*தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.*
*நடு ரோடு, காருக்கு அடியில், வீட்டு வாசல் போன்ற இடங்களையே அது தேர்ந்தெடுக்கிறது.*
*ஒவ்வொரு சப்தத்திற்கும் தலை உயர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீண்ட நிம்மதியான தூக்கம் என்பது அந்த நாய்க்குக் கிடையாது.*
*கேட்டைத் திறந்தால், காரை ஸ்டார்ட் செய்தால், ஏதாவது வண்டிகள் வந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வாண்டுகள் கல்லெடுத்து அடித்தால் என எப்போதும் ஏதாவது ஒரு ஆபத்து அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.*
*இதற்குக் காரணம் நாயிடம் தேர்வு செய்யும் திறன் இல்லாததே. எந்த இடத்தைத் தேர்வு செய்தால் யாருடைய தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கலாம் என அதற்குத் தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.*
*மனிதர்களில் கூட பலருக்கு தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போவதால் அந்த நாயைப் போலவே நிம்மதியின்றி அலைகின்றனர்.*
*கடந்தகால அனுபவம், தற்கால சூழ்நிலை இவற்றைக் கொண்டு எதிர்கால விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதைக் கணித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்தால் அந்த நாயைப் போல துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.*
*வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய தவறு செய்கிறான். பின்பு வாழ்க்கையையே போர்க்களமாய் மாற்றிக் கொள்கிறான்.*
*ஒரு தொழில் துவங்கும்போது யாரோடு பார்ட்னர் சேரலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் பார்னர்ஷிப் தொழில் செய்து பின்னர் ஏமாந்துபோய் புலம்புகிறான்.*
*சிட்பண்ட்டில் யாரிடம் பணம் போடலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் யாரோ ஒருவரிடம் போட்டு ஏமாந்து போகிறான்.*
*ஒருவரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகப் பழகி முடிவில் அது விரோதத்தில் முடிகிறது.*
*வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் கயவர்களை அனுமதித்து துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான். இதுபோல இன்னும் ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகலாம்.*
*தேர்ந்தெடுக்கும் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும். நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.*
*ஆகவே தியானத்தின் மூலம் நல்ல சிந்தனைத் திறனையும், நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொண்டால், தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை. துன்பத்திற்கும் வாய்ப்பில்லை.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்.

No comments:
Post a Comment