந்திக்க முடிவதில்லை. அவர்களுடைய நோயின் தீவிரம் அவர்களை வேறு எதையும் கண்கொண்டு பார்க்க முடியாமல் தடுத்துவிடுகிறது. 'நிகழ்காலம்' ஒன்றுமில்லாமல் இருப்பதால் எதிர்காலமும் அப்படித்தான் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

அவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு என்று ஒன்று இருப்பதாகவே நினைப்பதில்லை. அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணமே மூளையில் உதிப்பதில்லை.

உணர்ச்சிகளாலும் உடல் பாதிப்பாலும் தாக்கப்படுகிறார்கள். நம்பிக்கையும் உதவியும் இழந்த நிலைக்கு வந்துவிட்டதாக உணர்கிறார்கள். இறப்பதற்கு விரும்பவில்லை என்றாலும் அவர்களுடைய 'வலி'யை முடிவுக்குக் கொண்டுவர அதுதான் வழி என்று நினைக்கிறார்கள். ஆனால், இது அறிவுக்குப் பொருந்தாத தேர்வாகும். வேறெந்த நோயையும் நாமே தேடிக்கொள்ளாததைப் போலவே மன அழுத்தத்தையும் நாமே தேடிக்கொள்வதில்லை. ஆனால் அதற்கும் சிகிச்சையுண்டு, மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழலாம்.

நினைவிருக்கட்டும்- மன அழுத்தத்திற்கு மதுவோ வேறு போதைப் பொருட்களோ மருந்தல்ல.பெரும்பாலான மககள் அவர்களுடைய 'வலி'க்கு நிவாரணியாக மதுவையும் போதை மருந்துகளையும் பயன் படுத்துகிறார்கள். ஆனால், அது பிரச்சினையை அதிகப்படுத்திவிடுகிறது-. நிதானமின்மையால், திடீர் உணர்ச்சிக்கு ஆளாகிறபடியால் தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடுகிறது.

யாரெல்லாம் தற்கொலை முயற்சி செய்கிறார்கள்?

வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதிலிருந்து மீள உதவி கிடைக்கப் பெறாதவர்கள் தற்கொலை முயற்சி செய்கிறார்கள்.

தற்கொலைக்குக் காரணங்கள்.
  • அன்புக்குரியவரின் இழப்பு.
  • விவாகரத்து, பிரிந்து வாழ்தல், உடைந்துபோன உறவு.
  • பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமைக் காலம்.
  • வேலை இழப்பு, பணம், சொத்து இழப்பு.
  • நோயின் தீவிரம்.
  • மோசமான விபத்து.
  • நீண்டநாள் உடல் வலி.
  • வலி தரும் மனக் காயங்கள்.
  • நம்பிக்கை இழந்த நிலை.
  • குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான துன்புறுத்தல்.
  • அன்புக்குரியவருக்கு ஏற்பட்ட கொடுமையைத் தாங்க இயலாமை.
  • ஏளனமான, இழிவான பேச்சு .
  • சதி வலையில் மாட்டிக்கொள்ளுதல்.
  • சட்டப் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளுதல்.
  • மானக் குறைவு ஏற்படுவதால்.
  • தோல்வியைச் சந்திக்கப் பயந்து. (தேர்வு,தேர்தல் முதலானவை.)
  • குடும்பம், நண்பர்கள் , சமுதாயம் போன்றவற்றால் விலக்கி வைக்கப்படுதல்.
  • மோசமான ஏமாற்றம்.
  • கேலி , கிண்டல் செய்யப்படுதல்.
  • தன்னம்பிக்கைக் குறைவுமேற்கண்ட காரணங்கள் மன அழுத்தத்திற்குக் காரணமாகின்றன.
சிகிச்சையளிக்கப்படாத மன அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாகிறதுஒரு குடும்பத்தில் பெற்றோர்களுக்கோ உடன் பிறந்தவர்களுக்கோ தற்கொலை எண்ணம் இருப்பின் (தற்கொலை செய்துகொண்டிருந்தால்) மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்கொலை மூலம் அவர்கள் சாதிப்பதென்ன?     தற்கொலை மூலம் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. ஆனால், அவர்கள் உதவி ஏதும் கேட்காமல் அல்லது கிடைக்காமல் போன ஏமாளிகள் என்பதை நாம் அலட்சியப் படுத்திவிட முடியாது. ஆனால், அதை அவர்கள் வெளிப்படுத்திய வழிமுறை முற்றிலும் தவறானது. அவர்களுடைய வலியை, வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்தித் தீர்வு காண இயலாத தற்குறிகள். தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்கள் அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிடில் மீண்டும் அதே வழியைத் தேடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் தற்கொலைக்கான காரணத்தை அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கவேண்டிய பொறுப்பு சுற்றியுள்ளவர்களுக்கு இருக்கிறது.

ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
  • அடிக்கடி  தற்கொலைபற்றிப் பேசுவார்கள்.
  • உணவு மற்றும் உறக்கக் குறைபாடு இருக்கும்.
  • தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது.
  • நடத்தையில் குறிப்பிட்ட அளவு மாறுதல்.
  • நண்பர்களிடமிருந்தும் சமுதாயத் திலிருந்தும் விலகி இருத்தல்.
  • உயில் எழுதுதல் போன்ற கடைசி ஏற்பாடுகளைச் செய்தல்.
  • வேலை, பொழுதுபோக்கு, படிப்பு போன்றவற்றில் ஈடுபாடு குறைதல்.
  • தேவையில்லாத இடர்களை ஏற்றுக்கொள்ளுதல்.
  • அண்மையில் ஏற்பட்ட பெரிய நட்டத்தைப் பற்றிய கவலை.
  • சாவை எதிர்நோக்கித் தயார்படுத்திக் கொள்ளல்.
  • தன் தோற்றத்தைப்பற்றிக் கவலைப்படாமல் இருத்தல்.
  • மது, போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துதல்.
    தற்கொலை எண்ணத்தில் இருப்பவரை  எப்படித் தடுத்து நிறுத்துவது?
  • நேரடியாகப் பேசுங்கள். தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கேட்டறியுங்கள்.
  • அவர்களுடைய பேச்சைக் கேட்பதில் ஆர்வம் காட்டுங்கள். அவருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள், அவருடைய உணர்வுகளை மதியுங்கள்.
  • நீங்களாக எந்தத் தீர்ப்பையும்  சொல்லாதீர்கள். அவர்களுடைய உணர்வுகள் சரியா தவறா, அல்லது தற்கொலை சரியதவறா என்று வாதம் செய்யாதீர்கள். வாழ்க்கையின் மதிப்பைப் பற்றி விரிவுரை ஆற்றாதீர்கள்.
  • அவர்கள் சொல்வதை ஆர்வமாகக் கேளுங்கள், அவர்களுடனே இருங்கள். ஆதரவு காட்டுங்கள்.
  • எதையும் செய்யச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்.
  • அதிர்ச்சியானதாகக்  காட்டிக் கொள்ளாதீர்கள்.
  • ரகசியமாக வைத்துக் கொள்ளாதீர்கள். தேவையான உதவியை நாடுங்கள்.
  • மாற்று வழிகள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். அலங்காரமான வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள்.
  • நடவடிக்கையில் இறங்குங்கள். தற்கொலைக்குத் தேவையான கருவிகளை அப்புறப்படுத்துங்கள்.
  • தற்கொலைத் தடுப்பு சங்கம், உளப்பிணி மருத்துவர் போன்றோரை உதவிக்கு அழையுங்கள்.
பள்ளிகளின் கடமை

தற்காலத்தில் இளவயதினரும் மாணவர்களும் கூட அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதனால் பள்ளிகளில் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியைப் பள்ளி நிருவாகமும் மாணவர்களும் சேர்ந்து செய்யவேண்டும். சமூகத் தொண்டு நிறுவனங்களையும் மருத்துவர்களையும் உதவுமாறு கேட்டுக் கொள்ளலாம்தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டங்களை மாணவர்களுக்கு சிறு சிறு குழுவாகப் பிரித்து வழங்க வேண்டும். தலைப்பைப் பற்றி முழுமையாக தெளிவுரவழங்கவேண்டும். சிறு சிறு துண்டறிக்கைகளை வழங்கலாம்தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு கல்வியறிவு கிடைத்திருக்கிறது. அதிக உடலுழைப்பு இல்லாமல் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கிறது. உலக அறிவு அதிகரித்திருக்கிறது. ஆனால், வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைந்திருக்கிறது. எளிதாகப் பணம் சம்பாதிக்க வழியிருக்கும் பலர் சின்னச் சின்னக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்திருக் கிறது. ஆகையால், பணம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தந்துவிட முடியாதுஒரு சிறிய நிகழ்வு. தூத்துக்குடி உரத் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பூங்காக்களில் உள்ள மரங்களுக்குத் தினந்தோறும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அவ்வப்போது உரம் இடப்படுகிறது. இதனால் அந்த மரங்கள் வேகமாகவும் செழிப்பாகவும் வளர்கின்றன. ஆனால், அந்த வளாகத்திற்கு வெளியே உள்ள மரங்கள் இதைப் போன்ற கவனிப்பு இல்லாததால் நிதானமாகத்தான் வளர்கின்றன.        ஒரு புயல் அடித்தால் போதும் உரத் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்துவிடுகின்றன. அதே சமயத்தில் வெளியே தானாக வளரும் மரங்கள் புயல் காற்றுக்கு ஈடுகொடுத்து நிற்கின்றன. காரணம்,தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரங்கள் தண்ணீருக்கும் உரத்திற்கும் வேர்களை ஆழப் பாய்ச்ச வேண்டியதில்லை.கேட்காமலே எல்லாம் கிடைத்துவிடும். ஆனால், வெளியே தானாக வளரும் மரங்கள் மிக முயன்று தண்ணீரையும் சத்துப் பொருட்களையும் தேடவேண்டி யிருக்கிறது. இதனால் அதன் வேர்கள் ஆழத்தில் ஊன்றியிருக்கின்றன.     மனிதனின்  வாழ்க்கையில் துன்பமும் இருக்கும் என்பதை உணர்த்தும் கல்விமுறையும், சமுதாயப் பழக்கவழக்கங்களும் தேவை. துன்பங்களை எதிர்கொள்ளும் மனத்திடத்தையும்உடல் வளத்தையும் பெறும் அறிவை மரங்களிட மிருந்துகூடக் கற்றுக் கொள்ளலாம்


Thanks to Mr.K.Arulmozhi- Unmaigal

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...