Total Pageviews

Tuesday, December 27, 2011

மனிதநேயத்தையும் தாண்டி.....தியான பயிற்சி



பிறர் சொல்லாத வரை நாம் அவரை தியான ஆசிரியர் என்றுதான் நம்பக் கூடும். தியானத்தை ஒரு கலையாக மட்டும் அணுகாமல் அறிவியல் மற்றும் வரலாற்று பூர்வமாக பேசுவதைக் கேட்கும்போது, தியானத்தில் அவர் வைத்திருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.


இன்றுள்ள தியான பயிற்சி ஆசிரியர்களுக்குத் தெரியாத தகவல்களைக் கூட அவர் தெரிவிக்கும்போது, நாமும் அவரிடம் யோகா கற்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மை அறியாமல் ஏற்படுகிறது.
தான் அறிந்த கலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், புழல் சிறைக் கைதிகளுக்கு அவர் தியான பயிற்சி அளிப்பதை சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது.
அவர் சிறைக் கைதிகளை ஏ.டி.ஜி.பி. டோக்ராவாக மட்டுமின்றி மனிதநேயமுள்ள மனிதராக அணுகுவது, கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துள்ளது. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற 6 மாதங்களாக 50 கைதிகளுக்குத் தியான பயிற்சி அளிக்கும் டோக்ரா, மேலும் பல கைதிகளுக்கு தியான பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம், தாரிவால் பகுதியைச் சேர்ந்த எஸ்.கே. டோக்ரா, 1982 -ல் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. எனப் பல பதவிகள் வகித்துள்ளார்.
இப்போது சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் டோக்ரா, பல்வேறு பணிச்சுமைக்கு இடையே நமக்கு அளித்த பேட்டி:
தியானம் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் இருந்தே தியானம் கற்று வருகிறேன். புத்தங்கள் மூலம் தியானம் செய்யும் முறையை அறிந்த பின்னர் அதன்படி செய்யத் தொடங்கினேன். என்னுள் தியானம் ஏற்படுத்திய மாற்றத்தை உணர்ந்ததால், மேலும் அதைப் பற்றி அதிகமாக படித்தேன். இன்றும் தியானத்தைப் பற்றி படித்து புதிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
நீங்கள் பின்பற்றுவது எந்த வகை தியானம்?
மகரிஷி பதஞ்சலி முனிவர் எழுதிய யோகா சூத்ரா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானத்தை செய்து வருகிறேன். இன்று உலகத்தில் உள்ள அனைத்து தியான வகைகளிலும் பதஞ்சலி கூறியதை அடிப்படையாக கொண்டதே ஆகும். மேலும் மனித மூளை செயல்பாடுகளை நுட்பமாக தெரிந்துக் கொண்டு, அதற்கு ஏற்றார்போல தியானம் செய்கிறேன்.
கைதிகளிடம் தியானம் குறித்த ஆர்வத்தை எவ்வாறு ஏற்படுத்தினீர்கள்?
தியானம் மூலம் கைதிகளின் நடத்தையையும், சிந்தனையையும் மாற்ற முடியும் என எண்ணினேன். மேலும் மன உளைச்சலில் இருப்பவர்களை அதில் இருந்து மீட்க முடியும் என நினைத்தேன்.
அதன்படி புழல் சிறையில் கைதிகளுக்கு தியான பயிற்சி அளிக்கத் திட்டமிட்டேன். ஏ.டி.ஜி.பி. என்பதற்காக யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை, விருப்பமுள்ள கைதிகள் இதில் சேரலாம் என அறிவித்தேன். முதலில் 10 கைதிகள்தான் சேர்ந்தனர்.
தியானம் அவர்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை மற்ற கைதிகளிடம் கூற, கைதிகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. ஒரு வகுப்புக்கு 50 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்காக, வேறு கைதிகள் சேர முன்வந்தும் சேர்க்கவில்லை.
தியான முறைகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கிறீர்கள்?
வாரந்தோறும் கைதிகளுக்குத் தியானத்தை கற்றுக் கொடுக்கிறேன். 2 மணி நேரம் நடக்கும் வகுப்பில், முதலில் கைதிகள் தியானத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்பதற்கு அவர்களை மனம் திறந்து பேச வைப்பேன். அவர்கள் அமைதியான மனநிலைக்கு வந்த பின்னர், தியானம் கற்றுக் கொடுக்கிறேன்.
பயிற்சியில் பங்கேற்ற கைதிகளிடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
கடுமையான மன உளைச்சலிலும், தீய உணர்விலும், கட்டுக்கடங்காத கோபத்திலும் சிக்கித் தவித்த அவர்கள், தியான பயிற்சியின் மூலம் ஆழ்மன அமைதியை உணர்ந்துள்ளனர். தாங்கள் செய்த தவறுகளின் பாதிப்பை புரிந்துள்ள அவர்கள், நல்லவற்றை சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது சக கைதிகளிடம் அன்பு செலுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால், தாங்கள் இருப்பது சிறை என்பதை மறக்கத் தொடங்கியுள்ளனர்.
அடுத்த திட்டம்?
இதுவரை அளித்த தியான பயிற்சியில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளதால், மேலும் தியான பயிற்சியை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளேன். அடுத்ததாக மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிக புகார்களுக்கு உள்ளாகும் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் புழல் சிறையில் தியான பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
இதன் மூலம் சிறைகளில் ஏற்படும் பிரச்னை கட்டுப்படுத்தப்படுவதோடு, அவர்களும் வாழ்க்கையில் நல்ல நிலைக்குச் செல்ல முடியும். இப்பயிற்சியை ஜனவரி இறுதியில் இருந்து தொடங்க உள்ளேன்.

No comments:

Post a Comment

45 - வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை!

                                                      45 வயதுக்கு மேற்பட்டவர்கள்   கவனிக்க வேண்டியவை!    நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும...