சென்னை வீதிகளில் நாலணாவிற்கு பலூன் விற்ற ஒரு கல்லூரி மாணவர், இந்தியாவின் மிக விலையுயர்ந்த நிறுவனத்தின் அதிபரான கதை தெரியுமா உங்களுக்கு.!
மம்மன் மாப்பிள்ளை பிறப்பால் ஒரு ஏழை அல்ல; கேரளாவின் புகழ்பெற்ற 'மலையாள மனோரமா' நாளிதழ் மற்றும் 'திருவிதாங்கூர் நேஷனல் அண்ட் குயிலோன் வங்கி' (TNQB) ஆகியவற்றின் அதிபரான கே. சி. மம்மன் மாப்பிள்ளையின் மகன்தான் இவர்.
அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த 'சர் சி. பி. ராமசாமி அய்யர்' அவர்களின் அடக்குமுறை ஆட்சியை, இவர்களது குடும்ப நாளிதழ் கடுமையாக விமர்சித்தது. இதனால் கோபமடைந்த திவான், பழிவாங்கும் நோக்கில் அந்த வங்கியின் மீது திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி பெரும் பண நெருக்கடியை உருவாக்கினார். 1938-ஆம் ஆண்டு வங்கிய முடக்கிய அரசாங்கம், இவர்களது ஒட்டுமொத்த குடும்பச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. மம்மனின் தந்தை மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே இரவில் அந்த கோடீஸ்வரக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.
இந்தக் கொடூரம் தமது குடும்பத்திற்கு நடந்தபோது, மம்மன் மாப்பிள்ளை சென்னையில் உள்ள புகழ்பெற்ற மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியான MCC-யில், தனது இளங்கலை படிப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.
கல்லூரி கட்டணம் கட்டவோ, தங்குவதற்கோ அரையணா காசு கூட அவரிடம் இல்லை. ஆனால், அவர் படிப்பைக் கைவிடவில்லை. வறுமையின் உச்சகட்டமாக, தனது கல்லூரி நாட்களை அவர் 'செயிண்ட் தாமஸ் ஹால்' விடுதியின் வெறும் தரையில் படுத்து உறங்கியே கழித்தார்.
படிப்பை முடித்த மம்மன் மாப்பிள்ளையிடம் வேலை இல்லை. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அடுத்த சில ஆண்டுகள் வறுமையிலிருந்து மீள அவரும் அவரது குடும்பத்தினரும் சிறு வேலைகளைச் செய்து போராடினர். சுமார் 8 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 1946-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு கடனாகத் திரட்டிய ₹14,000 கூட்டு முதலீட்டில், சென்னை திருவொற்றியூரில் ஒரு சிறிய வாடகை தகரக் கொட்டகையில் பொம்மை பலூன்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். இதுவே வரலாற்றுச் சிறப்புமிக்க Madras Rubber Factory (MRF) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும்.
கம்பெனியை துவங்கிவிட்டாலும், அவர் முதலாளியாக நாற்காலியில் உட்காரவில்லை. தனது மனைவியுடன் சேர்ந்து பலூன்களைத் தயாரித்து, ஒரு பையில் நிரப்பிக்கொண்டு மெட்ராஸ் வீதிகளில் நடந்தே சென்று பலூன்களை விற்றார்.
காலப்போக்கில் பலூன்கள் விற்பனை நல்ல லாபத்தைத் தந்ததும், மம்மன் மாப்பிள்ளை ரப்பர் சார்ந்த மற்ற பொருட்களையும் தயாரிக்கத் துவங்கினார். திரவ ரப்பரைக் கொண்டு செய்யப்படும் லேடெக்ஸ் பொம்மைகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரப்பர் கையுறைகள் மறறுய் மருத்துவப் பயன்பாட்டிற்கான உறைகள் என்று பல பொருட்களை அவர் கம்பெனி செய்து விற்கத் துவங்கியிருந்தது.
1950களின் தொடக்கத்தில், இந்தியாவில் டயர் மற்றும் ரப்பர் தயாரிப்புச் சந்தை முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. குறிப்பாக Dunlop, Firestone, Goodyear போன்ற பிரம்மாண்ட வெளிநாட்டு நிறுவனங்களே இந்தியச் சந்தையை ஆண்டு வந்தன.

கிட்டத்தட்ட 1952ம் வருட காலத்தில் மம்மன் மாப்பிள்ளை ஒரு விஷயத்தைக் கவனித்தார். அவரது உறவினர் ஒருவர் டயர் Retreading தொழில் செய்து வந்தார். அது பழைய தேய்ந்துபோன டயர்கள் மேற்புறத்தில் Tread Rubber எனும் நீண்ட ரப்பர் பட்டையை ஒட்டி பழைய டயரை குறைந்த செலவில் புது டயர் போல மாற்றித்தரும் வேலை. இந்த ட்ரெட் ரப்பர் முழுவதையும், அவர் பெரும் விலை கொடுத்து வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்வதையும், அதில் பெரிய டயர் கம்பெனிகள் ஆர்வம் செலுத்தாதையும் கண்ட அவர், "இந்த டிரெட் ரப்பரை ஏன் நாம் இந்தியாவில் தயாரிக்கக் கூடாது?" என்று யோசித்தார். துணிச்சலுடன் தனது பலூன், பொம்மைத் தொழில்களில் இருந்து கிடைத்த மொத்த சேமிப்பையும் இதில் முதலீடு செய்தார்.
மம்மனின் இந்தியத் தயாரிப்பு, வெளிநாட்டுத் தயாரிப்புகளை விடத் தரமாகவும், விலை குறைவாகவும் இருக்க, அடுத்த நான்கே ஆண்டுகளில் (1956), Dunlop, Firestone போன்ற ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் டிரெட் ரப்பர் சந்தையில் 50% பங்குகளை MRF நிறுவனம் கைப்பற்றியது.
ட்ரெட் ரப்பரில் வெளிநாட்டு நிறுவனங்களை வீழ்த்திய மம்மன், அடுத்ததாக முழுமையான டயர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மூலதனத்திற்கு கையில் பணமில்லாமல் 8 ஆண்டுகள் போராடிய போது, பிறரிடம் திரட்டிய மூலதனத்தைக் கொண்டு ஒரு கம்பெனியை ஆரம்பித்த அதே திட்டத்தை ஒரு முழு டயர் நிறுவனத்தையே உருவாக்க MRF கம்பெனியை பொதுத்துறை நிறுவனமாக (Public Limited Company) மாற்றினார்.
1961-இல் அமெரிக்காவின் 'மேன்ஸ்ஃபீல்டு டயர்' நிறுவனத்துடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்து, MRF க்க தனது முதல் டயரைத் தயாரித்தது. 1967-இல் டயர் தொழில்நுட்பத்தின் தாயகமான அமெரிக்காவிற்கே டயர்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.
டயர்களைத் தாண்டி, இன்று MRF நிறுவனம் தொழில்துறைக்கான கன்வேயர் பெல்ட்டுகள், பெயிண்ட்கள் மற்றும் 'Funskool' பிராண்ட் மூலமாகப் பொம்மைகளையும் தயாரித்து வருகிறது. விளையாட்டுத் துறையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் கிரிக்கெட் மட்டைகளில் 'MRF' லோகோவை ஒளிரச் செய்து, தன் பிராண்டை உலகறியச் செய்த மம்மனின் அசாத்திய உழைப்பிற்கு, பிற்பாடு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
அன்று சென்னைத் தெருக்களில் நாலணாவிற்கு பலூன் விற்ற ஒரு கம்பெனியின் ஒரு ஷேர் இன்று 1,63,600 ரூபாய் வரை போயிருக்கிறது என்றால் அந்த வளர்ச்சியின் பிரம்மாண்டத்தை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
"விதி உன்னை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்தட்டும்... ஆனால் உனது உழைப்பும், சரியான நேரத்துத் துணிச்சலும் மட்டுமே உனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கும்!" என்கிறார் மம்மன் மாப்பிள்ளை.
"உங்களிடம் மூலதனம் இல்லை என்பது தோல்விக்குக் காரணம் அல்ல; உங்களிடம் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இல்லை என்பதே தோல்விக்குக் காரணம்..." என்று சிரிப்பார் மம்மன் மாப்பிள்ளை. அவர் கதை நமக்கு உணர்த்துவதும் அதையேதான்.
😍🔥💪
#MinimeensSuccessStories
#Motivation #BusinessLessons
No comments:
Post a Comment