Total Pageviews

Monday, April 13, 2026

வெளிநாடு போற ஆசை எல்லாருக்கும் இருக்கும். ஆனா, "மாசம் 4 லட்சம் சம்பளம்", "வீடு அவங்களே தருவாங்க"ன்னு யாராவது சொன்னா, கண்ணை மூடிக்கிட்டு நம்பாதீங்க.

 இதோ நம்ம ஊர் தஞ்சாவூர் 'மெடிக்கல் காலேஜ் ரோடு' சம்பவத்தை ஒரு கதையா விவரிக்கிறேன்

என் தம்பியோட நண்பன் ஒருத்தன் ஓடி வந்து, "மச்சான் ஒரு பாய் இருக்காரு, ஆஸ்திரேலியாவுக்கு லேபர் விசா எடுத்துத் தர்றாராம்."நம்ம போயி ஒரு 5வருஷம் கஷடப்பட்டா செட்டில் ஆயுடலாம் ஆசை வார்த்தை சொன்னான்

தம்பியோட நண்பர் அப்பா போலீஸ்ல பெரிய அதிகாரி, அதனால பயப்படத் தேவையில்லை"ன்னு நினைச்சுகிட்டு

நாங்களும் ஒரு ரெண்டு லட்சம் ரூபாயைத் தூக்கிட்டுப் போய் அவர் கையில வச்சோம்.

மனுஷன் பாக்குறதுக்கு அப்படியே சேரன் படத்துல வர்ற ஆனந்தராஜ் மாதிரி கம்பீரமா, ஆனா ரொம்ப நைசாப் பேசுவாரு.

எடுத்த உடனே, "தம்பி, முதல்ல ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுங்க"ன்னு ஒரு 5000 ரூபாயைக் கட்டச் சொன்னாரு. நாங்களும் கட்டினோம். "ஆஸ்திரேலியா போயிட்டா மாசம் 4 லட்சம் சம்பளம், தங்குற இடம் அவங்களே தந்துடுவாங்க, வாழ்க்கை ஜேஜேன்னு இருக்கும்"னு அவர் அள்ளிவிட்ட வாக்குறுதியில நாங்க அப்படியே ஆகாயத்துல மிதக்க ஆரம்பிச்சோம்.

என் தம்பிக்கு ஒரே உத்வேகம், "எப்படியாவது அங்க போயிட்டு செட்டில் ஆயிடணும்"னு கனவு காண ஆரம்பிச்சுட்டான். எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன சந்தேகம் இருந்தாலும், அவர் பேசுற பேச்சைப் பார்த்தா அப்படியே நம்ப வச்சுடுவாரு.

அவருக்கு ஒரு மார்க்கெட்டிங் ஆள் வேற அவர் கரெக்டா சாயங்காலம் 6 மணிக்கு நம்ம அன்பு லெசி கடைக்கு வருவாரு. என் தம்பி அவன் நண்பர்களை எல்லாம் கூட்டிட்டுப் போய் அந்த ஆளுகிட்ட விபரம் கேட்பான். "என்கிட்ட 200 விசா லெட்டர் இருக்கு"ன்னு ஒன்னைக் காமிச்சு, தஞ்சாவூர் முழுக்க இருக்கிற பசங்களை வளைச்சுப் போட்டாங்க.

பாய் செம குஷியாகி ஒரு புது கார் வாங்கி, ஊர்ல இருக்குற பெரிய அரசியல்வாதிகள் கூட சுத்த ஆரம்பிச்சாரு. அவரோட பையனுக்குப் பெரிய இடத்துல விமரிசையா கல்யாணம் வேற பண்ணி வச்சாரு. எல்லாம் நம்ம பசங்க பணம் தான்

ஆறு மாசம் ஓடிடுச்சு... ஆனா விசா வந்த பாடில்லை. ஒரு நாள் கோவமாப் போய்க் கேட்டேன், "என்ன பாய், எப்ப விசா கிடைக்கும்?"னு. உடனே அவர் முகத்தை ஒரு மாதிரி பாவமா மாத்திக்கிட்டு, "தம்பி, இப்படிப் பேசாதீங்க... நான் என்ன உங்க காசை ஏமாத்தவா போறேன்? எனக்குப் பிள்ளை குட்டிங்க இருக்கு, பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் எனக்குத் தெரியும்"னு சென்டிமென்ட் டயலாக் பேசினாரு. நான் அப்படியே மெல்ட் ஆகி, என் நண்பர் ஒருத்தரையும் அவர்கிட்ட கூட்டிட்டுப் போய் பணம் கட்ட வச்சேன்.

கொஞ்ச நாள் கழிச்சு என் தம்பி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தான். "அண்ணே, விசா வந்துருச்சு எல்லாரையும் சென்னை போகச் சொல்லிட்டாங்க, மிதி காசைக் கட்டணும், டிக்கெட் போடணும்"னு சொன்னான். தஞ்சாவூர்ல பணம் கட்டுன எல்லாரையும் சென்னைக்குக் கூட்டிட்டுப் போக ரயில்வே டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணியாச்சு. தம்பி டிரஸ் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டான். "ஆஸ்திரேலியாவுல 'மில்டுரா' (Mildura)ங்கிற இடத்துல செர்ரி பழம் பறிக்கிற வேலை, மாசம் 4 லட்சம் சம்பளம்"னு ஏஜென்ட் சொன்னதை நம்பி, "ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது"ன்னு பசங்க எல்லாம் செம ஹேப்பி

ஆனா அங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட்

"இன்னும் நிறையப் பேர் பணம் கட்டலை, அதனால பாய் தன் வீடு, கார் எல்லாத்தையும் அடகு வச்சு விசா ரெடி பண்றாரு"ன்னு ஏஜென்ட் ஒரு பிட்டைப் போட்டாங்க. (அப்புறம் தான் தெரிஞ்சது அந்த வீடு வாடகை வீடு, கார் லோன்ல இருக்குன்னு!). இதனால பயணம் ரெண்டு வாரம் தள்ளிப் போகுதுன்னு சொன்னாங்க. பாவம் நம்ம பசங்க, "அய்யோ பாய் நமக்காக இவ்வளவு கஷ்டப்படுறாரே"ன்னு நினைச்சு, இவங்களே பைக் எடுத்துட்டுப் போய் பணம் தராத மத்த பசங்க வீட்டுக்கு மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சாங்க.

இதுக்கிடையில ஒரு பெரிய கொடுமை... ரோட்டு ஓரமா இட்லிக் கடை நடத்துற ஒரு முஸ்லிம் சகோதரி, தன் கணவன், தம்பி, மைத்துனன்னு மூணு பேருக்குச் சேர்த்து 10 லட்சம் ரூபாயைக் கந்து வட்டிக்கு வாங்கி அந்த பாய்கிட்ட கொடுத்திருக்காங்க. அவங்க வட்டி கட்ட முடியாம குடும்பமே ரோட்டுக்கு வந்து நிற்குது.

இப்பதான் எனக்குப் புத்தி வந்துச்சு. 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' பண்ற மாதிரி, ஒரு வழியா அந்த விசா காப்பியை ஆஸ்திரேலியா எம்பஸிக்கு அனுப்பி விசாரிச்சேன். அங்க இருந்து ஒரு மெயில் வந்துச்சு பாருங்க... "இது சுத்தப் பொய், முழுக்க முழுக்க ஃப்ராடு! உடனே போலீஸ்ல புகார் கொடுங்க"ன்னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான்... என் தம்பி, அவனோட நண்பர்களை எல்லாம் கூட்டிட்டுப் போய், அந்த எம்பஸி மெயிலைக் காட்டி மிரட்டுனேன். பாய் பயந்து போய், வாங்குன அசலோட சேர்த்து ஒரு 10,000 ரூபா அதிகமாவே கொடுத்து எல்லாருக்கும் செட்டில் பண்ணிட்டாரு.

விழிப்புணர்வு செய்தி

தம்பிகளா, வெளிநாடு போற ஆசை எல்லாருக்கும் இருக்கும். ஆனா, "மாசம் 4 லட்சம் சம்பளம்", "வீடு அவங்களே தருவாங்க"ன்னு யாராவது சொன்னா, கண்ணை மூடிக்கிட்டு நம்பாதீங்க. ஒரு விசா கிடைச்சா அது ஒரிஜினலான்னு அதிகாரப்பூர்வமான இடத்துல செக் பண்ணுங்க. தெரியாத ஒருத்தர்கிட்ட லட்சக்கணக்குல பணத்தைக் கொட்டிட்டு அப்புறம் வருத்தப்படாதீங்க

வணக்கம்

பாலாஜி ஸ்ரீனிவாசன்

கதை இதோட முடியல... அந்த க்ளைமாக்ஸ் தான் ரொம்பவே ரணமானது. அந்த இட்லி கடை அக்கா பாவம், வாய்க்கும் கைக்கும் தான் அவங்க வாழ்க்கை. தம்பியும், மத்தவங்களும் ஆஸ்திரேலியா போய் நம்ம கஷ்டத்தை எல்லாம் தீர்த்திடுவாங்கன்னு நம்பி, கந்து வட்டிக்கு 10 லட்சத்தை வாங்கி அந்தப் பாய்கிட்ட கொடுத்தாங்க. ஆனா, கடைசியில விசா வரல, கொடுத்த பணமும் திரும்ப வரலன்னு தெரிஞ்சதும், அந்த அக்காவோட தம்பி மனசு தாங்காம, "வாங்குன கடனை எப்படித் திருப்புவேன்?"ங்கிற பயத்துலயே தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரு. ஒரு குடும்பத்தோட விளக்கே அணைஞ்சு போச்சு.

​விஷயம் சீரியஸாகி அந்தப் பாய் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் போச்சு. ஆனா, அங்கதான் அந்த ஆளோட தில்லாலங்கடி வேலை தெரிஞ்சது. எங்க கிட்டயும், அந்த அக்கா கிட்டயும் ஏமாத்துன பணத்துல இருந்து ஒரு 50 லட்சத்தைத் தூக்கி அப்படியே போலீஸுக்கே 'கப்பம்' கட்டிட்டு, ஒரே ராத்திரியில குடும்பத்தோட அந்த ஊரை விட்டே எஸ்கேப் ஆயிட்டாரு அந்தப் பாய்.

இதுல அந்தப் பாயோட பையனுக்கு தன்னுடைய பெண்ணை கொடுத்து கல்யாணம் பண்ணித் தந்தாரே அந்த மாமனார், அவர் நிஜமாவே ஒரு தெய்வப்பிறவி (அவர் நல்ல பாய் )

அந்த மனுஷன் தங்கமானவர். சம்பந்தமே இல்லாம அவர் கைக்காசைப் போட்டு, முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் பேருக்குப் பணத்தைச் செட்டில் பண்ணி ஓரளவுக்குப் பாரத்தைக் குறைச்சாரு.

ஆனா அந்தப் பாய்?

இன்னைக்கு வரைக்கும் எங்க இருக்காருன்னு யாருக்குமே தெரியல. எங்கயோ ஒரு மூலையில மறுபடியும் ஒரு புதுப் பேரை வச்சுக்கிட்டு, வேற யாரை ஏமாத்தலாம்னு வலை விரிச்சுக்கிட்டு தான் இருப்பாரு.

தம்பிங்களா, ஒரு சின்ன எச்சரிக்கை

இந்த மாதிரி மோசடிப் பேர்வழிகள் கார்ல வருவாங்க, அரசியல்வாதிங்க கூடப் படம் காட்டுவாங்க, ஏன்... போலீஸ் பின்னணி இருக்குன்னு கூடச் சொல்லுவாங்க. ஆனா, அவங்க காட்டுற அந்தப் பந்தா எல்லாம் நம்ம ரத்தத்தை உறிஞ்சுன காசுல வந்தது.

அந்த இட்லி கடை அக்கா தம்பியோட சாபம் அந்த ஆளை சும்மா விடாது. வெளிநாட்டு ஆசை காட்டுற எல்லாரையும் நம்பாதீங்க, "முழிச்சுக்கோ தம்பி முழிச்சுக்கோ"ன்னு தான் இதைப் படிக்குற ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்லுவேன். ஏன்னா, ஏமாத்துறவன் எஸ்கேப் ஆகிடுவான், ஆனா நாம தான் நடுத்தெருவுல நிப்போம்

No comments:

Post a Comment

ஏப்ரல் 29 ,2026 முதல் மே 12, 2026 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது

  உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திற...